Published : 13 May 2018 02:28 PM
Last Updated : 13 May 2018 02:28 PM

முதலில் தோனி, இப்போது கோலி: பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி ரசிகர் உற்சாகம்

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியின்போது, பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி மைதானத்தில் நுழைந்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியை பார்க்க வந்த ரசிகரின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் கிரிக்கெட் மதமாகவும், வீரர்கள் கடவுளாகவும் ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்கள். அது கபில்தேவ், சச்சின் காலம் முதல் தற்போது தோனி, விராட் கோலி விளையாடும் காலம் வரை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

சதம் அடித்தால் கொண்டாடுவதும், கோப்பையை வென்றால் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுமாக கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் ஆதர்ஷ வீரர்களை கொண்டாடி வருகின்றனர்.

அதேசமயம், மோசமாக விளையாடும் போது அவர்களை விமர்சிக்கவும், கண்டிக்கவும் தவறுவதில்லை.

அதிலும் சமீபகாலமாக தோனி, கோலி ஆகிய இரு வீரர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு எழுந்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் 2 ஆண்டுகளுக்குபின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குவதால், தோனியை மஞ்சள் நிறை ஆடையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றனர்.

மைதானத்தில் இறங்கி தோனியின் காலைத் தொட்டு ஆசிபெற்று ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அவருடன் செல்ஃபியும் எடுத்து சென்றனர்.

இதேபோன்ற சம்பவம் டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் போதும் நிகழ்ந்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையிலான லீக் ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.

இந்த போட்டிலி் முதலில் பேட் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 40 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் 37 பந்துகளில் 72 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வழக்கத்தைக் காட்டிலும் நேற்றைய போட்டியில் விராட் கோலியின் பேட்டிங்கில் ஆக்ரோஷமும், ஆவேசமும் அதிகமாகக் காணப்பட்டது. இதனால், 26 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். கோலிக்கு ஆதரவாக அரங்கிலும், ரசிகர்கள் கரகோஷம் எழுப்பியவாறு இருந்தனர். ஏராளமானோர் கோலியின் ஜெர்சி எண் பதித்த ஆடையை அணிந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், போட்டியின் போது பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி மைதானத்துக்குள் 29 வயது மதிக்கத்தக்க ரசிகர் ஒருவர் புகுந்தார். அவரை விரட்டிப் பிடிக்க பாதுகாவலர்கள் முயன்றும் அவர் மின்னல் வேகத்தில் விராட் கோலியை அடைந்தார்.

ஏதோ செய்யப்போகிறார் என மிரட்சியில் இருந்த விராட் கோலியின் காலில் சாஷ்டாங்கமாக அந்த ரசிகர் விழுந்தார். இதைப் பார்த்த கோலி சில வினாடிகள் திகைத்துப்போனார், அந்த ரசிகரின் தோளைப்பிடித்து எழுந்திருங்கள் என்று கூறி, எழுப்பிவிட்டார்.

அந்த ரசிகரிடம் சிலவினாடிகள் பேசிய கோலி, அவருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். அந்த ரசிகர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செல்பி எடுக்க முயன்றபோது அங்கு வந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து இழுத்துச் சென்றனர். அந்த ரசிகரை ஒன்றும் செய்ய வேண்டாம், விட்டுவிடுங்கள் என்று சிரித்துக்கொண்டே கோலி கூறி மீண்டும் பேட்டிங்கைத் தொடர்ந்தார். கோலியை கடவுளாக காலில் விழுந்து கொண்டாடும் இந்த சம்பவத்தை அருகே நின்று டிவில்லியர்ஸ் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x