Published : 13 May 2018 09:57 AM
Last Updated : 13 May 2018 09:57 AM

வாழ்வா, சாவா போராட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன்: மும்பை இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி தொடரின் முதற்கட்ட பகுதியில் அடுத்தடுத்த தோல்விகளால் கடும் நெருக்கடியை சந்தித்த போதிலும் பிற்பகுதியில் போராடி வெற்றிகளை குவித்து வருகிறது. கடைசியாக மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. 11 ஆட்டங்களில் விளையாடிய உள்ள அந்த அணி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடம் வகிக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

அதேவேளையில் ராஜஸ்தான் அணியும் 11 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றில் கால்பதிப்பதற்காக போராடி வருகிறது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா, சாவா என்ற போராட்டமாகவே இருக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் தோல்வியடையும் அணி ஏறக்குயை பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்படக்கூடும். மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் சிறந்த பார்மில் உள்ளார். இந்த சீசனில் 435 ரன்கள் குவித்துள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இஷான் கிஷன் அதிரடி பார்முக்கு திரும்பியிருப்பது பேட்டிங்கை வலுப்படுத்தி உள்ளது.

எவின் லீவிஸ், ரோஹித் சர்மா, கிருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, ஜேபி டுமினி ஆகியோரும் மட்டையை சுழற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்து வீச்சில் மயங்க் மார்க்கண்டே பலம் சேர்த்து வருகிறார். இதேபோல் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, மெக்லீனகன், பென் கட்டிங், கிருணல் பாண்டியா ஆகியோரும் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 95 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லர் மீண்டும் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். கிருஷ்ணப்பா கவுதமும் நம்பிக்கை அளிப்பவராக உள்ளார். ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் பேட்டிங் வலுப்பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x