Last Updated : 12 May, 2018 09:48 PM

 

Published : 12 May 2018 09:48 PM
Last Updated : 12 May 2018 09:48 PM

நரேன், தினேஷ் காட்டடியில் மிரண்ட அஸ்வின் அணி: கொல்கத்தா சூப்பர் வெற்றி

சுனில் நரேன், தினேஷ் கார்த்திக்கின் காட்டடி பேட்டிங்கால், இந்தூரில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்ளிட்ட 36 பந்துகளில் 76 ரன்கள் விளாசிய நரேனின் பேட்டிங்கும், 23 பந்துகளில் முதல் அரை சதம் அடித்த தினேஷ் கார்த்திக்கின் காட்டடியும் கொல்கத்தா அணி இமாலாய ஸ்கோர் குவிக்க முக்கியக் காரணமாகும். பந்துவீச்சிலும் கேஎல். ராகுல் என்ற முக்கிய விக்கெட்டை வீழ்த்திய சுனில் நரேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நரேன் மிகவும் ஆபத்தானவர் எனத் தெரிந்திருந்தும் அவரை தொடக்கத்திலேயே ஆட்டமிழக்காமல் வைத்திருந்த பஞ்சாப் அணி அதற்கான தண்டனையை வாங்கிக்கட்டிக் கொண்டது. ஐபிஎல் போட்டிகளில் 4-வது மிகப்பெரிய ஸ்கோரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்தப் போட்டியில் எட்டியது குறிப்பிடத்தகுந்த சாதனையாகும்.

இந்தப் போட்டியின் மூலம் ப்ளேஆப் சுற்றுக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கடந்த போட்டியில் மும்பை அணியிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த கொல்கத்தா அணி விரைவாக மீண்டும் வந்து பிரமாண்ட ஸ்கோரை அடித்து, வெற்றி பெற்றது பாராட்டுக்குரியதாகும்.

அதேசமயம், மிகச்சிறிய மைதானம், எந்த பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்காத பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து அஸ்வின் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். அதுமட்டுமல்லாமல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் புயல் விரைவாக ஆட்டமிழந்ததும் பஞ்சாப் அணியை பாதாளத்தில் தள்ளிவிட்டது. அதற்கு கெயிலின் கடந்த கால வரலாறும் முக்கியக் காரணம்

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள், 6 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள், 5 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற அஸ்வின் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். கிறிஸ் லின், நரேன் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். சர்மா வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார் லின். ஆனால், அடுத்த இரு ஓவர்களுக்கு நிதானமாக இருவரும் பேட் செய்தனர்.

அஸ்வின் வீசிய 4-வது ஓவரில் இருந்து நரேன் வானவேடிக்கை நிகழ்த்தத் தொடங்கினார். அஸ்வின் ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார் நரேன். மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் வீசிய ஸ்ரன் 5-வது ஓவரில் அடுத்தடுத்து நரேன் 2 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார்.

6-வது ஓவரை ஆன்ட்ரூ டை வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் அடித்த கிறிஸ் லின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். லின் 27 ரன்கள் சேர்த்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு நல்ல அடித்தளம் அமைத்து 53 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து உத்தப்பா களமிறங்கினார். நரேன் அதிரடி ஆட்டம் ஆட உத்தப்பா ஒத்துழைத்தார். பவர்ப்ளே ஓவரில் கொல்கத்தா 59 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் வீசிய 8-வது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் நரேன் விளாசி, 26 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அஸ்வின் வீசிய 10-வது ஓவரில் உத்தப்பா தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர்,பவுண்டரி அடித்து ரன் ரேட்டை உயர்த்தினார்.

ஸ்ரன் வீசிய 11-வது ஓவரை நரேன் பொளந்து கட்டினார். இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என மொத்தம் 17 ரன்கள் சேர்த்தனர். டை வீசிய 12-வது ஓவரில் பவுண்டரி அடித்த நரேன், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 36 பந்துகளில் 75 ரன் சேர்த்து நரேன் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர், 9பவுண்டரி அடங்கும்) ஆன்ட்ரூ டை வீசிய அதேஓவரில் உத்தப்பாவும் 24ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஆன்ட்ரூ ரஸல், தினேஷ் கார்த்திக் சேர்ந்தனர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் பந்துவீச்சை பொளந்து கட்டினார்கள். ஒவருக்கு பவுண்டரி, சிக்ஸர் எனப் பந்து பறந்தது. படேல் வீசிய 15-வது ஓவரில் ரஸல் 2 சிக்ஸர் விளாச, கார்த்திக் பவுண்டரி அடித்தார்.

முஜிப் வீசிய 16-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியும் விளாச, ரஸல் தனது பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார்.

ஆன்ட்ரூ டை வீசிய 17-வது ஓவரில் கார்த்திக் ஒரு சிக்ஸரும், ரஸல் பவுண்டரியும் விளாசினார்கள். கொல்கத்தா அணி 200 ரன்களை வேகமாக எட்டியது. ஐபிஎல் போட்டியில் 200 ரன்களே மிகவேகமாக எட்டிய 3-வது அணியாகும்.

ஆன்ட்ரூ டை வீசிய அதே ஓவரில் 14 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் ரஸல் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த ராணா ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்த நிலையில் சர்மாவிடம் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து சுப்மான் கில் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் அரை சதம் அடித்து ஐபிஎல் போட்டியில் முதலாவது அரை சதத்தை எட்டினார். ஸ்ரன் வீசிய கடைசி ஓவரில் 23 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய கில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து அமர்க்களப்படுத்தினார். சீர்லெஸ் 6 ரன்களிலும், கில் 16 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் அணி தரப்பில் ஆன்ட்ரூ டை அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2008-ம் ஆண்டு மொஹாலியில் பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 240 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் 11 ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் சேர்க்கப்பட்ட 4-வது அதிபட்ச ஸ்கோர் இந்த போட்டியில் கொல்கத்தா அணி சேர்த்த 245 ரன்கள் இதுவாகும்.

246 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்கை துரத்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கெயில் அமைதியாக, கே.எல் ராகுல் நல்ல தொடக்கத்தை அளித்தார். ராகுல் வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடக்கத்தில் இருந்தே வெளிப்படுத்தினார்.

நரேன் வீசிய முதல் ஓவரில் 2 சிக்ஸர்களை அடித்து ராகுல் பிரமாதப்படுத்தினார். சீர்லஸ் வீசிய 3-வது ஓவரில் கெயில், ராகுல் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். ரஸல் வீசிய 4-வது ஓவரில் கெயில் அடித்த கேட்ச் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் தவறவிட்டார்.

200 ரன்கள் இலக்கை விரட்டிச் செல்லும்போதெல்லாம் கெயில் சொதப்புவது கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது. 2 முறை டக் அவுட்டிலும், ஒருமுறை 10 ரன்கள், 32 ரன்கள், 76 ரன்கள் என கெயில் சொதப்பியுள்ளார். அது இந்த முறையும் தொடர்ந்தது.

ரஸல் வீசிய 6-வது ஓவரில் கெயில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த அகர்வால் டக்அவுட்டில் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து கருண் நாயர் களமிறங்கினார்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும் ராகுல் தனக்கான அதிரடியை கைவிடாமல் ஒவருக்கு ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். 22 பந்துகளில் ராகுல் அரைசதம் அடித்தார். ரஸல் வீசிய 8-வது ஓவரில் கருண் நாயர் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நரேன் வீசிய 9-வது ஓவரில் இரு சிக்ஸர்கள் விளாசிய ராகுல் 23 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்த ஆடவில்லை, பிஞ்ச், அஸ்வின் கூட்டணியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. குல்தீப் வீசிய 14-வது ஓவரில் பிஞ்ச் அடுத்தடுத்து 2 சிக்ஸர் அடித்து 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 19 ரன்களிலும், டை 14 ரன்களிலும் வெளியேறினார். அதிரடியாக ஆடிய அஸ்வின் 22 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஸ்ரன் ஒரு ரன்னிலும், சர்மா 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் சேர்த்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா தரப்பில் ரஸல் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x