Published : 12 May 2018 04:43 PM
Last Updated : 12 May 2018 04:43 PM

‘மாறுவேடத்தில் ரோஜா படம் பார்த்த சச்சினுக்கு நேர்ந்த அனுபவம்: 24 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

 

மாறுவேடத்தில் 'ரோஜா' படம் பார்த்த போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் பொதுவாழ்க்கை மிகவும் கடினமானது. எங்கும் சுதந்திரமாக செல்லும்போதும், குடும்பத்தினருடன் பொது இடங்களுக்குச் சென்றாலும், ரசிகர்கள் மொய்த்துவிடுவார்கள். இதன் காரணமாகவே அவர் தனக்கு பிடித்தமான விஷயங்களை மிகவும் ரகசியமாக செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

ஹோட்டல், கடற்கரை, துணிக்கடை, திரையரங்குகள் என எங்கு சென்றாலும் சச்சினைக் கண்டுகொண்டால் ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும். ரசிகர்கள் சச்சின் மீது வைத்திருக்கம் பாசம், அன்பு ஆகியவை அவரால் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

இந்நிலையில், கவுரவ் கபூர் தொகுத்து வழக்கும் “பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” எனும் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று தனது கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.   இதில் தான் சினிமா பார்த்த அனுபவம் குறித்து நகைச்சுவையுடன் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக சச்சின் கூறியுள்ளதாவது:

''எனக்கு நீண்டநாட்களாகவே சினிமா தியேட்டரில் சென்று சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கிரிக்கெட் காரணமாக என்னால் திரையங்குகளுக்கு செல்ல முடியவில்லை. 1994-ம் ஆண்டு, எனக்கும், அஞ்சலிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. என் மனைவி அஞ்சலியை அழைத்துக் கொண்டு சினிமா பார்க்க தியேட்டருக்குச் செல்லலாம் என்றால் ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள் என அச்சப்பட்டேன்.

ஆனாலும், அஞ்சலியும், அவரின் தந்தையும், என் நண்பர்கள் சிலரும் ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு சினிமா பாரக்க் ஏற்பாடு செய்தனர். அதற்கு ஏற்றார்போல் முகத்தில் தாடி, தலையில் தொப்பி, கண்ணில் கண்ணாடி அணிந்து மணிரத்னம் சாரின் ’ரோஜா’ படம் பார்க்க வோர்லியில் உள்ள திரையரங்குக்குச் சென்றோம். இடைவேளை வரை படம் இனிமையாகச் சென்றது.

இடைவேளையின் போது, நானும் எனது நண்பர்களும் வெளியே சென்றுவிட்டு வரலாம் என்று சென்றோம். அப்போது திடீரென எனது கண்ணாடி கீழே விழுந்துவிட்டது, அதை எடுத்தபோது, அதில் இருந்த ஒரு லென்ஸ் மட்டும் உடைந்துவிட்டது.

உடைந்த கண்ணாடியை தலையில் மாட்டிக்கொண்டு மீண்டும் தியேட்டருக்கு வந்தேன். அப்போது, ஒரு ரசிகர் மட்டும் என்னை அடையாளம் பார்த்துக்கொண்டு மற்றவர்களுக்கு சொல்லத் தொடங்கினார்.

1994-ம் ஆண்டில் வாட்ஸ்அப், செல்போன், பேஜர் இல்லாத காலம் என்பதால், அந்த ரசிகரால் அனைவரிடமும் சொல்ல முடியவில்லை. நான் தொடர்ந்து அங்கிருந்தால், என்னை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துவிடுவார்கள் என அச்சமடைந்தேன்.

உடனே, எனது மனைவி அஞ்சலி, மாமனார், நண்பர்களை அழைத்துக்கொண்டு 'ரோஜா' படத்தின் பிற்பாதியைப் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறினேன். அதன்பின் நீண்ட காலமாக 'ரோஜா' படத்தை முழுமையாகப் பார்க்க முடியாமல், அதன்பின் பின்பாதியை பார்த்து முடித்தேன்.’’

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தனது அனுபவத்தைத் தெரிவித்தார்.

 

இதைப் படிக்க மறந்துடாதீங்க...

 பட்லர் ‘கிளாஸ் பிளேயர்’: பிளெமிங் புகழாரம்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x