Last Updated : 12 May, 2018 09:51 AM

 

Published : 12 May 2018 09:51 AM
Last Updated : 12 May 2018 09:51 AM

சிஎஸ்கேவின் வெற்றிக்கு “செக்” வைத்த பட்லர்: “கூல் கேப்டன்” “ஹாட்”

ஜோஸ்பட்லரின் ஆர்ப்பரிப்பான பேட்டிங், கவுதமின் கடைசி நேர அதிரடி ஆகியவற்றால் ஜெய்பூரில் நேற்று நடந்த 43-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

“கூல் கேப்டன்” என்று கிரிக்கெட் உலகில் பெயரெடுத்த தோனியை சிஎஸ்கே வீரர்கள் “ஹாட் கேப்டனாக” மாற்றிவிட்டனர். கடைசி 3 ஓவர்களில் பீல்டிங்கை கோட்டை விட்டதும், கேட்ச்களை தவறவிட்டதும், ரன்களை வாரிக்கொடுத்ததும் தோனியை கடுப்பேற்றிவிட்டது. பிறகென்ன தனது வழக்கமான “டிரேட்மார்க்கை” காப்பாற்ற முகத்தை எப்போதும் போல கூலாக மாற்றிக்கொண்டு அமைதியாக இருப்பதுபோல் தோனி கீப்பிங் பணியில் ஈடுபட்டார்.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம், பேட்டிங்குக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஒத்துழைக்காது என்பதை அறிந்தும் தோனி டாஸில் வென்று முதலில் பேட் செய்தது ஏன் எனத் தெரியவில்லை,. சிஎஸ்கே அணியில் மெச்சும்படியான சுழற்பந்துவீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் இல்லாத நிலையில், தோனி முதலில் பேட் செய்தது ரசிகர்கள் மத்தியில் வியப்புக்குள்ளாக்கியது. ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகியோரை சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் சேர்த்த காலம் மலையேறிவிட்ட நிலையில் இம்ரான் தாஹிருக்காவது வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

பேட்டிங்கிலும் சிஎஸ்கே வீரர்கள் சொதப்பிவிட்டனர். அதிரடியான தொடக்கத்தை அளித்த ராயுடு, தரமான வேகப்பந்துவீச்சை சந்தித்து விளையாடமாட்டார் என்ற விமர்சனம் எழந்து வந்தது. அதுபோல், ஜோப்ரா ஆர்ச்சர் 148 கி.மீ வேகத்தில் வீசிய பந்தில் போல்டாகினார். ராயுடு மீதான விமர்சனத்தை எல்லாம் அது நிஜமாக்கியது. மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார், ஆனால் ஆர்ச்சரின் வேகம் அவரது ஷாட்டை துல்லியமாக ஆட முடியாமல் செய்தது. பவுண்டரிகள், சிக்ஸர்கள அடிக்கவும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் திணறியது ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சுக்கு கிடைத்த பாராட்டாகும்.

கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வீரர் வாட்ஸன் தனக்கு நேராக வந்த பந்தை கேட்ச்பிடிக்காமல் தவறவிட்டது, தோனி ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டது, பட்லர் தூக்கி அடித்த பந்தை யாருமே பிடிக்காமல் வேடிக்கை பார்த்தது ஆகியவை எல்லாம் “உஷ் கண்டுகாதீங்க” தருணத்தை நினைவு படுத்துகிறது. அதிலும், பந்தை டைவ் அடித்து பிடிக்க முடியாமல் தோனி பக்கத்திலேயே பாய்ந்து விழுந்துவிட்டது அவருக்கு வயது முதிர்ச்சி அடைந்துவிட்டது என்பதைத்தான் உணர்த்துகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸை எளிதாக வீழ்த்திவிடும் சிஎஸ்கே என்று நினைத்தவர்களுக்கு நேற்றைய ஆட்டம் ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

அதேசயம், ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இறுதிவரை வெற்றிக்காக போராடியது பாராட்டத்தக்கது. எந்தவிதமான பந்துவீச்சையும் அனாசயமாக சந்தித்து ரன்களைக் குவித்தார். ஜோஸ் பட்லர் ஃபார்முக்கு திரும்புவது, இந்திய அணிக்குத்தான் ஆபத்தாகும். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதே ஜோஸ் பட்லர் நின்று விளையாடினால், நமது பாடு திண்டாட்டமே. சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பட்லர், தொடர்ந்து 4-வது முறையாக அரைசதம் அடித்தார்.

கடைசி நேரத்தில் ஸ்டூவர்ட் பின்னி, கவுதம் ஆகியோர் அடித்த சிக்ஸர்கள், பட்லரின் பணியை சிறிது எளிதாக்கியது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பாதி பந்துவீச்சாளர்கள் காரணம் என்றால், மீதி பட்லரை மட்டுமே சாரும்.

இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, 7 வெற்றி என மொத்தம் 14 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் விளையாடி 5வெற்றி, 6 தோல்வி என மொத்தம் 10 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது.

டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட் செய்தார். அணியில் இங்கிடி, துருவ் ஆகியோருக்கு பதிலாக பில்லிங்ஸ், கரண் சர்மா சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் அணியில் அங்கித் சர்மா, பிரசாந்த் சோப்ரா வாய்ப்புப் பெற்றனர்.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றிஎனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில், இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வாட்ஸன், ராயுடு களமிறங்கினார்கள். அதிரடியாக 2 பவுண்டரிகள் சாத்திய ராயுடு, விரைவாக ஆட்டமிழந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் 148 கி.மீ. வேகத்தில் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் 3-வது ஓவரில் 12 ரன்களில் ராயுடு ஆட்டமிழந்தார். ராயுடு திடீரென வெளியேறியது சிஎஸ்கேவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

அடுத்துவந்த ரெய்னா, வாட்ஸனுடன் இணைந்தார். அவ்வப்போது சில பவுண்டரிகளை ரெய்னா அடித்ததால், ரன்ரேட் வேகமெடுத்தது. இதனால் பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே அணி 55 ரன்களைத் தொட்டது. அதன்பின் இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். சோதி வீசிய 9-வது ஓவரில் ரெய்னாவும், வாட்ஸனும் ஆளுக்கொரு சிக்ஸர் விளாசினார்கள். மீண்டும் ஆர்ச்சர் பந்துவீச அழைக்கப்பட்டார்.

ஆர்ச்சர் வீசிய 12-வது ஓவரில் வாட்ஸன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 86 ரன்கள் சேர்த்தனர். அடுத்து தோனி வந்தார். நிதானமாக பேட் செய்த ரெய்னா 30 பந்துகளில் டி20 போட்டிகளில் தனது 45-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

அடுத்து சிறிது நேரமே களத்தில் நீடித்த ரெய்னா, 52 ரன்கள் சேர்த்த நிலையில், சோதியின் கூக்ளி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 105 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்த சிஎஸ்கே, திடீரென 119 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து திணறியது. அடுத்து வந்த பில்லிங்ஸ், தோனியுடன் இணைந்தார். இருவரும் பவுண்டரி கூட அடிக்கமுடியாமல், சிங்கிள் ரன்களாகச் சேர்த்தனர். தோனி முதல் பவுண்டரியை 17வது பந்தில்தான் அடித்தார், அது சிக்ஸராக அமைந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு இந்த போட்டியில் மிகச்சிறப்பாக இருந்தது. 14-வது ஓவர் முதல் 19-வது ஓவர் வரை சிஎஸ்கே வீரர்கள் மொத்தம் 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ், உனட்கத், ஆர்ச்சர் ஆகியோர் துல்லியமான பந்துவீச்சிலும், யார்கர்லும் கடும் நெருக்கடி அளித்தனர்.

கடைசி நேரத்தில் சிஎஸ்கே அணியிடம் 7 விக்கெட்டுகள் இருந்தும், தோனியும், பில்லிங்ஸும் அதிரடியாக ஏன் பேட் செய்யவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. கடைசி 6 ஓவர்களில் மொத்தம் 45 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். டி20 போட்டியில் முதல் 6 ஓவர்களும், கடைசி 5 ஓவர்களும் ரன் சேர்க்க முக்கியமான ஓவர்களாகும் அதில் சிஎஸ்கே நேற்று கோட்டை விட்டது. கடைசி ஓவரில் பில்லிங்ஸ் 27 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. தோனி 33 ரன்களுடனும், பிராவோ ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கடந்த சில போட்டிகளாக பிராவோவுக்கு போதுமான வாய்ப்பு அளிக்காமல் தவிர்க்கப்படுவதும் உஷ்கண்டுகாதீங்க கேள்வியை எழுப்புகிறது.ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும், சோதி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. ஜோஸ் பட்லர் டாப் கியரில் ஆட்டத்தை தொடங்கினார். வில்லி வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் விளாசினார் பட்லர்., ஹர்பஜன் வீசிய 2-வது ஓவரையும் பொளந்து கட்டிய பட்லர் 3 பவுண்டரிகள் அடித்தார். ஹர்பஜன் வீசிய 4-வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து ஃபார்முக்கு வந்த ஸ்டோக்ஸ், 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரஹானே இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் ரஹானேயின் மோசமான பேட்டிங் தொடர்ந்துவருவது கவலைக்குரியதாகும். ரஹானே 4ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா வீசிய 5-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து சாம்ஸன், பட்லருடன் இணைந்தார்.

நிதானமாக ஆடிய பட்லர் 26-பந்துகளில் ஐபிஎல் போட்டியில் தனது தொடர் 4-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 11-வது ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 4 அரைசதம் விராட்கோலி, சேவாக் மட்டுமே அடித்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது ஜோஸ்பட்லரும் இணைந்தார்.

 

நிதானமாக பேட் செய்து வந்த சாம்ஸன் 21ரன்கள் சேர்த்தநிலையில் பிராவோ ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய புதுமுக வீரர் சோப்ரா 2 பவுண்டரிகள் அடித்த நிலையில், தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும், மனம் தளறாமல் பட்லர் பேட் செய்துவந்தார்.

ஸ்டூவர்ட் பின்னி களமிறங்கி, பட்லருக்கு ஒத்துழைப்பு அளித்தார். பின்னி தனது பங்குக்கு ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை அதிகப்படுத்தினார். பிராவோ வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடித்த பின்னி 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து அதிரடி வீரர் கவுதம் களமிறங்கினார். கடைசி 14 பந்துகளுக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. பிராவோ வீசிய அந்த ஓவரில் பட்லர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தோனி தவறவிட்டார். இந்த கேட்சை தோனி பிடித்திருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறி இருக்கும். வில்லி வீசிய 19-வது ஓவரில் 2 அதிரடி சிக்ஸர்கள் அடித்து பரபரப்பை அதிகப்படுத்தினார் கவுதம். ஆனால் அந்த ஓவரின் கடைசிப்பந்தில் கவுதம் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட பணியை கவுதம் சிறப்பாகச் செய்துவிட்டு வெளியேறினார்.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றி எளிதாக சிஎஸ்கே எடுத்துச் சென்று இருக்கலாம். அனுபவம் வாய்ந்த பிராவோதான் பந்துவீசினார். முதல்பந்தில் ரன் இல்லை, 2-வது,3-வது பந்தில் பட்லர் தலா 2 ரன்கள் சேர்த்தார். 4-வது பந்தில் எதிர்பாராத சிக்ஸரை பட்லர் அடிக்க அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. தோனியின் முகம் கோபத்தால் கொதித்தது. 5-வது பந்தில் 2 ரன்கள் பட்லர் ஓட ராஜஸ்தான் வெற்றி உறுதியானது.

19.5 ஓவர்களில் 6 விக்கெட்இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 60 பந்துகளைச் சந்தித்த பட்லர் 95 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.

சிஎஸ்கே தரப்பில் 7 பேர் பந்துவீசினார்கள். அதில் பிராவோ, தாக்கூர், ஜடேஜா, வில்லி, ஹர்பஜன் தலா ஒருவிக்கெட் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x