Published : 11 May 2018 04:38 PM
Last Updated : 11 May 2018 04:38 PM

ஐபிஎல்-ல் தொடரும் மோசடித் தீர்ப்புகள்: டாம் கரன் வீசியது நோ-பாலா? சர்ச்சையில் நடுவர்கள்

அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர் செய்த வெளிப்படையான தவறு ஒன்றினால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதக நிலை ஏற்பட்டது.

அன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பேட் செய்த போது இன்னிங்சின் 16வது ஓவரை இங்கிலாந்தின் டாம் கரன் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை நடுவர் கே.என்.அனந்தபத்மநாபன் நோ-பால் என்று அறிவித்தார், அதாவது டாம் கரனின் முன் பாதம் கிரீஸைக் கடந்து சென்றது என்று அவர் முடிவு கட்டினார்.

இதனால் கூடுதல் ரன்னும், ஃப்ரீ ஹிட்டும் மும்பை இந்தியன்ஸுக்குக் கிடைத்தது. ஆனால் ரீப்ளேயில் டாம் கரனின் பாதத்தில் பாதி கிரீசிற்குள் இருந்தது தெரியவந்தது.

ரீப்ளேயைப் பார்த்த கொல்கத்தா ஊழியர் ஒருவர் கேம்ரூன் டெல்போர்ட்டை அனுப்பித்து லாங் ஆனில் நின்று கொண்டிருந்த ரிங்கு சிங்கிடம் அது நோ-பால் இல்லை என்று தெரிவித்தார், இதனையடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக், டாம் கரன் இருவரும் நடுவரிடம் பேசினர், ஆனால் நடுவர் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை அதிகாரபூர்வ ரீப்ளேயும் கேட்கவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம், இதனை “நோ-பால், நீங்கள் சீரியஸாகத்தான் கூறுகிறீர்களா? என்று ஸ்மைலியுடன் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தது.

முன்னதாக கிங்ஸ் லெவன் பவுலர் ஆண்ட்ரூ டை ஓவரில் களநடுவரின் கணக்குக் குழப்பத்தினால் 7 பந்துகளை ஒரு ஓவரில் வீசுவது நடந்தது. சிஎஸ்கேவுக்கு எதிராக முக்கியக் கட்டத்தில் கேன் வில்லியம்சன் இடுப்புக்கு மேல் சென்ற புல்டாஸுக்கு நோ-பால் கொடுக்காமல் அந்த போட்டி சிஎஸ்கே வசமானது.

இதோடு இல்லாமல் தவறான எல்.பி.தீர்ப்புகள் (அவுட் தீர்ப்பு, நாட் அவுட் தீர்ப்பு இரண்டுமே), விக்கெட் கீப்பர் கேட்ச் கொடுக்கப்பட்டது, மறுக்கப்பட்டது உள்ளிட்ட தவறுகள். மேலும் சில வைடுகள் வெளிப்படையாக வைடுகள் அல்ல என்பதும் பார்ப்பவர்களுக்கு வெட்ட வெளிச்சமான ஒன்று.

இதனையடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் நடுவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறை சரியானதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐ-யில் நடுவர்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர், இதில் 12 நடுவர்கள் மேல் தளத்தில் உள்ளனர். இவர்களுக்கு பிசிசிஐ போட்டிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.20,000 சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களில் அனைவரும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்குத் தேர்வு செய்யப்படுவதில்லை.

கீழ்நிலையில் உள்ள, நாளொன்றுக்கு ரூ.15,000 பெறும் நடுவர்கள் ஐபிஎல்-ல் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஏற்கெனவே பிசிசிஐ நடுவர்களின் பணித்திறன் மேம்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக எழுந்த செய்திகளைப் பொய்யாக்கும் வண்ணம் மீண்டும் மீண்டும் நடுவர் தீர்ப்புகள் சில அணிகளுக்கு, சில வீரர்களுக்கு ஆதரவாகச் சென்று கொண்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x