Last Updated : 11 May, 2018 03:55 PM

 

Published : 11 May 2018 03:55 PM
Last Updated : 11 May 2018 03:55 PM

‘ரிஷப் நீங்கள்தான் எதிர்காலம், உங்களுக்கான நேரம் வரும் காத்திருங்கள்’: கங்குலி புகழாரம்

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக பேட் செய்து ரன்கள் குவித்த டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் ரிஷாபா பந்துக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 187 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து சேஸிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டெல்லி வீரரும், இடது கை பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் 63 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் அதிரடியில் 7 சிக்ஸர்கள், 15 பவுண்டிரிகள் அடங்கும். இந்த சீசனில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் எனும் பெருமையையும், டி20 வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ரன்களாகும்.

கொல்கத்தாவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெல்லி வீரர் ரிஷப் பந்த் பேட்டிங் குறித்து பெருமையாகப் பேசி புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறியதாவது:

63 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்த இளம் வீரர் ரிஷாபாவின் பேட்டிங் பாராட்டுக்குரியது. இதுபோன்று விளையாட அவரால்தான் முடியும். இந்திய அணியில் ரிஷாபாவுக்கு உரிய இடம் கிடைக்கும். அதுவரை அவர் காத்திருக்க வேண்டும். இந்திய அணியின் எதிர்காலமாக ரிஷாபா திகழப்போகிறார்.

ரிஷப் பந்த் அடித்த அதிரடி ஆட்டம் எனக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியை நினைவு படுத்தியது. அந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் பிரண்டன் மெக்கலம் 73 பந்துகளில் 158 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அப்போது மெக்கலத்துடன் ஒருமுனையில் நான் பேட்டிங் செய்தேன். அவரின் பேட்டிங்கை அருகே இருந்து ரசித்திருக்கிறேன். அவரைப் போல ரிஷப் பந்தின் பேட்டிங்கும் இருந்தது.

ஆனால், அயர்லாந்து, இங்கிலாந்து அணியுடனான டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ரிஷப் பந்த் போல மற்றொரு வீரராக இஷான் கிஷான் இருக்கிறார். 21 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த கிஷானுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்த இரு இளம் வீரர்களும் பொறுமை காக்க வேண்டும். அவர்கள் இன்னும் பேட்டிங்கில் முதிர்ச்சி அடைய அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டும். இருவரும் இந்தியாவுக்காக விளையாடும் காலம் விரைவில் வரும்.

அதேசமயம், வீரர்களுக்கு நிலைத்தன்மையுடன் கூடிய பேட்டிங் மிகவும் அவசியமாகும். இருவரின் சிறந்த பேட்டிங்கும் ஒரு சில போட்டிகளோடு நின்றுவிடக்கூடாது. கொல்கத்தாவில் இஷான் கிஷான் பேட்டிங் செய்த விதத்தை நான் பார்த்தேன்.

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படும் முன் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்துவது அவசியம். எத்தனை முறை இதுபோன்று நிலைத்தன்மையான பேட்டிங்கை வெளிப்படுத்துவது அவசியம். டி20 போட்டி என்பது, வேறுபாடானது, வாய்ப்புகளும் குறைவாக கிடைக்கும்.

இப்போதுள்ள நிலையில் அணியில் எம்எஸ் தோனி என்ற வலிமையான வீரர் இருக்கிறார். அவரின் இடத்தை நிரப்புவது மிகக்கடினம். தோனிக்கு அடுத்த இடத்தில் தினேஷ் கார்த்திக் என்ற சிறந்த வீரர் இருக்கிறார். குறிப்பாக தினேஷ் கார்த்திக்கின் வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தையாராலும் மறக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை தினேஷ் மிகச்சிறந்த வீரர்.

இவ்வாறு கங்குலி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x