Published : 11 May 2018 07:36 AM
Last Updated : 11 May 2018 07:36 AM

வெற்றி நெருக்கடியில் ராஜஸ்தான் ராயல்ஸ்; சென்னை அணியுடன் இன்று பலப்பரீட்சை: தோல்வியடைந்தால் மூட்டை கட்ட வேண்டியதுதான்

ஹாட்ரிக் தோல்விக்குப் பிறகு வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் மோதுகிறது.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் இறுதிக்கட்டத்தை எதிர்நோக்கி உள்ள அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஆட்டங்களில் 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்து வெளியேற்றப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது ராஜஸ்தான். எனினும் அந்த அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு சாத்தியப்படும்.

இந்த சீசனில் 2-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸை சந்திக்கிறது ராஜஸ்தான் அணி. கடந்த 20-ம் தேதி புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விக்கு தனது சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான நம்பிக்கை தகர்ந்துவிடும். அந்த அணி இந்த சீசனில் சொந்த மண்ணில் 5 ஆட்டங்களில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது சற்று சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த சீசனில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் மோசமான செயல்திறன் ஒட்டுமொத்த அணியையும் வெகுவாக காயப்படுத்தி உள்ளது. ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோரிடம் இருந்து சராசரியான செயல்திறனே வெளிப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வலுவான சென்னை அணிக்கு எதிராக வெற்றி காண வேண்டுமானால் இவர்கள் ஒருசேர எழுச்சி காண வேண்டும். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 58 பந்துகளில், 82 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஜாஸ் பட்லரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

அந்த ஆட்டத்தில் 158 ரன்களையே இலக்காக அமைத்த போதிலும் பந்து வீச்சில் கிருஷ்ணப்பா கவுதம், இஷ் சோதி, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினர். இவர்கள் கூட்டாக 11 ஓவர்களை வீசி 58 ரன்களை வழங்கிய நிலையில் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். இந்த கூட்டணி சென்னை அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆட்டங்களில், 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்குள் எளிதாக கால்பதித்துவிடலாம். இரண்டு வருட தடைக்குப் பிறகு திரும்பி உள்ள சென்னை அணி, மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் உச்சகட்ட பார்மில் உள்ளது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி வரும் நிலையில் பந்து வீச்சு இன்னும் கவலை அளிக்கும் விதத்திலேயே உள்ளது. கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை வெறும் 127 ரன்களுக்குள் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் மட்டுப்படுத்தினர்.

ஆடுகளத்தின் சாதகமான அம்சங்களைப் பயன்படுத்தி ஜடேஜாவும் (3/18), ஹர்பஜன் சிங்கும் (2/22) சிறப்பாக பந்து வீசி பெங்களூரு அணியை வீழ்ச்சியடைச் செய்ததில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த செயல் திறனால் நம்பிக்கை பெற்றுள்ள அவர்கள் இன்றைய ஆட்டத்திலும் அதேபோன்று செயல்பட முயற்சிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் தீபக் ஷகார் இல்லாதது அணியின் சமநிலையை வெகுவாக பாதிக்கச் செய்துள்ளது. இதனால் லுங்கி நிகிடி, ஷர்துல் தாக்குர், டேவிட் வில்லே கூட்டணி கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் அம்பாட்டி ராயுடு, ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் அணிக்கு தேவையான தருணங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதிலும் அம்பாட்டி ராயுடு தொடக்க வீரராகவும், 4-வது வீரராகவும் களமிறங்கி அற்புதமாக விளையாடி வருகிறார். 10 ஆட்டங்களில் 423 ரன்கள் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் சேர்த்துள்ளவர்களின் பட்டியலில் 3-வது இடம் வகிக்கும் அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோல் தன்மீதான கடந்த கால விமர்சனங்களுக்கு அதிரடி பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்து வரும் தோனியும் மீண்டும் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளார்.

பிங்க் உடையில் ரஹானே குழுவினர்

பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க போராடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘பிங்க்’ நிற உடையில் களமிறங்குகிறது. புற்று நோய் விழிப்புணர்வுக்காக அந்த அணி இந்த உடையில் விளையாடுகிறது. பிங்க் நிறத்துடன் மேலும் இரு நிறங்கள் உடையில் இடம் பெற்றுள்ளது. இந்த 3 வண்ணங்களும் மார்பகப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், செர்விக்கல் கேன்சர் ஆகியவற்றைக் குறிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x