Published : 10 May 2018 07:25 AM
Last Updated : 10 May 2018 07:25 AM

ஹைதராபாத் வெற்றிக்கு தடை போடுமா டெல்லி?: பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே ஹைதராபாத் அணி அமர்க்களமாக ஆடி வருகிறது. ஹைதராபாத் அணி தான் விளையாடிய 10 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்றுள்ளது. 2-ல் மட்டுமே தோல்வி கண்டது. 16 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட பிளே-ஆப் சுற்று வாய்ப்பை அந்த அணி உறுதி செய்துள்ளது.

பேட்டிங் சுமாராக இருந்தாலும், அந்த அணியின் பந்துவீச்சு அமர்க்களமாக உள்ளது. அந்த அணி வீரர்கள் புவனேஸ்வர் குமார், ரஷித் கான், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி நெருக்கடி கொடுக்கின்றனர்.

அதேபோல பேட்டிங்கிலும் கேப்டன் கேன் வில்லியம்ஸன், ஷிகர் தவண், அலெக்ஸ் ஹேல்ஸ், மணீஷ் பாண்டே, சாஹா, தீபக் ஹூடா, யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் எதிரணியை மிரட்டக் காத்திருக்கின்றனர்.

இந்தத் தொடர் முழுவதுமே கேன் வில்லியம்ஸன் சிறப்பாக விளையாடி வருகிறார். கடைசி ஆட்டத்தில் 39 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

ஆனால் டெல்லி அணியின் நிலைமை மோசமாகவுள்ளது. 10 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே அந்த அணி வெற்றி கண்டது. எஞ்சிய 4 ஆட்டங்களில் அனைத்திலும் அந்த அணி வெற்றி பெற்றாலும், அந்த அணிக்கு பிளே-ஆப் சுற்று வாய்ப்பு என்பது மிக மிக கடினமே.

டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பிருத்வி ஷா, மேக்ஸ்வெல் போன்ற திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தும், வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. ஹைதராபாத் அணிக்கெதிரான கடைசி ஆட்டத்தில் இளம் வீரர் பிருத்வி ஷா 65 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் மொத்தம் 163 ரன்கள் குவித்தபோதும், டெல்லியால் வெற்றியைப் பெற முடியவில்லை.

கடைசி ஓவர்களில் டெல்லி வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “இந்தத் தோல்வி எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தது. தொடக்கத்தில் நாங்கள் புள்ளிகள் பட்டியலில் முதலில் இருந்தோம். ஆனால் அடுத்த ஆட்டங்களில் நாங்கள் கோட்டை விட்டோம். முக்கியமான ஆட்டங்களில் கேட்ச்களை தவறவிட்டோம். அது எங்களின் வெற்றியைப் பறித்துவிட்டது” என்றார்.

இந்தத் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் மோசமாக விளையாடி வருகிறார். அவரது பார்ம் அணிக்கு பெரும் கவலையை அளித்தது. டெல்லி அணி வீரர்கள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஹைதராபாத் அணியை வீழ்த்த முடியும். ஆனாலும் ஹைதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு நாங்கள் தடைபோடுவோம் என்று கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.

ஹைதராபாத் அணியில் ஷிகர் தவாணின் பேட்டிங் பார்ம் மட்டுமே கவலை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து கேப்டன் வில்லியம்ஸன் கூறும்போது, “ஷிகர் தவாண் சிறந்த ஆட்டக்காரர். வரும் ஆட்டங்களில் அவரது திறமையை நீங்கள் காண முடியும். நாங்கள் ஓர் அணியாக திரண்டு ஒட்டுமொத்த திறமையையும் காட்டி வருகிறோம்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x