Published : 10 May 2018 07:24 AM
Last Updated : 10 May 2018 07:24 AM

பஞ்சாப் அணியின் நடுவரிசை வீரர்கள் மோசமாக ஆடுவது கவலை அளிக்கிறது: பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் பேட்டி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் மோசமாக விளையாடி வருவது கவலை அளிக்கிறது என்று அணியின் பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் கிரிக்கெட் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வி கண்டது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் மட்டும் கடைசி வரை வெற்றிக்காக போராடினார். அவர் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 70 பந்துகளில் இந்த ரன்களை ராகுல் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் அனைவருமே மோசமாக விளையாடியதால் பஞ்சாப் தோல்வி கண்டது.

இதுகுறித்து பஞ்சாப் அணி பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் கூறும்போது, “எங்கள் அணி பேட்டிங்கில் வலுவான அணி என்பது தெரியும். ராகுல், கிறிஸ் கெயில் என அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் நடுவரிசை வீரர்கள் மோசமாக விளையாடினர். இதனால் நாங்கள் தோல்வி கண்டோம். நடுவரிசை வீரர்களின் பேட்டிங் எங்களுக்கு கவலை அளிக்கிறது.

பந்துவீச்சாளர்கள் தங்களது கடமையை சரியாகச் செய்தனர். இந்த போட்டி முழுவதுமே பஞ்சாப் வீரர்களின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது” என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் கூறும்போது, “இந்த ஆடுகளத்தில் 160 முதல் 170 ரன்கள் குவித்தாலே அது எதிரணிக்கு சவாலான ஸ்கோராக இருக்கும் என்று எண்ணினோம்.

முதல் 6 ஓவர்களில் நன்றாக ஸ்கோர் செய்தோம். அதன் பின்னர் ஆடுகளத்தில் பந்துகள் எழும்பவில்லை. ரன்கள் குவிப்பது சிரமமாக இருந்தது. பின்னர் பந்துவீச்சின்போது கிருஷ்ணப்பா கவுதம் சிறப்பாக பந்துவீசி 2 முக்கிய விக்கெட்டுகளை பறித்தது எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

எங்கள் அணியின் ஆலோசகர் ஷேன் வார்னே, எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார். இதுபோன்ற மாபெரும் வீரர்கள் எங்களுடன் துணை நிற்பது பெருமை. வெற்றிக்கான படிக்கட்டுகளை எங்களுக்காக அவர் அமைத்து வருகிறார்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x