Published : 09 May 2018 10:06 AM
Last Updated : 09 May 2018 10:06 AM

ஆரஞ்சு தொப்பியை ராகுல் வென்றதைத் தவிர வெற்றிக்கான முயற்சியே இல்லாத ஆட்டத்தில் பஞ்சாப் தோல்வி

ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ம் 40வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 158/8 என்று எடுக்க, தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராகுல் 95 நாட் அவுட் என்ற போதிலும் 143/7 என்று தோல்வி அடைந்தது.

போராடித் தோல்வியடைந்தது கிங்ஸ் லெவன்... அதாவது வெற்றி பெறப் போராடித் தோல்வி தழுவவில்லை, எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய இலக்கை தோற்க வேண்டுமென்றால் அதற்கும் போராடத்தானே வேண்டும். ஆகவே “போராடித் தோல்வி” என்ற சொற்றொடரில் இருவேறு அர்த்தங்கள் பொதிந்துள்ளன. 1. வெற்றி பெற போராடித் தோல்வியடைவது, 2. தோல்வி பெறவே போராடுவது. இந்த புதிய அர்த்தங்களையெல்லாம் நமக்கு வெளிப்படுத்தும் ஒரு போட்டித் தொடர்தான் ஐபிஎல் கிரிக்கெட். நேற்றைய ஆட்டம் இந்த உணர்வைத்தான் ஏற்படுத்தியது.

ஏனெனில் ஓவருக்கு 9-10 ரன்கள் தேவை என்ற நிலையிலிருந்து 14-15 ரன்கள் தேவை என்ற நிலையிலும் கூட கவலைப்படாமல், சிக்ஸ், பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளையும் ஒன்று ,இரண்டு என்று எடுப்பதற்கும் போராட்ட குணம் தேவை அல்லவா? களத்தில் இப்படி ஆடிக்கொண்டிருக்க அங்கு கிங்ஸ் லெவன் இடத்தில் ஒரு உணர்வு கூட காட்டவில்லை. சேவாக், அஸ்வின் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லாம் முன்னேற்பாடுதான் போலும். இவ்வளவு டிஆர்பி ரேட்டிங், 24000-25000 பார்வையாளர்களுக்கு என்ன கிடைக்கிறது? ஏமாற்று வேலையினால் கிடைக்கும் ஏமாற்றத்தைத் தவிர. இவையெல்லாம் வேறு ஒரு கணக்கீட்டில் நடக்கின்றன, அதன் தர்க்கங்கள் நம் அறிவுக்கு எட்டாதவை(?!)

ராகுல் 95 ரன்களைத் தவிர மற்ற ஸ்கோர்கள் இதோ: 1,0,3,9,7,9,11,1.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஜோஸ் பட்லர் 82 தவிர மற்றவர்கள் ஸ்கோர் இதோ: 9, 8, 22, 14, 11, 9, 0, 0

கிங்ஸ் லெவன் பஞ்சாப் பவுலிங்கில் 37 டாட் பால்கள்.

ராஜஸ்தான் பவுலிங்கில் 44 டாட் பால்கள். இது போன்ற விவரங்களைத் தவிர இத்தகைய ஆட்டங்களில் பேச என்ன இருக்கிறது என்று புரியவில்லை.

தேவையற்ற மாற்றங்கள் தேவையற்ற முயற்சிகள்:

ராகுல் திரிபாதி கடந்த ஐபிஎல் போட்டியில் தொடக்க வீரராக இறங்கி வெளுத்துக் கட்டியவர் ஓவருக்கு 10 ரன்கள் என்பது அவரது பவர் பிளே சராசரியாகும். ஆனால் இந்த ஐபிஎல் போட்டியில் அவரை நடுக்களத்தில் இறக்கி அஜெண்டா போட்டு அவரைக் காலி செய்தனர், கடைசியில் நேற்று அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். வீரரை எப்படி அழிப்பது என்பதை ஐபிஎல் அணிகளிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். நேற்று டி ஆர்க்கி ஷார்ட்டையும் அணியில் எடுக்காததால் ராயல்ஸ் பேட்டிங் ரஹானே, பட்லர், சாம்சன், ஸ்டோக்ஸ் என்பதாகக் குறுகியது. ஸ்டுவர்ட் பின்னி, மஹிபால் லொம்ரோர் பற்றியெல்லாம் பேச என்ன இருக்கிறது? ஏன் இந்த மாற்றங்கள்? (உஷ்! கேக்காதீங்க) மேலும் கே.கவுதமை 3ம் நிலையில் இறக்கி அவர் 8 பந்துகளில் 6 ரன்களில் வெளியேறினார்.

அதே போல் அஸ்வின் கிங்ஸ் லெவன் பேட்டிங்கில் 3ம் நிலையில் இறங்கியது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை?! கவுதம் வீசிய மிகவும் ஒரு பழையபாணி ஆஃப் பிரேக்கில் அசிங்கமாக மட்டையை சுழற்றி பவுல்டு ஆனார். ஏன் இவருக்கு இது? மீண்டும் இந்திய ஒருநாள், டி20 அணிகளில் ஓரங்கட்டப்படுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் செய்வது போல்தான் இருக்கிறது. மயங் அகர்வாலை உட்கார வைத்தார். கருண் நாயரை இறக்கியிருக்கலாம், அல்லது புதிய வீரர் ஆகாஷ்தீப் நாத், மனோஜ் திவாரி, ஸ்டாய்னிஸ் என்று யாரை வேண்டுமானாலும் இறக்கியிருக்கலாம். ஆனால் அஸ்வின் இறங்கியதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அதே போல் ஸ்டாய்னிஸ் களமிறங்கும் போது ஏறக்குறைய பஞ்சாப் தோல்வியை உறுதி செய்திருந்தது. இப்படி ஏகப்பட்ட உஷ் கண்டுக்காதீங்க தருணங்களுடன் ஒரு போட்டி நடந்தேறியது.

பட்லருக்கு நன்றாகப் போட்டுக் கொடுத்ததில் ஸ்டாய்னிஸின் முதல் ஓவரிலேயெ 11 ரன்கள், அடுத்த ஓவர் அக்சர் படேல், புதிய பந்தில் அக்சர் படேல் வீசி எங்காவது பார்த்திருக்கிறோமா? அக்சர் படேல் ஓவரில் 14 ரன்கள். அங்கிட் ராஜ்புத் அணியில் இல்லை. அடுத்த ஓவரில் மோஹித் சர்மா 10 ரன்கள் கொடுத்தார். அடுத்த ஓவர் ஆண்ட்ரூ டை. 4 ஓவர்களில் 4 பவுலர்கள், இதுதான் அஸ்வின் கேப்டன்சி, கடைசியி டை தான் விக்கெட் எடுத்தார். ரஹானே லெக் திசையில் அடிக்க ஆஃப் திசையில் கேட்ச் ஆனது. மீண்டும் மோஹித் சர்மா ஓவரில் கவுதம் சிக்ஸ் பட்லர் பவுண்டரியுடன் 14 ரன்கள். அடுத்த டை ஓவரில் 11 ரன்கள், பவர் பிளேயில் பட்லர் 22 பந்துகளில் 45 நாட் அவுட். ராஜஸ்தான் 6 ஓவர்களில் 63/1. 27 பந்துகளில் பட்லர் அரைசதம் எடுத்தார். அதன் பிறகு 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

கடந்த போட்டியில் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆட்ட நாயகன் மேஜிக் முஜிபுர் இம்முறையும் சாம்சன், பட்லர் ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்தார். ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளை கடைசி ஓவரில் வீழ்த்த ராயல்ஸ் 158/8 என்று முடிந்தது. 10 ஓவர்களில் 82/2 என்று இருந்த ராயல்ஸ், இப்படியாக மடிந்தது.

ஆண்ட்ரூ டை 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் அணியில் கிறிஸ் கெய்ல் நின்ற இடத்திலிருந்தே மைதானத்துக்கு வெளியே அடிக்கும் திறமை கொண்டவர் எதற்காக அப்படி குடுகுடுவென்று இறங்கி வந்து ஸ்டம்ப்டு ஆனார் என்பது புரியாத புதிர். அஸ்வின் தன்னை முன்னால் 3ம் நிலையில் இறக்கிக் கொண்டு டக் அவுட் ஆனார், இதனால் கருண் நாயர் தேவையில்லாமல் ஜோஃப்ரா ஆர்ச்சரை சுற்றி கேட்ச் ஆக 19/3 என்று ஆனது கிங்ஸ் லெவன். ஆகாஷ் தீப் நாத் (9), மனோஜ் திவாரி (7)அக்சர் படேல் (9) (இவர் ஸ்டாய்னிஸுக்கு முன்னால் இறக்கப்படுகிறார்?!), ஸ்டாய்னிஸ் 11 என்று ஒரு புறம் சொதப்ப கே.எல்.ராகுல் 70 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 95 நாட் அவுட். இந்த இன்னிங்ஸின் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள யேல் பல்கலைக் கழகமும் போதாத ஆய்வுப்படிப்பு நமக்குத் தேவை. வெற்றிக்கான ரன் விகிதம் 12 ரன்கள் ஆன போது கூட இவரும் சரி, ஸ்டாய்னிஸும் சரி பவுண்டரி அடிக்க முயற்சி கூட செய்யவில்லை. கடைசியில் உனாட்கட்டை ரிவர்ஸ் ஸ்வீப்பெல்லாம் ஆடினார். 66-லிருந்து 95 ஆக அவர் ஸ்கோர் உயர்ந்ததோடு சரி, இந்தத் தொடரில் 471 ரன்களுடன் ஆரஞ்சுத் தொப்பியை ராயுடுவிடமிருந்து பறித்தார். கிங்ஸ் லெவன் 143/7 என்று முடிந்தது. ஆட்ட நாயகன் ஜோஸ் பட்லராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x