Published : 09 May 2018 07:40 AM
Last Updated : 09 May 2018 07:40 AM

மும்பை அணியை வீழ்த்தும் முனைப்பில் கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று மோதவுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் முதலில் வெற்றிகளைக் குவித்த கொல்கத்தா அணி தற்போது தொடர்ந்து தடுமாறி வருகிறது.

அதே நேரத்தில் தொடக்கத்தில் தடுமாற்றத்தைச் சந்தித்து வந்த மும்பை அணி தற்போது கடைசி 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு புத்துயிர் பெற்றுள்ளது.

மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியுடன் 21 முறை மோதியுள்ள மும்பை, அதில் 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் கொல்கத்தா, மும்பை அணி மோதும் இந்த ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது எனலாம்.

மே 6-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை, மும்பை வீழ்த்தியது நினைவிருக்கலாம். இதற்கு முன் 2015-ம் ஆண்டில்தான் மும்பை இந்தியன்ஸ் அணியை, கொல்கத்தா வீழ்த்தியிருந்தது.

இந்த நிலையில் 2 அணிகளும் இன்று மோதவுள்ளன. இரு அணிகளுக்குமே இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இந்த 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலை இரு அணிகளுக்குமே உள்ளது. எனவே இந்த ஆட்டம் இரு அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக உள்ளது.

கொல்கத்தா அணியின் கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், நித்தீஷ் ராணா, சுப்மான் கில், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் கடந்த 2 ஆட்டங்களில் அவர்களிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.

இந்த ஆட்டத்தில் அவர்கள் எதிரணியை மிரட்டக் காத்திருக்கின்றனர். கடந்த ஆட்டத்தில் சுனில் நரைன், தொடக்க ஆட்டக்காரராக இல்லாமல் நடுவரிசையில் களமிறங்கினார்.

ஆனால் நடுவரிசையில் அவர் பெரிய ஸ்கோரை எட்டவில்லை. எனவே அவர் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கக்கூடும்.

அதேபோல பவுலிங்கில் ரஸல், சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், மிட்செல் ஜான்ஸன் ஆகியோர் தங்களது திறமையை நிரூபிக்கக் காத்திருக்கின்றனர். கடந்த ஆட்டத்தில் சிவம் மாவி காயம் அடைந்திருந்தார். அதனால் அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா களமிறங்கி தனது திறமையை நிரூபித்தார்.

இந்த ஆட்டத்திலும் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்புக் கிடைக்கக் கூடும். மொத்தத்தில் மும்பையை வீழ்த்தும் முனைப்பில் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.

அதேபோல புத்துயிர் பெற்றுள்ள மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணி வீரர்களை உற்சாகப்படுத்தி வெற்றிப் பாதையில் செல்லத் தொடங்கியிருக்கிறார். பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், மும்பை அணியின் பேட்டிங் தூணாக உள்ளார். அதேபோல எவின் லீவிஸ், இஷான் கிஷண், ஹர்திக் பாண்டியா, கிருணால் பாண்டியா, டுமினி ஆகியோரிடமிருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

ஹர்திக் பாண்டியாவும், கிருணால் பாண்டியாவும் பேட்டிங்கில் மட்டுமல்லாது, பவுலிங்கிலும் எதிரணிக்கு சவால் விட்டு வருகின்றனர். குறிப்பாக கிருணாலின் அற்புதமான சுழல்பந்துவீச்சுக்கு எதிரணியினர் மிரண்டு வருகின்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x