Published : 08 May 2018 08:41 AM
Last Updated : 08 May 2018 08:41 AM

உதிர்ந்த பூமாலையான பெங்களூரு! ஆர்சிபி கதையை முடித்த வில்லியம்சன், சன்ரைசர்ஸ் பவுலர்கள்

ஹைதராபாதில் நடைபெற்ற 39வது ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சன் ரைசர்ஸ் அணி நிர்ணயித்த குறைந்த ரன் இலக்கான 147 ரன்களையும் எடுக்க முடியாமல் 141/6 என்று தோல்வி அடைந்தது. இதனையடுத்து பிளே ஆஃபுக்கும் தகுதி பெறாமல் வெளியேறும் நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் அணியும் பேட்டிங்கில் பெரும் சொதப்பல்தான், கடைசி 4 ஓவர்களில் 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆனால் என்ன இலக்காக இருந்தாலும் சன் ரைசர்ஸ் பந்து வீச்சு தடுக்கும் திறமை கொண்டுள்ளது, அனுபவ புவனேஷ்வர் குமார், இளம் சித்தார்த் கவுல், புரியாத புதிர் ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான், பந்துகளை தினுசு தினுசாக வீசும் சந்தீப் சர்மா ஆகியோர் ஆர்சிபி-க்கு வெளியேற்ற அச்சுறுத்தலை அளித்துள்ளனர்.

இரு அணிகளிலும் ஒப்பிடும் போது கேன் வில்லியம்சன் தான் நன்றாக பேட் செய்தார், அவர் 39 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தது வெற்றியைத் தீர்மானித்தது.

மோசமான ஷாட் தேர்வு, ரஷீத் கானின் அற்புத விக்கெட்

விராட் கோலி நன்றாக ஆடிவந்த நிலையில் மோசமான ஷாட் தேர்வு அதைவிட மோசமாக அதை ஆடியதில் வெளியேற திருப்பு முனை ஏற்பட்டது. ஏ.பி.டிவில்லியர்ஸ் ஈகோ இல்லாத வீரர்தான், ஆனால் நேற்று ரஷீத் கான் ஒரு பந்தை கடுமையாக கூக்ளியாக வீசி உள்ளே திருப்பினார், அதில் ஆடிப்போன டிவில்லியர்ஸ், அடுத்த பந்தும் அதே போல் வரும் என்பதை எதிர்பார்த்தாரா இல்லை அப்படி வந்தாலும் ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில்தான் ஆடுவேன் என்று முன் கூட்டியே முடிவெடுத்தாரா என்பது தெரியவில்லை, ரஷீத் கானிடம் பவுல்டு ஆனார்.

அடுத்தடுத்து 2 பெரிய விக்கெட்டுகள் ஆர்சிபிக்கு ஆணியறைந்தது, கடைசியில் கொலின் டி கிராண்ட்ஹோம் சில சாட்டையடி ஷாட்களை ஆடி 33 அவுட் என்றாலும் புவனேஷ்வர் குமாரின் கடைசி ஓவர் ஆர்சிபிக்குக் கொஞ்சம் டூமச்தான்.

பிட்சின் இரண்டகத் தன்மையை ஆர்சிபி அணி சரியாகப் புரிந்து கொண்டது, பந்துகள் பிட்சில் நின்று வந்தன, 3வது ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸ் (5), டிம் சவுதியின் பந்து ஒன்று நின்று வந்தது, உள்ளே வந்தது, கிராஸ் லைனில் ஆட முற்பட்டார் ஹேல்ஸ் பவுல்டு ஆனார். ஷிகர் தவணும் இந்தப் பிட்சில் திணறினார் 19 பந்துகளில் 13 ரன்களை கஷ்டப்படு எடுத்து சிராஜ் பந்தை புல்ஷாட் ஆடும் முயற்சியில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

பாண்டே 5 ரன்களில் சாஹலின் நேர் பந்தை கோலிக்கு கேட்சிங் பயிற்சி அளித்து வெளியேறினார். 8.2 ஓவர்களில் 48/3 என்று இருந்த சன் ரைசர்ஸ் அணியை அதன் பிறகு உயர்த்தியது கேன் வில்லியம்சன், ஷாகிப் அல் ஹசன். இருவரும் சேர்ந்து 64 ரன்களைச் சேர்த்தனர். வில்லியம்சன் குறிப்பாக, இத்தகைய இரண்டகத் தன்மை பிட்ச்களில் ஆடுவதை ஒரு கலையாக வளர்த்தெடுத்துள்ளார், அன்று ஜெய்ப்பூரில் இதே மாதிரி பிட்சில்தான் அருமையான 63 ரன்களை அவர் 43 பந்துகளில் எடுத்தார். இடைவெளிகளை நன்றாகப் பயன்படுத்தி ஆடினார், பொறுமை காத்ததுடன் எந்தப் பந்தை எங்கு ஆட வேண்டும் என்பதில் வில்லியம்சனிடம் நேர்த்தி இருந்தது, இதனால்தான் இத்தகைய லாயக்கற்ற பிட்ச்களிலும் கூட அவரால் சிக்கல் இல்லாமல் ஆட முடிகிறது.

5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அவர் 39 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதுவும் எதிர்கொண்ட கடைசி 9 பந்துகளில் 25 ரன்கள் என்று அதிரடியும் காட்டினார், உமேஷ் யாதவ் பந்தில் டீப் ஸ்கொயர் லெக்கில் மந்தீப் சிங்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த ஐபிஎல்-ல் வில்லியம்சன் அடித்த 5வது அரைசதமாகும் இது. ஷாகிப் அல் ஹசன் 35 ரன்களையும் யூசுப் பத்தான் 12 ரன்களையும் எடுக்க வில்லியம்சன் விக்கெட்டோடு கடைசி 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களுடன் முடிந்தது சன் ரைசர்ஸ். சவுதி, சிராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

60/1 லிருந்து சரிந்த ஆர்சிபி, சன் ரைசர்ஸின் கிடுக்கிப்பிடி பவுலிங்!

பார்த்திவ் படேல் அட்டகாசமான 4 பவுண்டரிகளுடன் 13 பந்துகளில் 20 ரன்கள் என்று தொடங்கினார், ஆனால் உள்ளே வந்த ஷாகிப் பந்தை ஸ்வீப் ஆட முயன்று கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். மனன் வோராவுக்கு பாவம் பேட்டிங் சரியாக அமையவில்லை, 10 பந்துகளில் 8 ரன்களை அவர் எடுப்பதற்குள் விராட் கோலி, புவனேஷ்வர் குமாரை ஒரு கிளாசிக் பஞ்ச் பவுண்டரியுடன் தொடங்கி சிலபல பவுண்டரிகளை அடிக்கத் தொடங்கினார்.

ஷாகிப் அல் ஹசனின் ஒரே ஓவரில் இறங்கி வந்து லாங் ஆனில் கொசுவை அடிப்பது போல் ஒரு சிக்சருடன் ஒரு அருமையான ஷார்ட் ஆர்ம் புல், மற்றும் ஒரு எட்ஜ் பவுண்டரி என்று 15 ரன்கள் வாங்கினார். கவுல் பந்தை ஏறி வந்து ஒரே அடி அடித்து பவுண்டரிக்கு அனுப்பினார், பிறகு பாயிண்டில் சிங்கிள் தட்டி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகரன்கள் சாதனை வைத்திருந்த சுரேஷ் ரெய்னாவைக் கடந்தார் விராட். மனன் வோரா 8 ரன்களில் சந்தீப் சர்மா பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.

இந்நிலையில்தான் ரஷீத் கான் வீச வந்த போது கோலி எட்ஜ் ஆனார், வில்லியம்சன் கையில் வந்த கேட்சை விட்டார், அது பவுண்டரிக்கும் சென்றது, பவுலருக்கு இரட்டை வேதனை!! இது கேட்ச் அல்ல மேட்ச் என்று நினைத்த வேளையில்தான் விராட் கோலி 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த விராட் கோலி ஷாகிப் அல் ஹசன் பந்தை புல் ஆட முயன்றார், ஆனால் பந்து எங்கு சென்றது தெரியுமா? ஷார்ட் தேர்ட்மேனுக்கு. யூசுப் பத்தான் கொஞ்சம் திண்டாடினார் ஏனெனில் கோலி புல் ஷாட் ஆடினால் அது தேர்ட்மேனுக்கு வரும் என்று எந்த பீல்டரும் எதிர்பார்க்க முடியாதுதானே? இதுதான் திருப்பு முனையாயிற்று. டிவில்லியர்ஸ் அடுத்தடுத்த கூக்ளியில் ஒன்றில் பீட் ஆகி அடுத்ததில் பவுல்டு ஆனார். மிக அருமையான பவுலிங், டிவில்லியர்ஸின் கணிப்பையே பொய்யாக்குவது சுலபமல்ல.

மொயின் அலி 10 ரன்களில் சித்தார்த் கவுல் பந்தை புல்ஷாட் ஆட முயன்று மட்டையின் அடி விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அதன் பிறகு சந்தீப் சர்மா, ஷாகிப், ரஷீத் கான் ஆகியோர் 4 ஓவர்களில் 23 ரன்களையே கொடுத்தனர். ஆர்சிபிக்கு 24 பந்துகளில் 39 ரன்கள் தேவை. மந்தீப் சிங், கொலின் டி கிராண்ட் ஹோம் கிரீசில் இருந்தனர்.

அப்போதுதான் ரஷீத் கானை 2 சிக்சர்கள் அடித்தார் கிராண்ட்ஹோம், 3 ஓவர்கள் 25 ரன்கள் தேவை என்ற நிலையில் புவனேஷ்வர் குமார் மிக அருமையான லெக் கட்டர்களால் கட்டிப்போட்டார் 6 ரன்கள்தான் அந்த ஓவரில் வந்தது.

12 பந்துகளில் 19 ரன்கள் என்ற நிலையில் சித்தார்த் கவுல் ஓவரை அடிக்க முடியவில்லை 7 ரன்கள்தான் வந்தது, கடைசி ஓவரில் 12 ரன்கள், வெற்றி பெற வாய்ப்பிருந்தது. ஆனால் புவனேஷ்வர் குமார் அதியற்புதமான கடைசி ஓவரை வீசினார். பவுண்டரியே கொடுக்கவில்லை, கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில் புவனேஷ்வர் குமாரின் துல்லியத் தாக்குதல் யார்க்கரில் பவுல்டு ஆனார். மந்தீப் சிங் 21 நாட் அவுட். கிராண்ட்ஹோம் 33. சன் ரைசர்ஸ் பவுலிங்கில் மொத்தம் 45 டாட் பால்கள். ஷாகிப் அல் ஹசன் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள். ரஷீத் கான் டிவில்லியர்ஸ் என்ற அற்புத விக்கெட்டுடன் 4 ஓவர்களில் 31 ரன்கள். அது கிராண்ட் ஹோம் அடித்த 2 சிக்சர்களினால் இவர் அனாலிசிஸ் கொஞ்சம் ஆட்டம் கண்டது. 141/6 என்று முடிந்தது ஆர்சிபி.

ஆட்ட நாயகனாக கடினமான பிட்சில் பிரமாதமாக ஆடிய கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x