Published : 05 May 2018 08:06 PM
Last Updated : 05 May 2018 08:06 PM

கோலியின் விக்கெட்டை வீழ்த்தியும் கொண்டாடாத ஜடேஜா : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

புனேயில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி, கொண்டாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவிந்திர ஜடேஜாவை நெட்டிசன்கள் விமர்சனத்தால்,வறுத்தெடுத்து வருகிறார்கள்.

புனேயில் இன்று 11-வது ஐபிஎல் சீசனின் 35-வது லீக் ஆட்டம் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. 128 இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து, 128 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே சிஎஸ்கே அணியில் ரவிந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அவர் இந்த 3 துறைகளிலும் சிறப்பாக செயல்படாத நிலையிலும், தோனி தொடர்ந்து அவரை அணியில் நீடித்து வைத்திருக்க காரணம் என்ன என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விவாதம் நடந்தன.

இதில் உச்ச கட்டமாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நரேனுக்கு 2 கேட்சுகளை அடுத்தடுத்து ஜடேஜா கோட்டைவிட்டதால், ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்துக்கே சென்றனர். ஜடேஜாவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.

இந்தசூழலில், புனேயில் இன்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டு இருந்தார்.

ஆனால், ஜடேஜா வீசுவது சுழற்பந்துவீச்சு என்றபோதிலும், அதிகமாக “டர்ன்” ஆகாது. ஆனால், ஜடேஜா வீசிய 6-வது ஓவரின் முதல்பந்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி “க்ளீன் போல்டாகி” வெளியேறினார். பெங்களூரு அணியின் மிகப்பெரிய விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அணியில் மற்ற வீரர்கள் கொண்டாட ரவிந்திர ஜடேஜா மட்டும் விராட் கோலியைப் பார்த்துக்கொண்டே தலையில் கைவைத்து அமைதியாக வந்தார். விராட் கோலி ஒருபுறம் இறுகிய முகத்துடன் முறைத்துக்கொண்டே பெவிலியன் திரும்பினார்.

 

ஐபிஎல்

பெங்களூரு அணியின் மிகப்பெரிய விக்கெட் வீழ்த்திய பின்பும் ஜடேஜா கொண்டாடது அனைத்து தரப்பினருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஐபிஎல் அமைப்பு ட்விட்டரில் விடுத்த செய்தியில், ‘ஆர்சிபி அணியின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தியும் ஜடேஜாவுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லையா’ என்று கிண்டல் செய்து ட்வீட் செய்தது.

ஐசிசி

ரவிந்திர ஜடேஜாவை கிண்டல் செய்ய ஐசிசி அமைப்பும் தவறவில்லை. அந்த அமைப்பு செய்த ட்விட்டில், ‘இந்திய அணியின் கேப்டனையே வீழ்த்திவீட்டீர்கள் ஜடேஜா ஆனால், மகிழ்ச்சி இல்லையே’ என்று தெரிவித்துள்ளது.

நெட்டிசன்கள்

கோலியை ஆட்டமிழக்கச் செய்தபின்பும் ரவிந்திர ஜடேஜா கொண்டாடாமல் இருந்தது கண்டு நெட்டிசன்களும் அவரை விமர்சித்துள்ளனர். அதில் ‘கோலியை ஆட்டமிழக்கச்செய்து கொண்டாடினால், எதிர்காலத்தில் ஜடேஜாவுக்கு இந்திய அணியில் இடம் இருக்காது அதனால், கொண்டாடாமல் இருந்திருப்பார்’ என்று ஒருசிலர் தெரிவித்தனர்.

ஒரு சிலர் ‘அய்யோ, ஜடேஜா தெரியாமல் உங்கள் இந்திய அணியின் பாஸை(கேப்டனை) ஆட்டமிழக்கச் செய்துவிட்டீர்களே’ எனக் கேட்டுள்ளனர். இன்னும் சிலர் விராட் கோலிக்கு ஜடேஜா கடிதம் எழுதுபோல் குறிப்பிட்டுள்ளனர். அதில் ‘விராட், எனக்கு உங்களை ஆட்டமிழக்கச்செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இல்லை. மன்னித்துவிடுங்கள், அணியில் இருந்து நீக்கிவிடாதீர்கள்; என்று தெரிவித்துள்ளனர்.

‘ஜடேஜா முதல் முறையாக அதிர்ச்சி அடைந்துள்ளார் ‘என்றும், ‘ அணியின் கேப்டனை ஆட்டமிழக்கச்செய்து எப்படி கொண்டாட முடியும்; என்றும் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.

ஜடேஜா விளக்கம்

இந்நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிந்தபின், ஜடேஜாவிடம் வர்ணணையாளரிடம் கேள்வி எழுப்பினர் அப்போது அவர் கூறுகையில், ‘நான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் கொண்டாடும் மனநிலையிலும் இல்லை. விராட் கோலியின் விக்கெட் மிகப்பெரிய விக்கெட். பந்துவீசுவதற்கு ஏற்றார்போல் ஆடுகளமும் நன்கு ஒத்துழைத்தது’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x