Published : 28 Apr 2018 01:53 PM
Last Updated : 28 Apr 2018 01:53 PM

டெல்லி அணியில் கவுதம் கம்பீர் ஓரம்கட்டப்பட்டாரா? - ஒதுங்கிக்கொண்டாரா?: கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் விளக்கம்

ஐபில் போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரரான கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விளையாடாதது ஏன் என்று சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதற்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது நடந்து வரும் 11-வது ஐபிஎல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டனாக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

கொல்கத்தா அணிக்கு இருமுறை கோப்பையை வென்றுகொடுத்த வெற்றிக் கேப்டன் என்ற அடிப்படையில் அவரை அணி நிர்வாகம் தேர்வு செய்தது. இதனால், டெல்லி டேர்டெவில்ஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

கவுதம் கம்பீர் மட்டும் அந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் இல்லை, அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த மற்ற வீரர்களும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.

குறிப்பாக, ஸ்ரேயாஸ் அய்யர், பிரத்வி ஷா, முன்ரோ, ரிஸ்பா பந்த், கிறிஸ்டியன், ஜெயந்த் யாதவ், டிரன்ட் போல்ட், மேக்ஸ்வெல், முகமது ஷமி, விஜய் சங்கர்,அமித் மிஸ்ரா, ஆவேஷ்கான், பிளங்கெட் என அற்புதமான வீரர்கள் இருக்கின்றனர்.

ஆனால், 6 போட்டிகளுக்குக் கவுதம் கம்பீர் தலைமை ஏற்று செயல்பட்டதில் ஒருபோட்டியில் மட்டுமே டெல்லி அணி வெற்றி பெற்றது. மற்றபோட்டிகளில் மோசமான தோல்விகளைச் சந்தித்து.

இதனால், வேறுவழியின்றி கவுதம் கம்பீர் தானாகவே தனது கேப்டன் பதவியைத் துறந்தார். மேலும், இந்த சீசன் முழுவதும் சம்பளம் வாங்காமல் விளையாடப் போவதாக அறிவித்தார். புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யரை பரிந்துரை செய்தார் கம்பீர்.

இதனால், கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கம்பீர் களமிறங்கி பேட்டிங்கில் வெளுத்துகட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராமல் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கான காரணங்களும் கூறப்படவில்லை. அவர் நீக்கப்பட்டாரா அல்லது தானாக ஓய்வில் இருந்தாரா என்ற கேள்வியும் எழுந்தது.

கம்பீர் இல்லாத நிலையில், மிகப்பெரிய அளவில் பேட்டிங்கில் டெல்லி அணிக்கு நெருக்கடி ஏற்படப்போகிறது, புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் போட்டியிலேயே கம்பீரை நீக்கி தவறு செய்துவிட்டார் என்று ரசிகர்கள் தரப்பில் பேசப்பட்டது.

ஆனால், நினைத்து ஒன்று நடந்தது வேறு, அதிரடியாக டெல்லி அணி 219 ரன்களைக் குவித்து, கொல்கத்தா அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அனுபவ வீரர் கம்பீர் இல்லாமல் டெல்லி அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் வெற்றி பெற்று விட்டது. இதனால், அடுத்துவரும் போட்டிகளுக்கும் கம்பீர் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவாரா? அல்லது, வாய்ப்புகள் அளிக்கப்படுமா? என்ற தொடர் சந்தேகங்கள் எழுந்தன.

ஏனென்றால், ப்ளேஆப் சுற்றுக்கு டெல்லி அணி தகுதி பெற அடுத்துவரும் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

மேலும், ஸ்ரேயார்ஸ் அய்யர் தலைமையில் வீரர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளதால், பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத கம்பீர் அணியில் இடம் பெறு வேண்டுமா என்ற கருத்தும் மிதந்தது.

அதுமட்டுமல்லாமல், கேப்டன் பொறுப்புக்கு பரிந்துரை செய்த கம்பீரை முதல் போட்டியிலேயே களை எடுத்தது மாதிரி நீக்கிவிட்டார் ஸ்ரேயாஸ் அய்யர் என்ற விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் அதிகமாக எழுந்தன.

அதேசமயம், கொல்கத்தாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் கவுதம் கம்பீர் தானாக ஓய்வில் இருந்து கொண்டாரா அல்லது அணி நிர்வாகம் ஓய்வில் அமரவைத்ததா என்பது ரசிகர்கள் மத்தியில் எழுந்த கேள்விக்கு விடைதெரியாமல் இருந்தது.

ஆனால், இதுகுறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் போட்டி முடிந்தபின் கம்பீர் நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

கவுதம் கம்பீர் போன்ற அனுபவ வீரர்கள் அணிக்கு மிகவும் அவசியம். ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவர் கேப்டனாக இல்லாவிட்டாலும் பேட்ஸ்மேனாக பங்களிப்பு செய்வார் என எதிர்பார்த்தேன்.

ஆனால், தானாக முன்வந்து இந்தப்போட்டியில் நான் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துவிட்டார். கம்பீரை அணியில் எடுக்காமல் நீக்கியது என்னுடைய சொந்த முடிவு அல்ல. இது கம்பீர் தானாக அணி நிர்வாகத்திடம் கூறிவிட்டார். உண்மையிலேயே துணிச்சலான முடிவு.

கேப்டனாக கடந்த 6 போட்டிகளிலுக்கு செயல்பட்டு, அந்தப் பதவியை தானாக உதறித்தள்ளி, போட்டியிலும் விளையாடாமல் இருப்பதற்குத் துணிச்சல் வேண்டும். கம்பீர் மீது அதிகமான மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருக்கிறேன்.

அவரின் இந்த முடிவு நிச்சயம் ஏதோ காரணத்துக்காகவே இருக்கும். நன்றாக பேட் செய்யாவிட்டாலும் அவரை கேப்டனாகப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அனைத்து வீரர்களும் கூட்டு உழைப்பை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஒட்டுமொத்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.

என்னுடைய பேட்டிங், பிரித்வி ஷாவின் பேட்டிங் மட்டும் காரணமல்ல. ஒவ்வொருவரும் தானாக முன்வந்து பொறுப்பெடுத்து விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x