Published : 28 Apr 2018 07:40 AM
Last Updated : 28 Apr 2018 07:40 AM

புனேவில் இன்று மோதல்: சென்னையை சமாளிக்குமா மும்பை இந்தியன்ஸ்?; தோல்வியடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிப்பது கடினம்

ஐபில் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் மும்பை அணி ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் மோசமாக விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணி 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடம் வகிக்கிறது. கடைசியாக சொந்த மைதானத்திலேயே ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 119 ரன்கள் இலக்கைக்கூட எட்டிப்பிடிக்க முடியாமல் வெறும் 87 ரன்களில் சுருண்டு தோல்வி கண்டிருந்தது. அந்த அணி தொடரில் உயிர்பிப்புடன் இருக்க வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே ரன்கள் சேர்க்க தடுமாறி வருகின்றனர். ரோஹித் சர்மா 6 ஆட்டங்களில் 5-ல் சோபிக்க தவறினார்.

பெங்களூரு அணிக்கு எதிராக 94 ரன்கள் விளாசி அணியை சரிவில் இருந்து காப்பாற்றியதுடன் வெற்றிக்கும் பெரிய அளவில் பங்களிப்பு செய்த ரோஹித் சர்மா, மற்ற 5 ஆட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக 20 ரன்களே சேர்த்தார். இதேபோல் போல் கெய்ரன் பொலார்டும், 6 ஆட்டங்களில் பங்கேற்று வெறும் 63 ரன்களே எடுத்துள்ளார். இந்த சீசனில் ஆல்ரவுண்டராக அவரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான திறன் வெளிப்படவில்லை. சூர்யகுமார் யாதவுடன் இணைந்து ரோஹித் சர்மா, எவீன் லிவீஸ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஒருங்கிணைந்து விளையாடி ரன்கள் சேர்த்தால் மட்டுமே பெரிய அளவிலான இலக்கை கொடுக்கவோ அல்லது எட்டிப்பிடிக்கவோ முடியும். ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசையில் 4-வது தள்ளப்படுவார். பந்து வீச்சிலும் கூட மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு குழுவாக செயல்படுவதில் தேர்ச்சி பெறவில்லை. ஒரு வீரர் சிறப்பாக பந்து வீசினால், அவருக்கு மறுமுனையில் எந்தவித ஆதரவும் இல்லாமல் உள்ளது. 20 வயதான லெக் ஸ்பின்னர் மயங்க் மார்க்கண்டே இந்தத் தொடரில் அற்புதமாக வீசி வருகிறார். அவர் 6 ஆட்டங்களில் 10 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்திவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆனால் அவருக்கு உறுதுணையாக மற்ற பந்து வீச்சாளர்களிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படாதது பெரிய பின்னடைவாக உள்ளது.

கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்படக்கூடியவர் என பெயரெடுத்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வங்கதேச வீரர் முஸ்டாபிஸூர் ரஹ்மான் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. வலுவான சென்னை அணியின் பேட்டிங் வரிசையை பெரிய அளவில் ரன் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் பும்ரா, முஸ்டாபிஸூர் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கியாக வேண்டும். கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை தாரை வார்க்கும் மிட்செல் மெக்லீனகன் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்படக்கூடும். 4 ஆட்டத்தில் விளையாடி உள்ள அவர், 13 ஓவர்கள் வீசி 122 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு நியூஸிலாந்து வீரரான ஆடம் மில்னே இடம்பெறக்கூடும்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் அபார திறனை வெளிப்படுத்தி வருகிறது. 6 ஆட்டத்தில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த சொந்த மைதான ஆட்டங்கள் புனேக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ராஜஸ்தான் அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

கடைசியாக பெங்களூருவில் அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்கள் இலக்கை துரத்திய போது தோனி, அம்பாட்டி ராயுடு ஆகியோரது அசாத்தியமான பேட்டிங்கால் 2 பந்துதுகள் மீதமிருக்க அபார வெற்றி கண்டிருந்தது சென்னை அணி. ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, ஷேம் பில்லிங்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். சுரேஷ் ரெய்னாவின் பார்ம் மட்டுமே சற்று கவலை அளிப்பதாக உள்ளது. இதேபோல் ரவீந்திர ஜடேஜாவிடம் இருந்தும் ஆல்ரவுண்டராக பெரிய அளவிலான திறன் வெளிப்படவில்லை. இதனால் இருவரும் சிறந்த பங்களிப்பு செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளனர். பந்து வீச்சில் இளம் வீரரான தீபக் ஷகார் சிறப்பான வடிவத்துக்கு வந்துள்ளது பலம் சேர்த்துள்ளது. சுழலில் இன்றைய ஆட்டத்தில் இம்ரன் தகிருடன், கரண் சர்மா இடம்பெறக்கூடும்.

இந்த சீசனில் சென்னை - மும்பை அணிகள் மோதுவது இது 2-வது முறையாகும். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி இரு அணிகளும் மோதிய தொடக்க ஆட்டத்தில் ஒரு பந்து மீதம் இருக்க சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு மும்பை அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். அதேவேளையில் மீண்டும் ஒருமுறை மும்பை அணியை வீழ்த்தும் முனைப்புடன் செயல்பட சென்னை அணி ஆயத்தமாகி உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 பந்தில் 70 ரன்கள் விளாசிய தோனி மற்றும் இந்த சீசனில் 283 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்துள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அம்பாட்டி ராயுடு ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x