Published : 27 Apr 2018 03:43 PM
Last Updated : 27 Apr 2018 03:43 PM

கிறிஸ் கெய்ல் விக்கெட்டை வீழ்த்த சந்தீப் சர்மா கொடுத்த ஆலோசனை என்ன?

கிரிக்கெட்டே பேட்ஸ்மென்களின் ஆட்டமானது, மைதானங்களில் எல்லைக்கோடு குறுகிக் கொண்டே வந்தது, மட்டையின் பவர் அதிகரித்தது பவுலர்களுக்கு எதிராக ஏகப்பட்ட விதிமுறைகள், தடுப்புகள், பேட்டிங், பேட்ஸ்மென்களுக்கான ஸ்பான்சர்கள் வணிக நலன்கள் என்று பேட்டிங்கைச் சுற்றியே கிரிக்கெட் நடத்தப்பட்டு, அமைப்பளவிலேயே கிரிக்கெட் மட்டையாளர்களுக்கான ஆட்டமாகியிருக்கும் போது பந்து வீச்சு என்பது ‘ஒடுக்கப்பட்டதன் மீள்வருகை’ (Return of the repressed)யாகியுள்ளது.

அதில் குறிப்பாக ரிஸ்ட் ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் கைகளிலேயே பல வித்தைகளைக் காட்ட பெரிய பெரிய ‘ஆபீசர்’ அதிரடி வீரர்களெல்லாம் திணறும் காலம் மீண்டு வந்துள்ளது.

சன் ரைசர்ஸ் அணியின் பவுலிங் யூனிட், எதிரணியினர் சும்மா 20 ஓவர் நின்றாலே போதும் தானாகவே வெற்றி பெற முடியும் என்ற இரண்டு இலக்குகளில் மடிந்த போதும் அப்போட்டிகளில் எதிரணியினரை சொற்பமாக வீழ்த்தியது பவுலிங்கிற்குக் கிடைத்த புத்துணர்ச்சியாகும்.

அதுவும் கைவித்தைக்காரர்களான புவனேஷ்வர் குமார், ஸ்டான்லேக் ஆகியோர் இல்லாமலேயே இளம் பவுலர்களைக் கொண்டு கிறிஸ் கெய்ல், ராகுல் போன்றவர்களையும் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற ஹிட்டர்களையும் பதம்பார்ப்பது சாதாரணமல்ல.

சன்ரைசர்ஸ் அணிக்கு ஆடும் சந்தீப் சர்மா என்ற வேகப்பந்து வீச்சாளர் வேகத்துடன் அவ்வப்போது விரல்களிடுக்கில் பந்தைப் பிடித்து வீசும் பந்துகள் பேட்ஸ்மென்களைக் கடுமையாக திணறடிக்கின்றன.

இந்நிலையில் சந்தீப் சர்மா 2 மிகக்குறைந்த ரன் எண்ணிக்கைகளை வெற்றியாக மாற்றியது பற்றி கூறுகிறார்:

“அனைத்து பவுலர்களும் கொடுக்கப்பட்ட ரோல்களைக் கச்சிதமாகச் செய்கின்றனர், குறைந்த இலக்கை நிர்ணயித்த பிறகு வெற்றி பெற முடிந்தது இதனால்தான். இந்த 2 வெற்றிகள் மூலம் எங்கள் பந்து வீச்சு யூனிட் பெரிய அளவில் தன்னம்பிக்கை பெற்றுள்ளது.

முதல் ஓவரை நான் வீசுவதால் பிட்சின் தன்மை பற்றி மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் ரோல் எனக்குத் தரப்பட்டுள்ளது. மற்ற பவுலர்கள் எப்படி வீசினால் சரியாக இருக்கும் என்று நான் அறிவுரை வழங்க வேண்டும்.

கிங்ஸ் லெவனுக்கு எதிரான ஆட்டத்தில் விரலிடுக்கில் வைத்து வீசும் பந்தும், வேகம் குறைந்த பந்தும் கைகொடுக்கும், ஏனெனில் பிட்சில் இந்தப் பந்துகள் நின்று வருகின்றன என்று நான் கூறினேன். இப்பந்துகளை அடிக்க முடியாது. அதுதான் கிறிஸ் கெய்லை வீழ்த்த பாசில் தம்பி கடைபிடித்த உத்தியாகும். கிறிஸ் கெய்லுக்கு சற்றே வேகம் குறைந்த ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார் தம்பி. அந்தக் குறிப்பிட்ட பந்தை அப்போது வீசியது என் அறிவுரை இல்லையென்றாலும் பொதுவாக வேகம் குறைந்த பந்துகள் கைகொடுக்கும் என்பதை நான் பகிர்ந்து கொண்டேன்

எனவே என் வேலை பிட்சின் தன்மையை பிற பவுலர்களுக்கு அறுவுறுத்துவதாகும்.

குறைந்த இலக்கை எதிர்த்து ஆடுவதால் ஒரேயொரு திருப்பு முனை என்று கூற முடியாது. ரஷீத் கான் ராகுலை வீழ்த்தியதும், கெய்லை தம்பி வீழ்த்தியதும் முக்கியத் தருணங்கள்.

கேப்டன் வில்லியம்சன் மிகவும் அமைதியாக கேப்டன்சி செய்கிறார். ஆனால் பாசிட்டிவாக இருக்கிறார். ரன்கள் இல்லையென்றாலும் நாம் நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்து வெற்றி பெறப் பாடுபடுவோம் என்றுதான் கூறுகிறார். தோற்றால் பரவாயில்லை, ஆனால் அது எளிதாக அமைந்து விடக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

விக்கெட்டுகளை வீழ்த்த எப்போதும் முயற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும் வேறொன்றுமில்லை” என்றார் சந்தீப் சர்மா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x