Published : 27 Apr 2018 10:21 AM
Last Updated : 27 Apr 2018 10:21 AM

கிங்ஸ் லெவன் பஞ்சாபை சுற்றி வளைத்த ரஷீத், ஷாகிப்: குறைந்த இலக்கை தடுத்து சன் ரைசர்ஸ் மீண்டும் வெற்றி

அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 118 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்து நம்பமுடியாத வெற்றியை ஈட்டிய சன்ரைசர்ஸ், நேற்று மீண்டும் 132 ரன்கள் என்ற குறைந்த இலக்கை வெற்றிகரமாகத் தடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் கேப்டன் அஸ்வின் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், அங்கிட் ராஜ்புத் பிரமாதமான வேகத்தில் வீசி 14 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்க்க சன் ரைசர்ஸ் அணி மணீஷ் பாண்டே (54), ஷாகிப் அல் ஹசன் (28), யூசுப் பத்தான் (21) ஆகியோரது பங்களிப்பினால் 132/6 என்று முடிந்தது.

தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிறிஸ் கெய்ல் (23), ராகுல் (32) ஆகியோர் மூலம் 47 பந்துகளில் 55/0 என்ற வெற்றித்தொடக்கம்தான் கண்டது. ஆனால் ரஷீத் கான் மிக அருமையான ஒரு பந்தில் ராகுலை அதிர்ச்சி பவுல்டு செய்ய ஆட்டம் மாறிப்போனது. 55/0-லிருந்து பஞ்சாப் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 64 ரன்களுக்கு 10 விக்கெட். மீண்டும் ரஷீத் கான் 11 டாட்பால்களுடன் 4 ஓவரக்ள் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சந்தீப் ஷர்மா, பசில் தம்பி, ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சித்தார்த் கவுல் நல்ல எனெர்ஜியுடன் வீசினார். 19.2 ஓவர்களில் 119 ரன்களுக்குச் சுருண்டு 13 ரன்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் தோல்வியடைந்தது.

ராஜ்புத் பவுன்ஸில் வீழ்ந்த ஹைதராபாத்; கிங்ஸ் லெவன் பீல்டிங் மோசம்

சன் ரைசர்ஸ் அணியின் ஃபார்மில் உள்ள கேன் வில்லியம்சன் ஆட்டம் தொடங்கிய 4வது பந்தில் ராஜ்புத் பவுன்சருக்கு வெளியேறினார். ஷார்ட் பிட்ச் என்றவுடன் புல் ஷாட்டுக்குத் தயார் ஆனார் வில்லியம்சன், ஆனால் போதிய இடம் இல்லை அடித்தார் மிட் ஆஃபில் அஸ்வினுக்கு எளிதான கேட்ச் ஆனது. டக் அவுட் ஆனார். வில்லியம்சன்.

ஷிகர் தவண் அன்று சரண் ஷார்ட் பிட்சில் முழங்கையில் அடி வாங்கினார், நேற்று அன்கிட் ராஜ்புத், பந்தை வெளியே ஸ்விங் செய்து ஷார்ட் பிட்ச் பந்தாக்கினார், நிலைமாறிய தவண் என்ன செய்வதென்று தெரியாமல் பந்தைப் போய் இடித்தார். ஸ்லிப்பில் கருண் நாயர் அருமையான கேட்ச் எடுத்தார்.

விருத்திமான் சஹா படுமோசமான ஒரு ஸ்லாக் செய்து 6 ரன்களில் மிட்விக்கெட்டில் கொடியேற்றினார்.

சரண் பந்துகளில் கூடுதல் பவுன்ஸ் இருந்தாலும் அவரிடம் கட்டுக்கோப்பு இல்லை. ஷாகிப் அல் ஹசன் தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்த போது ரன் எண்ணிக்கையை அவர் ஆரம்பிக்கவில்லை, ஆனால் கேட்ச் நோ-பாலால் வீணானது. மணீஷ் பாண்டே விக்கெட்டையும் சரண் வீழ்த்தியிருப்பார், அஸ்வின் மிட் ஆஃபில் கேட்சை விடவில்லை என்றால்...

ஷாகிப் அல் ஹசன், மணீஷ் பாண்டே 52 ரன்கள் கூட்டணி அமைத்தாலும் புதிர் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான், அஸ்வின் ஆகியோரது லெக் பிரேக், கேரம் பந்துகள், விரலிடுக்கில் வீசும் பந்துகள் ஆகியவற்றினால் எழும்ப முடியவில்லை, ஆண்ட்ரூ டை ஒரு புறம் அடிக்க முடியாமல் வீசிக் கொண்டிருந்தார். மணீஷ் பாண்டே 48 பந்துகளில் இந்த சீசனின் மந்தமான அரைசதம் எடுத்தார். ஆனால் இது மேட்ச் வின்னிங்ஸ் என்று அப்போது பாண்டேவுக்குத் தெரிந்திருக்காது. மணீஷ் பாண்டே 54 ரன்களில் 3 பவுண்ட்ரிகள் 1 சிக்சருடன் அங்கிட் ராஜ்புத்தின் துல்லியமான யார்க்கரில் பவுல்டு ஆனார். ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களில் முஜீபிடம் வீழ்ந்தார், யூசுப் பத்தான் 19 பந்துகளில் 21 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். நபியை கடைசியில் ராஜ்புத் வீழ்த்தினார். சன் ரைசர்ஸ் 132/6 என்று முடிந்தது.

ராகுல், கெய்லுக்குப் பிறகு ரஷீத், ஷாகிப் அபாரம்:

ராகுலும் கெய்லும் நிதானத்துடன் தொடங்கினர், சந்தீப் சர்மா வேகத்துடன் வீசுவதுடன் அவ்வப்போது விரலிடுக்கில் பந்தை வைத்து வீசும் பந்துகளும் அதிரடி தொடக்கத்தைத் தடுத்தன. ஆனாலும் ராகுல் அபாரமான ஒரு கவர் டிரைவ், நேர்மறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடிக்கொண்டிருந்தார். கெய்ல், மொகமது நபியை ஏறி வந்து ஒரு சிக்ஸ் விளாசினார். இருவரும் மெதுவே 7 ஓவர்களி 53 என்ற வெற்றிபெறத் தேவையான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

அப்போது ரஷீத் கான் வந்துதான் பிரேக் போட வேண்டும் என்று எதிர்பார்த்த போது ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆவதற்கு முன்னால் காற்றில் உள்ளே வந்த பந்து பிட்ச் ஆன பிறகு லேசாக வெளியே ஸ்பின் ஆக ராகுலின் தடுப்பாட்டம் தவறான லைனில் அமைய முழுதும் பீட் ஆகி பவுல்டு ஆனார். டெஸ்ட் கிளாஸ் பந்து வீச்சு அது.

அடுத்த ஓவரில் பசில் தம்பி, அருமையான ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் கெய்லை அவசரப்படுத்த புல் ஷாட் மேலே ஏற தம்பியே ஓடி வந்து கேட்ச் எடுத்தார்.

புதிய பேட்ஸ்மென்கள் இருவர் இருக்கும் போது ரஷீத் கானைத் தொடராமல் பந்து வீச்சில் மாற்றம் செய்த கேன் வில்லியம்சன் களவியூகத்தில் வட்டத்துக்குள் பீல்டர்களை நிறுத்தாமல் ஆடியதால் மயங்க் அகர்வால், கருண் நாயர் சிங்கிள்கள், இரண்டுகள் என்று ஓரளவுக்கு நிலைபெறுமாறு ஆடினர்.

கேன் வில்லியம்சன் பவுண்டரி போய் விடக்கூடாது என்று டீப்பில் ஆட்களை நிறுத்த அதே சிங்கிள், இரண்டுகள் என்று எடுத்தாலே ஓரு ஓவர் மீதம் வைத்தாவது வென்றிருக்கலாம் ஆனால் இந்த நுட்பம் இல்லாமல் மயங்க் அகர்வால், ஷாகிப் அல் ஹசனை தூக்கி அடித்து குறிபார்த்து லாங் ஆனில் கேட்ச் அளித்தார்.

கருண் நாயர் மிக அழகாக லெக் பிரேக்குக்கான தடுப்பாட்ட உத்தியைக் கடைபிடித்தார், ஆனால் பந்து அதே லெந்தில் கூக்ளியாக ரஷீத் கானின் கை சாதுரியத்தில் எல்.பி.ஆனார். பிஞ்ச் இறங்கினார் ஒரு சிக்ஸ் விளாசினார், பிறகு அதை ரிபீட் செய்யும் முயற்சியில் டீப்பில் மணீஷ் பாண்டேயின் அபாரமான நூலிழை கேட்சுக்கு வெளியேறினார்.

சந்தீப் சர்மா ஸ்லோயர் பந்தில் மனோஜ் திவாரியைக் காலி செய்தார். பிறகு அண்ட்ரூ டையையும் வீழ்த்தினார் சந்தீப் சர்மா. அஸ்வின் 4 ரன்களில் ரஷீத் கானின் இன்னொரு சாதுரியத்துக்கு அவுட் ஆக 101/9 என்று ஆனது, கடைசியில் முஜீப் 10 ரன்களையும், அங்கிட் ராஜ்புத் 8 ரன்களையும் எடுத்து லேசாக சம்பிரதாயத்தை ஒத்தி வைத்தனர். கடைசியில் பசில் தம்பி ராஜ்புத் ஸ்டம்ப்களைப் பெயர்க்க, விஷயம் முடிந்தது, கிங்ஸ் லெவன் 119 ரன்களுக்குச் சுருண்டது.

இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த பந்து வீச்சு அணி என்று ஒன்றைக் கூற வேண்டுமென்றால் அது சன் ரைசர்ஸ்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x