Last Updated : 26 Apr, 2018 10:17 AM

 

Published : 26 Apr 2018 10:17 AM
Last Updated : 26 Apr 2018 10:17 AM

வயது ஒரு தடையல்ல: கால்காப்பு, கையுறைகளுடன் ஓடியே ரன்களைத் தடுத்த ‘ஆல்ரவுண்ட்’தோனி; ‘தல’ ரசிகர்கள் உற்சாகம்

கிரிக்கெட் விளையாட வயது ஒரு தடையல்ல என்பதையும் உடல்தகுதி எவ்வளவு முக்கியம் என்பதையும் நிரூபிக்கும் விதமாக தோனி ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங், விக்கெட் கீப்பிங், பீல்டிங் என்று ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தார்.

வயது ஒரு எண்ணிக்கைதான், அதற்கும் மன உற்சாகத்துக்கும் உடல் ஒத்துழைப்புக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தோனி தன்னை நிரூபித்து வருகிறார்.

எந்த அணிக்காக ஆடினாலும் தனது அர்ப்பணிப்பையும் கடப்பாட்டையும் வெளிப்படுத்தி 100% தன்னை ஈடுபடுத்தி ஆடக்கூடியவர் தோனி. நேற்று ஆர்சிபிக்கு எதிராக கால்காப்புடனேயே ஓடிச் சென்று பவுண்டரி வரை சென்று கூட ரன்களைத் தடுத்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி.

ஆர்சிபி இன்னிங்ஸின் 3வது ஓவரில் டி காக் ஆடிய புல் ஷாட் ஒன்று டாப் எட்ஜ் எடுக்க பந்து தோனியின் தலைக்கு மேல் பறந்து கொஞ்ச தூரம் சென்றது, தன் கால்காப்புகளுடன் விறுவிறுவென்று பந்தின் பின்னால் ஓடிய தோனி பவுண்டரி செல்லாமல் தடுத்து கையுறையைக் கழட்டிவிட்டு த்ரோ செய்தது ரசிகர்களிடையே பெரிய பாராட்டுதலையும் கரகோஷத்தையும் எழுப்பியது.

மேலும் ஒருமுறை பந்து ஸ்கொயர் திசையில் செல்ல அங்கு பீல்டர்கள் யாரும் இல்லை, விக்கெட் கீப்பிங்கிலிருந்து தோனியே ஓடினார், 40-50 அடி தூரம் ஓடிச்சென்று பந்தை பீல்ட் செய்து த்ரோ செய்தார், 2 ரன்கள் எடுக்கலாமா என்று யோசித்த பேட்ஸ்மென்கள் முடிவை மாற்றிக் கொண்டனர்.

சமீப காலங்களாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவரது இடத்தை சிலர் கேள்விக்குட்படுத்தி வரும் நிலையில் பேட்டிங், விக்கெட் கீப்பிங், விக்கெட் கீப்பிங்கிலேயே ஓடிச்சென்று பீல்டிங், அதிரடி சிக்சர்கள், சாதுரியமான பவுலிங் மாற்றம், புத்திசாலித்தனமான களவியூகம் என்று பழைய உத்வேக தோனியை நினைவூட்டியது ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

ஆர்சிபி ரசிகர்கள், சென்னை ரசிகர்கள் என்று அனைவருமே தோனியின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x