Published : 26 Apr 2018 08:04 AM
Last Updated : 26 Apr 2018 08:04 AM

செய்தித்துளிகள்: துபாய் செல்லும் ஐபிஎல்

எகிப்தில் நடைபெற்று வரும் எல் கவுனா சர்வதேச பிஎஸ்ஏ உலக சீரிஸ் ஸ்குவாஷ் தொடரின் கால் இறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 4-11, 8-11, 2-11 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் லாரா மாஸரோவிடம் தோல்வியடைந்தார்.

இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவண், வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஆகியாரது பெயர்கள் அர்ஜூனா விருதுக் காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 12-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிக், 140-ம் நிலை வீரரான சுலோவேக்கியாவின் மார்ட்டின் கிளிஸானிடம் 2-6, 6-1, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

இந்திய தடகள சங்கத்தின் இணைச் செயலாளரான டோனி டேனியல் (66) மாரடைப்பு காரணமாக நேற்று கொச்சியில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய தடகள சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 12-வது சீசன் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறக்கூடும் என்பதால் பாதுகாப்பு காரணங்களை கருதி ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக மற்றும் புதுச்சேரி பிரிவு கடற்படை சார்பில் பாய்மர படகு போட்டிகள் இந்தியன் நேவி போட்னா கோப்பை-2018’ என்ற பெயரில் சென்னை துறைமுக கடல் பகுதியில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை கடற்படையுடன் இணைந்து மெட்ராஸ் யாட்ச் கிளப்பும் நடத்துகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பு ஏற்று ஏற்கனவே காம்பீர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளநிலையில், இனிமேல், இந்த சீசன் முழுமைக்கும் தனது ஊதியமான ரூ.2.80 கோடியை வாங்க வேண்டாம் என அவர் முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் எஞ்சிய 8 ஆட்டங்களிலும் சாதாரண வீரராக அவர் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.

பலாத்கார வழக்கில் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசாராமையும், பிரதமர் மோடியையும் இணைத்து ஐசிசி ட்விட்டர் பக்கத்திலிருந்து பதிவு பகிரப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐசிசி அந்தப் பதிவை நீக்கி மன்னிப்பு கோரியுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரிக்கெட் சம்பந்தமில்லாத கருத்து, ஐசிசி அதிகாரப்பூர்வ பக்கத்தில் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. இதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். தவறு எங்கு நடந்தது என்பது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம்” என அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x