Published : 25 Apr 2018 07:59 PM
Last Updated : 25 Apr 2018 07:59 PM

ஐபிஎல் 2018: கம்பீர் வழியைப் பின்பற்றுவாரா ரோஹித் சர்மா?

 

ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகளில் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லி அணியைப் போலவே மும்பை இந்தியன்ஸ் அணியும் மோசமாக விளையாடி வருகிறது, அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் மோசமான பார்மில் இருப்பதால், அவரும் கம்பீர் பாணியைப் பின்பற்றுவாரா என்ற கேள்வி கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கடந்த 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே அதிரடியாக ஆடி 94 ரன்கள் சேர்த்துள்ளார். மற்ற போட்டிகள் அனைத்திலும் 15 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை.

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்களும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்களும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்அவுட்டும், நேற்றைய ஆட்டத்தில் 2 ரன்களும் சேர்த்து ரோகித் சர்மா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் பேட்டிங், பந்துவீச்சு நாளுக்கு நாள் மோசமாக இருப்பதை அவர்களின் ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் மும்பை அணி உள்ளது

. திறமையான பேட்ஸ்மன்களான சூரியகுமார் யாதவ், இசான் கிஷான், ரோகித்சர்மா, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, பொலார்ட் உள்ளிட்ட பல வீரர்கள் இருந்தும் பேட்டிங்கில் சோடை போனது.

டெல்லி அணியிலும் திறமையான வீரர்கள் இருந்தும் தோல்வி அடைந்ததால், அந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றும், தனது கவனத்தை பேட்டிங்கிலும் அணியின் வெற்றியிலும் திருப்புவதற்காக கேப்டன் பதவியை கம்பீர் ராஜினாமா செய்தார்.

அதேபோல, ரோகித் சர்மா தனது கேப்டன்ஷிப்பை சரியாகக் கையாளவில்லை, களவியூகத்தை சரியாக அமைக்கவில்லை என்ற விமர்சனங்கள் வரத்தொடங்கிவிட்டன. ஆதலால், அணியின் நலன் கருதி இந்தத் தொடரில் கேப்டன்பொறுப்பை வேறு ஒரு வீரரிடம் ஒப்படைத்து ரோகித் சர்மாவும் பேட்டிங்கில் கவனத்தை திசைதிருப்பினால், மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இல்லாவிட்டால், தொடர்ந்து ரோகித் சர்மாவின் மோசமான ஆட்டத்தையும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி நோக்கிய ஆட்டத்தையுமே ரசிகர்கள் பார்க்க வேண்டியது இருக்கும்.

டெல்லி அணியின் கேப்டன் கம்பீர் தனதுபதவியை ராஜினாமா செய்துவிட்டதால், நிச்சயம் அடுத்த போட்டியில் அந்தஅணியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என நம்பலாம். அந்த யுத்தி சரியாக செயல்படும்பட்சத்தில் அதேயே ரோகித்சர்மாவும் பின்பற்றலாம்.

ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் இதற்கான முன்னுதாரணமாக ரிக்கி பாண்டிங் திகழ்ந்துள்ளார்.  அணியின் நலனுக்காக இப்படிச் செய்வதில் தவறில்லை என்ற கருத்து வலுபபெற கவுதம் கம்பீர் தலைமைத்துவத்தைத் துறந்ததையடுத்து ரோஹித் சர்மாவுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x