Last Updated : 25 Apr, 2018 07:22 PM

 

Published : 25 Apr 2018 07:22 PM
Last Updated : 25 Apr 2018 07:22 PM

ஐபிஎல் சீசன் முழுவதும் சம்பளம் வேண்டாம்: தோல்விக்கு பொறுப்பேற்று கம்பீர் உணர்ச்சிகரம்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று தனது கேப்டன் பதவியை ஸ்ரேயாஸ் அய்யருக்கு விட்டுக்கொடுத்த கவுதம் கம்பீர், இந்த தோல்வியை ஈடுகட்ட இந்த சீசன் முழுவதும் தனக்கு சம்பளத் தொகையான ரூ.2.8 கோடியை வாங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஒருபோட்டியில் மட்டுமே வென்றுள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து 2 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் இருக்கிறது.

கேப்டன் கம்பீரும் ஒருபோட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார், மற்ற 5 போட்டிகளிலும் 15 ரன்களுக்குள் ஆட்டமிழந்து மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 5 போட்டிகளில் 85 ரன்கள் மட்டுமே கம்பீர் சேர்த்தார்.

தொடர் தோல்விகள், மனஅழுத்தம், காரணமாக பேட்டிங்கிலும் கவனம் செலுத்த கம்பீரால் முடியவில்லை. இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டு, விமர்சிக்கத் தொடங்கினார்கள். இதையடுத்து, டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கம்பீர் இன்று அறிவித்தார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பு ஏற்று, இந்த சீசன் முழுவதும் சம்பளம் பெறப்போவதில்லை என்று கம்பீர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கம்பீரின் நெருங்கியவட்டாரமும், டெல்லி அணி நிர்வாகிகளுள் ஒருவர் கூறுகையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பு ஏற்று ஏற்கனவே கம்பீர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இனிமேல், இந்த சீசன் முழுமைக்கும் தனது ஊதியமான ரூ2.80 கோடியை வாங்கப்போவதில்லை என கம்பீர் முடிவு செய்துள்ளார். ஆனால், தொடர்ந்து மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்.

கவுதம் கம்பீர் மிகச்சிறந்த பேட்ஸ்மென், சிறந்த மனிதர் ஆனால், தொடர் தோல்விகளால் மனவேதனை அடைகிறார்.கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்தவுடன் அணியில் இருந்து விலகிவிட கம்பீர் முடிவு செய்தார். ஆனால், அணி நிர்வாகத்தினர் சமாதானம் செய்ததையைடுத்து அவர் அந்த முடிவை கைவிட்டார்.

இந்த ஐபில் தொடர் முழுவதும் கம்பீர் விளையாடுவார், ஐபிஎல் தொடருக்கு பின் சில முக்கிய முடிவுகளை கம்பீர் எடுப்பார் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x