Published : 25 Apr 2018 04:00 PM
Last Updated : 25 Apr 2018 04:00 PM

யாரைத்தான் குறை சொல்வது? பொறுப்பாக ஆடவில்லை - மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே கடும் ஏமாற்றம்

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக தோற்கவே முடியாத 118 ரன்கள் இலக்கை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனேயை கடும் ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.

“எங்களை நாங்களே இந்த நிலைக்கு ஆளாக்கிக் கொண்டோம் யாரைத்தான் குற்றம் சொல்வது? தோல்வியடைந்த போட்டிகளில் நன்றாகத்தான் ஆடினோம், இந்தப் போட்டிகள் எந்தப்பக்கம் வேண்டுமானாலும் சென்றிருக்கலாம்.

ஆனால் இந்தப் போட்டி (சன் ரைசர்ஸ்) மிகவும் ஏமாற்றமளிக்கிறது, பிட்சில் ஏதோ பூதங்கள் இருப்பது போல் ஆடினோம். நாங்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை, இதுதான் கடும் ஏமாற்றமளிக்கிறது. பனிப்பொழிவு எதிர்பார்த்தது போல் வந்தது, ஆனால் ஒருவரும் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை. இது துயரத்தை அளிக்கிறது.

ஹர்திக் பாண்டியாவுடன் தொடக்கத்திலிருந்தே பணியாற்றி வருகிறோம். சீசனுக்கு முந்தியும் அவருடன் பயிற்சியில் ஈடுபட்டோம். நம் வீரர்களையும் நாங்கள் ஆய்வுக்குட்படுத்துகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரேமாதிரி ஆட முடியாது, வீரர்கள் வளர்ச்சியடைய வேண்டும். ஹர்திக் போன்ற வீரர்கள் கற்றுக் கொள்வார்கள். கடின உழைப்புத் தேவைப்படுகிறது. வெறும் திறமை மட்டும் நம்மைக் கொண்டு சேர்க்காது. சர்வதேச பவுலர்கள் வந்து பல்வேறு விஷயங்களை நமக்கு எதிராக செலுத்தும் போது அதை கூர்ந்து கவனித்து கற்றுக் கொள்ள வேண்டும். வளர்ச்சியடைய வேண்டும் இல்லையெனில் சீராக ஆட முடியாது.

இருக்கும் வீரர்களைக் கொண்டுதான் ஆட முடியும். வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனாலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. இது கூட கொஞ்சம் சீக்கிரமானதுதான், எனக்கு இந்தத் தோல்வியை சிந்திக்க 24 மணி நேரங்கள் வேண்டும். தோல்வி குறித்து உணர்ச்சிவயப்படக்கூடாது என்பது முக்கியம்” என்றார் ஜெயவர்தனே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x