Published : 24 Apr 2018 01:51 PM
Last Updated : 24 Apr 2018 01:51 PM

கோலியை தேடிச்சென்று ஒரு ஷாம்பைன் பாட்டிலை இருவரும் பகிர்ந்து குடிப்போம்; சச்சின் நெகிழ்ச்சி: எதற்குத் தெரியுமா?

 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நேரில் தேடிச் சென்று ஒரு ஷாம்பைன் பாட்டில் மதுவை இருவரும் பகிர்ந்து குடிப்போம் என்று சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஏன், எதற்காக விராட் கோலியை தேடிச்செல்வேன் என்பதை மும்பையில் சமீபத்தில் நடந்த போரியா மஜும்தாரின் ‘லெவன் காட்ஸ் அன்ட் ல பில்லியன் இந்தியன்ஸ்’ புத்தக வெளியீட்டு விழாவில் சச்சினும், விராட் கோலியும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 463 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 49 சதங்களும், 96 அரைசதங்களும் அடங்கும். அதேபோல 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 15,921 ரன்கள் குவித்துள்ளார். இதில் 51 சதங்களும் 68 அரை சதங்களும் அடங்கும்.

இப்போதுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சதம் சாதனையை நெருங்கும் தொலைவில் இருப்பவர் விராட் கோலி மட்டுமே. விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் அடித்துள்ளார். இன்னும் 15 சதங்கள் அடித்தால் சச்சினின் ஒருநாள் சதம் சாதனையை விராட் கோலி முறியடித்துவிடுவார்.

இது குறித்து புத்தக வெளியீட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கரிடமும், விராட் கோலியிடமும் கேள்வி முன்வைக்கப்பட்டது. விராட் கோலி உங்களின் ஒருநாள் சதம் சாதனையை முறியடித்து விட்டார். 50 ஷாம்பைன் பாட்டில் மது பரிசாக அளிப்பீர்களா என சச்சினிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சச்சின் டெண்டுல்கர் புன்னகையுடன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஒருநாள் போட்டிகளில் நான் அடித்துள்ள 49 சதத்தை முறியடித்து, 50-வது சதத்தை விராட் கோலி அடித்துவிட்டால், அவருக்கு 50 ஷாம்பைன் பாட்டில்களை எல்லாம் அனுப்பிவைக்க மாட்டேன். நானே ஒரு ஷாம்பைன் பாட்டிலை வாங்கி, அவரைத் தேடிச்சென்று பாராட்டுவேன். அவருடன் அந்த ஷாம்பைன் பாட்டிலை பகிர்ந்து, இருவரும் ஒன்றாகக் குடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று தெரிவித்தார். இந்தப்பதிலை சச்சின் கூறியதும் அரங்கில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

அப்போது விராட் கோலி கூறியதாவது:

நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை சச்சின் டெண்டுல்கர் விளையாடும் விதத்தைப் பார்த்துதான் செதுக்கிக்கொண்டேன். கடந்த 2008-ம் ஆண்டு நான் இந்திய அணியில் இடம் பெற்றேன். என்னை ஒரு ஜூனியர் வீரராகப் பார்க்காமல், சச்சின் டெண்டுல்கர் என்னுடன் அன்பாகப் பழகினார், அவர் மீது அதிகமான மதிப்பு வைத்திருந்தேன்.

எனக்கு அதிகமான, நெருக்கமான நண்பர்கள் மிகப்பெரிய அளவுக்கு இல்லை. இப்படித்தான் பல ஆண்டுகள் என் வாழ்க்கையில் சென்றது. ஏனென்றால் எனக்குச் சவாலான நேரங்களில் எனக்கு உதவியாக இருந்தவர்களை நான் மறக்கமாட்டேன். அந்த மனிதர்களை மதிப்பேன். அந்தவகையில் சச்சின் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். சச்சினின் பாதிப்பு என் வாழ்க்கையில் பல இடங்களில் இருக்கிறது. என் கிரிக்கெட் வாழ்க்கை வளர்ச்சியிலும் என்னைப் பாதித்துள்ளார். நான் அவரின் முக்கியத்துவத்தை அறிந்தவன்.

உங்கள் வாழ்க்கையில் யாரேனும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் இருந்தால், அவர்கள் பாராட்டுவதைக் காட்டிலும் சிறப்பான விஷயம் வேறு ஏதும் இருக்க முடியாது. அதுபோலத்தான் சச்சின் டெண்டுல்கர் எனக்கு முக்கியமானவர்.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x