Published : 24 Apr 2018 09:54 AM
Last Updated : 24 Apr 2018 09:54 AM

கவுதமின் அதிரடி வாழ்நாள் அனுபவம்: சஞ்சு சாம்சன் கருத்து

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் கிருஷ்ணப்பா கவுதம் அதிரடியாக விளையாடியது அவருக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் சிறந்த வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. அந்த அணி வீரரான கிருஷ்ணப்பா கவுதம் கடைசி கட்டத்தில் 11 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முன்னதாக இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 52 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 40 ரன்களும் சேர்த்து சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்திருந்தனர்.

மும்ப அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 3 ஓவர்களுக்கு ராஜஸ்தான் வெற்றிக்கு 43ரன்கள் தேவைப்பட்டன. முஸ்டாபிஸூர் வீசிய 18-வது ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸர் அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்து அணியின் நம்பிக்கை அதிகரிக்கச் செய்தார் கிருஷ்ணப்பா கவுதம். 12 பந்துகளில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜோப்ரா ஆர்ச்சருடன் இணைந்து பும்ரா வீசிய 19-வது ஓவரையும் பதம் பார்த்தார் கிருஷ்ணப்பா கவுதம். இந்த ஓவரில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் விளாசப்பட்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் பந்தில் ஆர்ச்சர் (8) ஆட்டமிழந்தார். 2-வது பந்தில் கவுதம் பவுண்டரி அடிக்க வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. 3வது பந்தில் ரன் ஏதும் அடிக்காமல், 4-வது பந்தை லெக்திசையில் கவுதம் சிக்ஸர் விளாச ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிவடைந்ததும சஞ்சு சாம்சன் கூறும்போது, “கவுதமின் ஆட்டத்தை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. இது அவருக்கு வாழ்நாள் அனுபவமாக இருக்கும், எங்களுக்கும்தான்.

கவுதமுக்குதான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் என கருதுகிறேன். ஆனால் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானதுதான். ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆர்ச்சரும் சிறந்த பங்களிப்பு செய்திருந்தார். 3 விக்கெட்கள் கைப்பற்றிய அவர், பேட்டிங்கின் போது சில பவுண்டரிகளையும் அடித்தார். ஆட்ட நாகயன் தேர்வு குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. கடைசி வரை நான் களத்தில் நின்று ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும்.

ஆனால் மும்பை அணியினர் சிறப்பாக பந்து வீசினார்கள். எங்களது வெற்றிக்கான பணியை கவுதம் சிறப்பாக செய்தார். தொடக்க பேட்டிங் பார்ட்னர்ஷிப் சிறப்பானதாக இல்லை என்பது உண்மைதான். வித்தியாசமான சேர்க்கையை முயற்சித்து வருகிறோம். பீல்டிங் விஷயத்திலும் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியது உள்ளது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கில் சில தவறுகள் செய்தோம். அரை மனதுடன் கூடிய முயற்சிகள் மற்றும் இரு கேட்ச்களை தவறவிட்டோம்’’ என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x