Published : 24 Apr 2018 09:07 AM
Last Updated : 24 Apr 2018 09:07 AM

என்ன இலக்காக இருந்தாலும் தோல்வியா? தலையில் கை வைத்த கம்பீர்; முஜீபின் தைரியத்தில் பஞ்சாப் வெற்றி

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 22-வது போட்டியில் கிங்ஸ் லெவனின் வெகு குறைவான 144 ரன்கள் வெற்றி இலக்கைக் கூட எட்ட முடியாமல் டெல்லி டேர் டெவில்ஸ் தோல்வியடைந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் சிஎஸ்கேயை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தது.

கிறிஸ் கெய்ல் ‘காயம்’ காரணமாக (உஷ்... கண்டுக்காதீங்க தருணம்) இல்லாததால் பஞ்சாப் அணி 143/8 என்று மடிந்தது.

தொடர்ந்து ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் ஷ்ரேயஸ் ஐயர் கிரீசில் இருக்க 24 பந்துகளில் 43 ரன்கள் தேவை.

பாரிந்தர் ஸ்ரண் வீச வந்தார் டெவாட்டியா முதல் பந்து லெக் திசையில் ஒதுங்கினார், ஒதுங்க ஒதுங்க பந்தை அவரிடமே கொண்டு சென்றார் ஸ்ரண் ஆனால் லெந்த் தவறாக தலைக்கு மேல் சிக்ஸ். மேலும் ஒரு ஸ்வீப் ஷாட் பவுண்டரி அடித்தார் டெவாட்டியா. இதே ஓவரில் ஐயர் ரன் அவுட் ஆக வேண்டிய வாய்ப்பையும் பிஞ்ச் த்ரோவை சரியாக சேகரிக்காமல் விட்ட ஸரண் 15 ரன்களைக் கொடுத்தார்.

18 பந்துகளில் 28 என்று மிகச்சரியாக டெல்லி வெற்றிக்கு வாகாக இருந்தது. ஐயர் 38 ரன்களுடனும் டெவாட்டியா 18 ரன்களுடனும் டை வீசிய 18 வது ஓவரை எதிர்கொண்டனர். 3 பந்துகளில் ஒரு வைடுடன் 4 ரன்கள் வந்தது. அடுத்து யுவராஜ் சிங்கின் தேவையற்ற த்ரோவினால் 2 ரன்கள் சேர்ந்தது. கடைசி பந்தில் அண்ட்ரூ டை விரல்கள் மூலம் வீசி வேகத்தைக் குறைத்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார். எட்ஜ் ஆனது ராகுல் கேட்ச் எடுக்க டெவாட்டியா 24 ரன்களில் வெளியேறினார். இந்த ஓவர் மிக முக்கிய ஓவராக அமைந்தது. இதில் 7 ரன்கள்தான் வந்தது.

அடுத்த ஓவரில் சரண் மீண்டும் வந்து லியா பிளெங்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் ஷ்ரேயஸ் ஐயர் அடிக்க வேண்டிய 2 பந்துகளை பவுண்டரி அடிக்காமல் சிங்கிள்தான் எடுத்தார் (இன்னொரு உஷ்! கண்டுக்காதீங்க தருணம்) கடைசி பந்து ஃபுல், வைடு பந்து அடிக்க வேண்டிய பந்து மிஸ்ரா தேவையில்லாமல் சுற்றி மட்டையில் சிக்கவில்லை (மீண்டும் ஒரு உஷ்...) டாட் பால் ஆனது. 19-வது ஓவரில் 4 ரன்கள்தான் வந்தது.

கடைசி ஓவரில் இதனால் 17 ரன்கள் தேவை என்ற நெருக்கடி ஏற்பட்டது. முதல் பந்தை ஷ்ரேயஸ் ஐயரால் மட்டையில் பட வைக்க முடியவில்லை. அடுத்த பந்து நேராக ஒரு சிக்ஸ், இது அபாரமான ஷாட். அடுத்த பந்தி லாங் ஆஃபுக்கு அடித்தாலும் ஐயர் சிங்கிள் எடுக்கவில்லை. அடுத்த பந்து ஐயர் ஷாட்டை சரியாக ஆடவில்லை. அது மிஸ் பீல்ட் ஆக 2 ரன்களானது. அடுத்த பந்தை முஜீப் லெக் திசையில் வீச நான்கு ரன்களுக்கு விரட்டினார் ஐயர். கடைசி பந்தில் 5 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிளைட் இல்லாமல் வீசப்பட்ட பந்து லாங் ஆஃபில் தூக்கி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஐயர். 139/8 என்று முடிந்தது. 57 ரன்களுக்கு 45 பந்துகளை அவர் எடுத்துக் கொண்டார், புதிர் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான் 3 ஓவர்களில் 13 ரன்கள்தான் கொடுத்தார், கடைசி ஓவரில் 12 ரன்கள் கொடுத்து 25 ரன்களுக்கு 2 விக்கெட் என்று முடிந்தார்.

கடைசி ஓவர் உட்பட ஏகப்பட்ட ‘கண்டுக்காதீங்க’ தருணம் இந்தப் போட்டியில் இருந்தது.

முன்னதாக 144 ரன்கள்தானே கம்பீரே முடித்து விடுவார் என்று யாரேனும் நினைத்திருந்தால் அது தவறு என்று நிரூபித்தார் வேகப்பந்து வீச்சாளர் அங்கிட் ராஜ்புத், இவர் வேகம் மற்றும் பவுன்ஸில் சிறந்து விளங்க அஸ்வின் இவரை தொடர்ச்சியாக 4 ஒவர்கள் வீசச் செய்தார், இதில் 15 டாட் பால்களுடன் 23 ரன்களுக்கு 2 விக்கெட் என்று டெல்லிக்கு 144 எளிதல்ல ஜெண்டில்மேன் என்று உணர்த்தினார்.

10 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் என்று அபாரமாக ஆடி வந்த ஷாவை பவுல்டு செய்தார். பிறகு அதிரடி வீரர் மேக்ஸ்வெலை தன் ஆஃப் கட்டர் மூலம் டாப் எட்ஜ் செய்ய வைத்தார்.

ரெய்னா போலவே ஷார்ட் பிட்ச் பந்துகளில் சோடை போகத் தொடங்கியுள்ள கம்பீர் மீண்டும் ஆண்ட்ரூ டை பந்தை லெக் திசையில் அடிக்கப் பார்த்து மட்டையின் முன் விளிம்பில் பட்டு மிட் ஆஃபில் கேட்ச் ஆனார். பவர் பிளே முடிவில் 42/3.

அதிரடி வீரர் ரிஷப் பந்த் சொற்ப ரன்களில் முஜீப் பந்தில் பவுல்டு ஆனார், அபாரமான பந்து இது. கிரிஸ்டியன் ரன் அவுட் ஆனார். அஸ்வின் ஒரு முனையில் 4 ஓவர்களில் 19 ரன்கள்தான் கொடுத்தார். ஐயர், டெவாட்டியா வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தனர், ஆனால் கடைசியில் முஜீபின் தைரியத்திலும் ஐயரின் சொதப்பலான முந்தைய ஓவர் பேட்டிங்கினாலும் டெல்லி தோற்றது.

முன்னதாக கிங்ஸ் லெவன் அணி பேட்டிங்கும் பூபோல உதிர்ந்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 34 ரன்கள் எடுத்தார், டெல்லி வேகப்பந்து பவுலர் ஆவேஷ் கான் (மத்திய பிரதேசம்) 148கிமீ வேகப்பந்தில் ஏரோன் பிஞ்ச் விக்கெட்டைக் காலி செய்தார். இவர், போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த பிளெங்கெட் 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைபற்றினார்.

யுவராஜ் சிங்கின் தொடரும் தடவல்:

8 வது ஓவரில் 60/3 என்று கிங்ஸ் லெவன் இருந்தது. 31 பந்துகள் பவுண்டரி வராமல் ஆடினால் இது என்ன டி20யா? யுவராஜ் சிங் பிரச்சினைதான். எந்தப் பந்து வீச்சுமே அவருக்கு சரிப்பட்டு வரவில்லை, ரப்பர், பிளாஸ்டிக் பந்து என்று எதில், யார் போட்டாலும் தடவலன்றி வேறொன்றுமறியேன் பராபரமே என்று 17 பந்துகளில் 14 ரன்களை போராடி எடுத்து ஆவேஷ் கான் வேகத்தில் புல் ஷாட் மட்டையின் அடியில் பட்டு ரிஷப் பந்த்திடம் கேட்ச் ஆனது.

டேவிட் மில்லருக்க்கு 2 கேட்ச்கள் விடப்பட்டும் அவர் அதைப் பயன்படுத்தவில்லை, ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கவரில் ஒரு கேட்சை விட்டார், பிறகு பிரிதிவி ஷா ஒரு கேட்சை பாயிண்டில் விட்டார், ஆனாலும் மிஸ்ராவை அடித்த சிக்ஸ் தவிர 26 ரன்களுக்கு மேல் அவரால் எடுக்க முடியவில்லை. 143/8 என்று முடிந்தது கிங்ஸ் லெவன் அணி. ஆட்ட நாயகன் ராஜ்புத்.

மொத்தத்தில் யார் தோற்பது என்று இருவருமே ஆடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

ஆவேஷ்கான், அங்கிட் ராஜ்புட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் பவுலிங்கும் முஜீபின் கடைசி ஓவர் தைரியமும் தவிர இம்மாதிரி ஐபிஎல் போட்டிகளினால் ஆய பயன் என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x