Published : 23 Apr 2018 09:01 AM
Last Updated : 23 Apr 2018 09:01 AM

கடைசிநேர ஹீரோ கவுதம்: ராஜஸ்தான் நம்பமுடியாத வெற்றி - கோட்டைவிட்ட மும்பை

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் விரட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் இருக்கையின் நுனியில் அமரவைத்த அற்புதமான ஆட்டமாக அமைந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிபெறும் என்று கேப்டன் ரஹானே கூட நம்பி இருக்கமாட்டார். ஆட்டத்தின் போக்கை திசைமாற்றி, கவுதம் கடைசி நேர ஹீரோவாக ஜொலித்தார். பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய ஜோப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் சரிவுக்கு காரணமாக அமைந்தார். ஆட்டநாயகன் விருதையும் ஆர்ச்சர் பெற்றார்.

மும்பை வீண்

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஆட்டமா என வியந்து கேட்கும் அளவுக்கு நேற்றைய ஆட்டம் தரமற்ற,பொறுப்பற்றதாக இருந்தது.

ரோகித் சர்மாவின் ேகப்டன்ஷிப் இந்த அளவுக்கு மோசமாகவும், களவியூகம் அமைக்கத் தெரியாமல் மேம்போக்காக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். வெண்ணை திரண்டு வரும்போது பானையை உடைத்த பழமொழிக்கு ஏற்ப வெற்றி திரண்டுவரும் போது, மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் கடைசிநேர பந்துவீச்சும், பீல்டிங்கும் பானையை உடைத்தது போல இருந்தது.

பேட்டிங்கை பொறுத்தவரை சொல்லவே தேவையில்லை சூரியகுமார்யாதவ், இஷான் கிஷான் இருவரும் இல்லாவிட்டால் மும்பை இந்தியன்ஸ் நிலைமை அதோகதிதான்….கடைசி 37 ரன்களைச் சேர்க்க 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான பேட்டிங்கை மும்பை இந்தியன் வெளிப்படுத்தியதை என்னவென்று சொல்வது.

3-வது வெற்றி

இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் 5-இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 தோல்வி, ஒருவெற்றியுடன் 2 புள்ளிகள் மட்டும் பெற்று 7-ம் இடத்தில் உள்ளது.

மாற்றம்

ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக ஃபார்மில் இல்லாத ஸ்டூவர்ட் பின்னி கழற்றிவிடப்பட்டது அந்த அணிக்கு ப்ளஸ்பாயின்ட். லாஹின் நீக்கப்பட்டு ஜோப்ரா ஆர்ச்சர், தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டு இருந்தனர். மும்பை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

டாஸ்வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றது.

கிஷான் சிறப்பு

சூரியகுமார் யாதவ், லீவிஸ் ஆட்டத்தை தொடங்கினார்கள். தவால் குல்கர்னி முதல் ஓவரிலேயே மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். 4-வது பந்தில் லீவிஸை டக்அவுட் முறையில் பெவிலியனுக்கு விரட்டினார். 2-வதாக இஷான் கிஷான் களமிறங்கினார். கடந்த சில போட்டிகளாக கடைசி வரிசையில் வாய்ப்பு பெற்ற இஷான் கிஷான் இந்த முறை 3-வது வீரராக களமிறங்கினார். அந்த வாய்ப்பை கிஷான் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.

இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். குல்கர்னி வீசிய 5-வது ஓவரில் கிஷான் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிக்க, யாதவும் ஒரு சிக்ஸர் அடித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி பவர்ப்ளேயில் 43 ரன்கள்சேர்த்தது. அதன்பின் இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள், சிக்ஸர் அடித்து ரன்களைச் சேர்த்தனர்.

அரைசதம்

கோபால் வீசிய 10-வது ஓவரில் கிஷான் 2 சிக்ஸர்கள் அடிக்க, யாதவ் ஒரு பவுண்டரி அடித்து 30 பந்துகளில் அரைசத்தை நிறைவு செய்தார். ஸ்டோக்ஸ் வீசிய 11-வது ஓவரில் யாதவுக்கு கேட்சை கோட்டைவிட்டார் ஸ்டோக்ஸ்.

நிதானமாக பேட் செய்த கிஷான் 35 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இருவரின் பாட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது. இதுதான் இந்த சீசனின் அதிகபட்சமாகும்.

அருமை கூட்டணி

சிறப்பாக பேட் செய்து வந்த கிஷானை 58 ரன்களில்(42பந்துகள்) வெளியேற்றினார் குல்கர்னி. கிஷான் கணக்கில் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 129 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

16-வது ஓவரை உனட்கத் வீசினார். யாதவ் 72 ரன்களில்(47பந்துகள்) ஆட்டமிழந்தார்.இவர் கணக்கில் 3சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய சர்மா அதே ஓவரின் 4-வது பந்தில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் அணி வகுப்பு நடந்தது. பெவிலியனில் இருந்து களத்துக்கு வருவதும், மீண்டும் பெவிலியன் திரும்புவதும் என வருவதும் போவதும் என இருந்தனர். ஒருவர் கூட நிலைத்து பேட் செய்யவில்லை.

ஆர்ச்சர் அசத்தல்

கேப்டன் ரோகித் சர்மா வந்தவேகத்தில் டக்அவுட்டில் வெளியேறினார். குருனல் பாண்டியா, பொலார்ட் ஜோடி சிறிதுநேரமே தாக்குப்பிடித்தது. ஆர்ச்சர் வீசிய 19-வது ஓவரில் பாண்டியா 7 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கியா ஹர்திக் பாண்டியாவும் ஒரு பவுண்டரி அடித்து அதே ஓவரின் 4-வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த மெக்லனகனும் வந்தவுடன் போல்டாகி டக்அவுட்டில் சென்றார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை ஆர்ச்சர் கைப்பற்றி மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். கடைசி ஓவரில் பொலார்ட் 4 ரன்கள் சேர்த்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 130 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த 37ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், குல்கர்னி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வலுவற்ற தொடக்கம்

168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இந்த அணியிலும் தொடக்கம்தான் பிரச்சினையாக இருந்தது. ரஹானே, திரிபாதி களமிறங்கினார்கள். இருவரும் 6-வது ஓவர்களுக்குள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். குர்னல் பாண்டியா வீசிய 3-வது ஓவரில் 9 ரன்கள் சேர்த்தநிலையில் திரிபாதி ஆட்டமிழந்தார். 6-வது ஓவரில் மெக்லனகன் பந்துவீச்சில் ரஹானே 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி இழந்தது. பவர்ப்ளேயில் அந்த அணி 43 ரன்கள் சேர்த்தது.

பொறுப்பான ஆட்டம்

3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாம்ஸன், ஸ்டோக்ஸ் அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். பவுண்டரி, சிக்ஸர் அரிதாக அடித்து ரன்களை சிங்கிலாகச் சேர்ப்பதில் குறியாக இருந்தனர். மெக்லனஹன் வீசிய 11-வது ஓவரில் ஸ்டோக்ஸ் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்தார்.

ஹர்திக் வீசிய 15-வது ஓவரில் ஸ்டோக்ஸ் 40 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் போல்டாகி வெளியேறினார். இவர் கணக்கில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 72ரன்கள் சேர்த்தனர்.

அதன்பின் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். 36 பந்துகளில் சாம்ஸன் அரைசத்தை நிறைவு செய்தார். பும்ரா வீசிய 16-வது ஓவரில் சாம்ஸன் 52 ரன்கள்(39பந்துகள்,4பவுண்டரி) சேர்த்தநிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்லர் போல்டாகி வெளியேறினார்.

கடைசிநேர பரபரப்பு

கடைசி 3 ஓவர்களுக்கு ராஜஸ்தான் வெற்றிக்கு 43ரன்கள் தேவைப்பட்டது. இப்போதுகூட யாரும் ராஜஸ்தான் வெற்றி பெறும் என நம்பவில்லை.

முஸ்தபிசுர் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் கிளாசன் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஆர்ச்சரும், கவுதமும் களத்தில் இருந்தனர். அந்த ஓவரின் 5-வது,6-வது பந்தில் கவுதம் ஒருசிக்ஸர், ஒருபவுண்டரி அடித்து பதற்றத்தை அதிகப்படுத்தினார்.

திசைமாற்றிய ஓவர்

12 பந்துகளில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தில் ஆர்ச்சர் பவுண்டரி அடித்து, 2-வது பந்தில் 2 ரன்கள் சேர்்த்தார் 3-வது பந்து நோபாலானது. ப்ரீஹிட்டில் ஒரு ரன் எடுத்தார் ஆர்ச்சர். 4-வது பந்தில் 2 ரன்கள் சேர்த்த கவுதம், அடுத்த இருபந்துகளிலும் 2 பவுண்டரிகள் அடித்து பதற்றத்தை உச்சிக்கு கொண்டு சென்றார், போட்டி பரபரப்பை எட்டியது.

எதிர்பாராதவெற்றி

கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை. ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரின் முதல் பந்தில் ஆர்ச்சர் 8 ரன்கள் சேர்த்த நிலையில் காட் அன்ட்போல்ட் முறையில் வெளியேறினார். 2-வது பந்தை கவுதம் சந்தித்தார். கவுதம் பவுண்டரி அடிக்க வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. 3வது பந்தில் ரன் ஏதும் அடிக்காமல், 4-வது பந்தை பேக்புட் செய்து, லெக்திசையில் சிக்ஸர் அடிக்க ராஜஸ்தான் அணி பரபரப்பு வெற்றியைப் பெற்றது.

19.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது. கவுதம் 11 பந்துகளில் 33 ரன்களுடன்(2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்)உனத்கட் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x