Published : 21 Apr 2018 07:39 AM
Last Updated : 21 Apr 2018 07:39 AM

பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்: கிறிஸ் கெயிலை சமாளிக்குமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ?

ஐபிஎல் டி 20 தொடரில் இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மாற்றங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ள அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெரிய அளவிலான ஹிட்டர்களான ஆந்த்ரே ரஸ்ஸல், கிறிஸ் கெயில் ஆகியோர் இடையிலான நேரடி மோதலாக பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் நேற்றுமுன்தினம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 104 ரன்கள் விளாசி இந்த சீசனில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தத் தொடரில் சிறந்த பந்து வீச்சை கொண்ட அணியாக கருதப்படும் ஹைதராபாத்துக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் தன் மீது குவியச் செய்துள்ளார் கிறிஸ் கெயில். இந்த ஆட்டத்தில் அவர், 11 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதில் 6 சிக்ஸர்கள், உலகின் சிறந்த தரவரிசையில் உள்ள டி 20 சர்வதேச பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கு எதிராக விளாசப்பட்டதாகும்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் தன்னை ஏலம் எடுக்காமல் ஊதாசீனப்படுத்திய பல்வேறு அணிகளுக்கு பொருத்தமான வகையில் தனது மட்டையின் விளாசலால் கிறிஸ் கெயில் பதிலடி கொடுத்ததாகவே கருதப்படுகிறது. 38 வயதான கிறிஸ் கெயில் கடந்த 10 சீசன்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடிய நிலையில் இந்த சீசனுக்கான ஏலத்தில் அவரை யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. அந்த சூழ்நிலையில்தான் பஞ்சாப் அணியின் ஆலோசகரான வீரேந்திர சேவக், கிறிஸ் கெயில் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கினார்.

முதல் இரு ஆட்டங்களிலும் கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் கிடைத்த பொன்னான வாய்ப்புகளை முழுமையாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற ஆட்டத்தில் கிறிஸ் கெயில் 63 ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு கிறிஸ் கெயில் கூறும்போது, “ஏராளமான மக்கள் நான், எனது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக கூறினார்கள். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க இங்கு வரவில்லை. கிரிக்கெட்டை மகிழ்வுடன் விளையாடி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்” என்றார்.

ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் மோதலில் சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நரேன், குல்தீப், பியூஸ் சாவ்லா, நித்திஷ் ராணா ஆகியோரிடம் இருந்து சவால்களை கிறிஸ் கெயில் எதிர்கொள்ளக்கூடும். இந்த நால்வர் கூட்டணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட்டாக 14 ஓவர்களை வீசி, 5 விக்கெட்களை வீழ்த்தியதுடன் எதிரணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்கள்.

மாற்றங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ள பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகவர்வால், கருண் நாயர் ஆகியோரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சளைத்தவர்கள் இல்லை. மேலும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வரிசையில் ஆரோன் பின்ச், யுவராஜ் சிங் ஆகியோர் இருப்பதும் கூடுதல் பலம்.

இவர்கள் இருவரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லையென்றால், இவர்கள் அபாயகரமான வீரர்களாகவே கருதப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அணி நிர்வாகத்தால் குறுகிய வடிவிலான ஆட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள அஸ்வின் அணியை சிறப்பாக நடத்தி வீரர்களின் திறனை வெளிக் கொண்டுவருவதில் முன்னேற்றம் கண்டு வருவது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. 4 ஆட்டத்தில் 3 வெற்றிகளுடன் பஞ்சாப் அணி 6 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும் ரன்விகித அடிப்படையில் (+0.277) பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.

சுழற்பந்து வீச்சில் 17 வயதான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப், இந்தத் தொடரில் அனைவராலும் கவனிக்கப் படக்கூடிய வீரராக மாறி உள்ளார். 17 வயதான அவர், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியை நேர்த்தியாக ஆட்டமிழக்க செய்திருந்தார். 4 ஆட்டங்களில் மிக சிக்கனமாகவே ரன்களை விட்டுக் கொடுத்துள்ள (சராசரியாக 6.80) முஜீப்பிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஆட்டங்களில், 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் (நெட் ரன் ரேட் +0.825) முதலிடம் வகிக்கிறது. ஆட்டத்தை தனிப்பட்ட ஒரு வீரராக கையாண்டு வெற்றியை தேடித் தரும் வீரராக ஆந்த்ரே ரஸ்ஸல் திகழ்கிறார். கடைசியாக டெல்லி அணிக்கு எதிராக 12 பந்துகளில் 41 ரன்கள் விளாசி மிரளச் செய்திருந்தார். கொல்கத்தா அணிக்கு இந்த சீசனில் மிகப் பெரிய ஆதாயமாக நித்திஷ் ராணா உள்ளார். கடந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய அவர், தற்போது கொல்கத்தா அணியில் ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த ஆட்டங்களில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ராணா, பேட்டிங்கில் அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார்.

பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டாலும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி, ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஜிங்கய ரஹானே ஆகியோரது விக்ெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தார் ராணா. இன்றைய ஆட்டத்திலும் ஆல்ரவுண்டராக அவரிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படக்கூடும். இவர்களுடன் சுனில் நரேன், ராபின் உத்தப்பா ஆகியோரும் பேட்டிங்கில் மிரட்ட காத்திருக்கின்றனர். கிறிஸ் லின், இந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் பெரிய அளவிலான இன்னிங்ஸை விளையாட வேண்டிய நிலையில் அவர் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x