Published : 17 Apr 2018 09:20 AM
Last Updated : 17 Apr 2018 09:20 AM

என்னாயிற்று டெல்லிக்கு? பந்து வீச்சில் நொறுக்கப்பட்டு பேட்டிங்கில் பெவிலியனை நோக்கி விறுவிறு

கொல்கத்தாவில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் கவுதம் கம்பீர் தலைமை டெல்லி டேர் டெவில்ஸ் அணி படுதோல்வி கண்டது.

201 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு ஆடிய டெல்லி அணி முதல் 3 விக்கெட்டை 3 ஓவர்களில் இழந்தது, கடைசி 7 விக்கெட்டுகளை மேலும் விரைவு கதியில் 7 ஓவர்கள் வரை கூட எடுத்துக் கொள்ளாமல் பெவிலியன் நோக்கி பேட்ஸ்மென்களின் அணி வகுப்பாக அமைய 14.2 ஓவர்களில் 129 ரன்களுக்குச் சுருண்டது.

டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய தவறாக கவுதம் கம்பீர் முடிவெடுத்தார். 201 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஸ்பின்னுக்குச் சாதகமான பிட்சில் வலுவாக அமைய வேண்டிய பேட்டிங் குல்தீப் யாதவ், சுனில் நரைன் ஆகியோர் இணைந்து எடுத்த 6 விக்கெட்டுகளினால் எழும்ப முடியாமல் வீழ்த்தப் பட்டது.

உத்தப்பா அமைத்த அடித்தளத்தில் வெளுத்துக்கட்டிய ரஸல், ரானா:

கிறிஸ் லின், சுனில் நரைனுக்கு எதிராக பவுலிங், களவியூகத் தேர்வுகள் கடினம். ஆனால் டிரெண்ட் போல்ட்டும் அடிப்பதற்கு அவ்வளவு எளிதான பவுலர் கிடையாது, வாச்சாம்பொழச்சான் அடியெல்லாம் அவரிடம் சாத்தியமில்லை. கிறிஸ் லின்னை ஆட்டிப்படைத்து மெய்டனுடன் தொடங்கினார் போல்ட். பிறகு நரைனை (1) அருமையான பவுன்சரில் வீழ்த்தினார்.

போல்ட்டைத் தடவினாலும் லின்னை நம்ப முடியாது என்று கம்பீர் 6வது ஓவர் முதல் ஸ்பின்னர்களை இறக்கினார். இதனால் கிறிஸ் லின்னின் ஸ்ட்ரைக் ரேட் அடிவாங்கியது. 25 பந்துகளில் 28 ரன்களையே எடுத்திருந்தார் அப்போது 10 ஓவர்கள் முடிந்திருந்தது. 5 ஓவர்களில் உத்தப்பாவும், லின்னும் 55 ரன்களைச் சேர்த்ததில் உத்தப்பாதான் பெரும்பங்களிப்பு.19 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 35 ரன்கள் விளாசி நதீம் பந்து வீச்சில் வெளியேறினார்.

என்னதான் உத்தப்பா டி20யில் அதிரடியாக ஆடினாலும் நம் ரவிசாஸ்திரி விராட் நிர்வாகம் ஸ்ரேயஸ் ஐயருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், ராயுடு என்னதான் திறமை காட்டினாலும் வாய்ப்பு கிடைக்காது, என்னதான் சஞ்சு சாம்சன் அடித்து நொறுக்கினாலும் தோனியை நீக்க முடியாது, இதுதான் இந்திய அணியின் தற்போதைய நிலைமை. அணித்தேர்வு விவகாரம் திறமைகளின் அடிப்படையில் இல்லை என்பது தெள்ளத்தெளிவு, இதை வெளிப்படையாக தெரிவிக்கும் யாராக இருந்தாலும் பிசிசிஐ அவர்களை ஓரம் கட்டிவிடும், வர்ணனையாளர்கள் உட்பட.

லின்னுடன் ராணா இணைந்தார் 3.2 ஓவர்களில் 27 ரன்கள் சேர்த்தனர், கிறிஸ் லின் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து ஷமியின் ஏமாற்றும் ஸ்லோ பந்துக்கு வெளியேறினார். நிதிஷ் ரானா எதிர்முனையில் ஆக்ரோஷம் காட்ட 2 சிக்சர்களுடன் களத்தில் நிற்க 10 ஒவர்களில் 85/2 என்ற நிலைக்குப் பிறகுதான் லின் ஆட்டமிழந்தார்.

மொகமது ஷமியை புரட்டி எடுத்த ரஸல்:

15வது ஓவரில் ரஸல் 0-வில் தான் இருந்தார். அப்போதுதான் மொகமது ஷமிப் பந்து வீச்சு பற்றி ரஸல் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. ஷமியின் ஓவரில் 3 மிகப்பெரிய அரக்க சிக்ஸர்களை அடித்து அந்த ஓவரில் 22 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதில் ஜேசன் ராய் ஒரு கேட்சையும் ரஸலுக்கு கோட்டை விட்டார்.

இந்த ஓவர் போதாதென்று மீண்டும் ரஸல், ஷமியை தென் செல்லப் பிள்ளையாக நடத்தி நெட் பவுலர் போல் மீண்டும் வைடு பந்து, லெந்த் பந்து, பிறகு பவுன்சர் 3 பந்துகளுமே ரஸல் மட்டையிலிருந்து கிளம்பி ஸ்டேடியத்தில் போய் விழுந்தது மீண்டும் ஷமி ஓவரில் 3 சிக்சர்கள். ஷமியை மட்டுமே 6 சிக்சர்கள் விளாசிய ரஸல் 12 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து போல்ட்டின் அபாரமான வேகம் குறைக்கப்பட்ட நல்ல திசையில் துல்லியமாக வீசிய யார்க்கரில் பவுல்டு ஆனார். அப்போது 18 வது ஓவர் நடந்து கொண்டிருந்தது.

கிறிஸ் மோரிஸின் ஓவரை ராணா கவனித்தார். புல்ஷாட்டில் ஒரு சிக்ஸ், பிறகு பாயிண்டில் ஒரு பவுண்டரி என்று ராணா கலக்கி 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உடன் 59 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் அவுட் ஆகும்போதே ஸ்கோர் 193 ஆக உயர்ந்திருந்தது. 10 ஓவர்களில் 85/2 என்ற நிலையிலிருந்து 20 ஒவர்களில் 200/9 என்று முடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். டெல்லி தரப்பில் சொல்லிக் கொள்ளும்படியாக வீசியதில் போல்ட் 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், டெவாட்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் 41 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

டெல்லியின் பெவிலியன் நோக்கிய அணிவகுப்பு:

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 91 ரன்கள் வெளுத்துக் கட்டிய ஜேசன் ராய் அச்சுறுத்தலுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் இறங்கினாலும் பியூஷ் சாவ்லாவை வைத்து ராயை 1 ரன்னில் வீழ்த்தினார். ஜேசன் ராயைப் பற்றிய அறிவு தினேஷ் கார்த்திக்குக்கு இருந்ததால் சரியாக அவரது லெக்ஸ்பின் பலவீனத்தை அறிந்து சாவ்லாவைக் கொண்டு வந்தார், அவரும் மேலேறி வந்து ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார்.

ஆந்த்ரே ரஸலின் வேகம் மற்றும் எழும்பிய பந்தில் ஷ்ரேயஸ் ஐயர் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். அண்டர் 19 உலகக்கோப்பைப் புகழ் இளம் வேகப்புயல் ஷிவம் மால்வி பந்தை கவுதம் கம்பீர் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொள்ள டெல்லி 24/3 என்று முதல் 3 ஓவர்களிலேயே தோல்வியின் வாசனையை முகர்ந்தது.

 

ரிஷப் பந்த் (43), கிளென் மேக்ஸ்வெல் (47) ஆகியோர் இணைந்து 5.3 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்தனர், ஆனால் குல்தீப் யாதவ் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் பந்த் விக்கெட்டைச் சாய்த்தார். பிறகு அபாய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு ஷார்ட் பிட்ச்சாக இருந்தாலும் குல்தீப் மிக மெதுவாக வீச மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார். 113/6 அதன் பிறகு 129 ஆல் அவுட்.

கிறிஸ் மோரிஸ் (2), விஜய் சங்கர் (2), ஷமி (7) ஆகியோரை சுனில் நரைன் காலி செய்தார். சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் நிதீஷ் ராணா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x