Published : 16 Apr 2018 01:40 PM
Last Updated : 16 Apr 2018 01:40 PM

‘ஸ்மார்ட்டாக’ கேப்டன்ஷிப் செய்து ‘மிஸ்டர் கூல்’ தோனியை ஓரம்கட்டிய அஸ்வின்

கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன் அஸ்வினின் ஸ்மார்ட்டான கேப்டன்ஷிப்பும், வித்தியாசமான அணுகுமுறையும், தோனியின் தேய்ந்துபோன நுட்பங்களை உடைத்து எறிந்தது.

குறிப்பாக கெயிலை களமிறக்கி கையாண்ட விதம், சூப்பர் ஓவர்களில் திறமையான பந்துவீச்சாளர்களை பயன்படுத்து ரன்களை கட்டுப்படுத்தியது, கடைசி ஓவர்களில் மோகித் சர்மா பந்துவீசச் செய்தது போன்றவை தோனிக்கு கேப்டன் நுட்பங்களை அவரிடம் இருந்து கற்று அவருக்கே அஸ்வின் பாடம் சொல்லிக்கொடுத்ததுபோல் அமைந்தது.

சண்டிகரில் நேற்று நடந்த 11-வது ஐபில் சீசன் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் அணி.

கடந்த 10 ஆண்டுகளாக தோனியுடன் இணைந்து விளையாடியதால், அஸ்வினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்களை எப்படி பயன்படுத்துவார் தோனி என்பதை அஸ்வின் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

அதற்கு ஏற்றார்போல் கடந்த இரு போட்டிகளிலும் வெடிகுண்டு வீரர் கெயிலை இறக்காமல் இருப்பு வைத்திருந்தார். ஏன் கெயிலை தேர்வு செய்து பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் வியப்பாக இருந்தது.

ஆனால், ஸ்டோய்னிஸ் கடந்த இருபோட்டிகளிலும் பந்துவீசி இருந்தாலும், பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை. இதனால், ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மன் கெயிலை சிஎஸ்கே அணிக்கு எதிராக அஸ்வின் இறக்கினார்.

ஏனென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிலையாக 140 கி.மீ வேககதத்துக்கு பந்துவீசக்கூடிய அளவுக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. மிதவேகத்தில் சராசரியாக 120 கிமீ வேகத்தில் வீசும் வீரர்களே இருப்பதால், கெயிலே இறக்குவது தொடக்தத்தில் நல்ல பலனளிக்கும் என்று அஸ்வின் எண்ணினார்.

அவரின் திட்டத்தை கச்சிதமாக கெயில் செயல்படுத்தி வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார். ஃபார்மில் இல்லாத கெயிலை ஏன் தொடக்க வீரராக ஏன் களமிறக்கினார் என்ற கேள்வி ஒருதரப்பினர் எழுப்பினாலும், அவர்களுக்கு பதில், வங்கதேசத்தில் நடந்த பிபிஎல் போட்டியில் கெயில் இரு சதங்கள் அடித்ததே பார்ஃமில் இருந்ததே எனக் கூறலாம்.

அதுமட்டுமல்லாமல், கெயிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஹர்பஜன் இருந்தார். இதனால், ஹர்பஜனின் முதல் ஓவரை மிகுந்த எச்சரிக்கையாகவே கெயில் கையாண்டார். ஏனென்றால், இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் இருந்தபோது, 8 இன்னிங்ஸ்களில் கெயில் அவரின் பந்துவீச்சை எதிர்கொண்டுள்ளார்.

அதில் 3 முறை ஹர்பஜனிடம் கெயில் ஆட்டமிழந்துள்ளார். இதை காரணமாக வைத்து கெயில் பேட் செய்ய வந்தவுடன் ஹர்பஜனை பந்துவீச தோனி வாய்ப்பு கொடுத்தார். முதல் ஓவரில் பொறுமை காட்டிய கெயில், ஹரபஜனின் அடுத்த ஓவரில் ஒரு சிக்சர், ஒருபவுண்டரி விளாசி தோனியின் திட்டத்தை சிதறடித்தார்.

அஸ்வினைப் பொறுத்தவரை கடந்த இரு போட்டிகளிலும், பவர்ப்ளே ஓவர்களின் போது, சுழற்பந்துவீச்சை பெரும்பாலும் பயன்படுத்தி வந்தார். ஆனால், சென்னை அணிக்கு எதிரான பவர்ப்ளேயில், தனது திட்டத்தை மாற்றிய அஸ்வின் கடும் நெருக்கடி கொடுக்கும் நோக்கில் மோகித் சர்மாவையும், ஆன்ட்ரூ டையும் பயன்படுத்தி பந்துவீசச் செய்தார். இதற்கு பலனும் கிடைத்தது. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் மட்டுமே சிஎஸ்கேவால் எடுக்க முடிந்தது.

அதிலும் சண்டிகர் ஆடுகளம் வேகப்பந்துக்கு ஓரளவு எடுபடும் என்பதால், தொடக்க ஓவர்களில் சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான முக்கியத்துவத்தை அளிக்காமல், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அஸ்வின் முன்னுரிமை அளித்து, 10 ஓவரக்ளுக்கு மேல், சுழற்பந்துவீச்சை பயன்படுத்தினார்.

10 ஓவர்களுக்கு மேல் அஸ்வின், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் திறம்பட வீசினர். ரஹ்மான் 3 ஓவர்களில் 18 ரன்களையும், அஸ்வின் 32 ரன்களும் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தி சிஎஸ்கே ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார்.

அடுத்ததாக, சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலும் வியந்த விஷயம், இக்கட்டான நேரத்தில் பிராவோ களமிறக்கப்படாமல், ஜடேஜா களமிறங்கியதுதான்.

கடந்த 2015ம் ஆண்டில் இருந்து ஜடேஜாவின் ஸ்டிரைக் ரேட் 99.58 என்று பாராட்டும்படி இருந்தாலும், பிராவோவின் ஸ்டிரைக் ரேட் 133.90 என்பது அவரைக் காட்டிலும் சிறப்பானதாகும்.

பிராவோ மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மன்,  பதற்றம் இன்றி பந்துகளை எதிர்கொண்டு அடித்து விளையாடக் கூடியவரை ஏன் கடைசி வரிசையில் தோனி பயன்படுத்துகிறார் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.

பிராவோ சுழற்பந்துவீச்சுக்கு திணறுவார் என்பது கடந்த கால புள்ளிவிவரங்களில் இருந்து அறியலாம். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பிராவோவின் ஸ்டிரைக் ரேட் 111.50 என்றால், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 136.83 ஆகும்.

அப்படி இருக்கும்போது, ஜடேஜா பேட் செய்யவரும் போது, அஸ்வின், ரஹ்மான் பந்துவீசி முடித்து வேகப்பந்துவீச்சாளர்கள் களத்தில் பந்துவீச வந்துவிட்டனர். அந்த நேரத்தில் பிராவோவை களமிறக்கி காட்டடி அடிக்கச் செய்வதுதான் புத்திசாலித்தனம். ஆனால், ஜடேஜாவை களமிறக்கி பந்துகளை வீணாக்கிவிட்டார். இதனால் கடைசி நேர நெருக்கடியில் தோனியாலும், பிராவோவாலும் ஒன்றும் செய்ய இயலாமல் போனது.

ஜடேஜா களமிறங்க வேண்டிய இடத்தில் பிராவோவுக்கு ஒருவேளை வாய்ப்பு கிடைத்திருந்தால், சென்னை அணி வெற்றி பெற பெரும்பான்மையான வாய்ப்பு இருந்திருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டறையில் இருந்து பட்டை தீட்டப்பட்டு வெளியே வந்தவர் மோகித் சர்மா. ஆதலால், யாருக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்ற கணிப்பு அவருக்கு தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், கடைசிநேரத்தில் நெருக்கடிகளை சமாளித்து, எதிரணி வீரர்களை ரன்களை எடுக்கவிடாமல் பந்துவீசச் செய்வதிலும் மோகித் சர்மா திறமையானவர்.

கடந்த 2015ம்ஆண்டில் இருந்து 16 முதல் 20 ஓவர்களுக்கு இடையே பந்துவீசி மோகித் சர்மா 25 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார், எக்கானமி ரேட்டும் 9.32 மட்டுமே. பும்ரா மற்றும் டிவேன் பிராவோவின் எக்கானமியைக் காட்டிலும் மோகித் சர்மாவ சிறப்பாக இருக்கிறார்.

அதிலும் கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா இரு யார்கர் பந்துகளையும், அடுத்து ஆப்சைட்டுக்கு விலக்கியே வீசியதால், தோனியால் அடித்து ஆடுவதில் பெரிய சிரமம் ஏற்பட்டது. இதுபோன்ற அஸ்வின் தனது கேப்டன்ஷிப் திறமையை சென்னைக்கு அணிக்கு எதிராக ஸ்மார்டாக பயன்படுத்தி வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x