Published : 16 Apr 2018 10:10 AM
Last Updated : 16 Apr 2018 10:10 AM

பனிப்பொழிவு இல்லாமல் போய் விட்டது; கெய்ல், முஜீப்தான் வித்தியாசம்: தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தோனி தி பினிஷர் களத்தில் நின்றும் கிங்ஸ் லெவன் அணியிடம் தோல்வி தழுவியது, முதல் தோல்விதான் என்றாலும் கேப்டன்சியில் தோனியை ஒருவாறு சாமர்த்தியமாக எதிர்கொண்டார் அஸ்வின்.

தோனி முதுகு காயத்திலும் உறுதியான  ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் 28 பந்துகளில் 33 ரன்கள் என்று இன்னிங்சைக் கட்டமைத்தார். 21 பந்துகளில் சென்னை வெற்றிக்கு 65 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என்று விளாசினார். குறிப்பாக முடிவு ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான ஆண்ட்ரூ டை பந்து வீச்சில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டு அடிக்கப்பட்ட அடி இன்னிங்ஸ் என்று கூற முடியாது, அடித்து  ஆட வேண்டிய கட்டாயம்.. அடித்து ஆடினார். இன்னும் கொஞ்சம் திட்டமிட்டு அவர் ஆடியிருந்தால் 1 ஓவர் மிச்சம் வைத்து வென்றிருக்க முடியும். ஆனால் காயத்தினால் அவர் சில ஸ்ட்ரோக்குகளை ஆட முடியாமல் கூட போயிருக்கலாம்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் அவரால் மோஹித் சர்மாவை அடிக்க முடியவில்லை என்பதுதான் பளிச்சிடும் உண்மை. நெருங்கி வந்து தோற்றது சென்னை.

ஆட்டம் தோல்வியடையக் காரணமாக பிராவோவை ஜடேஜாவுக்குப் பிற்பாடு களமிறக்கியதைக் கூறலாம், அல்லது மோஹித் சர்மா வீசிய வைடு பந்துகளை தோனியால் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் போனதைக் கூறலாம் கெய்ல் இன்னிங்ஸைக் கூறலாம் இன்னும் எவ்வளவோ காரணங்கள் உண்டு அதேபோல் ஒருவர் தன் அணியின் பலம் குறித்தும் நம்பிக்கைக் கொண்டு அதற்கான காரணங்களைக் கூறலாம்... ஏன் அவரின் முதுகுக் காயத்தைக் கூட கூறலாம்.

தோனி ஆட்டம் முடிந்து இவ்வாறு கூறினார்:

அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள் என்று நினைக்கிறேன். முஜீப்தான் பெரிய வித்தியாசம். இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவ்வளவாகப் பனிப்பொழிவு இல்லை.

கிறிஸ் கெய்லின் இன்னிங்சும் முஜீப் உர் ரஹ்மான் பந்து வீச்சும் அவர்களுக்கு வெற்றி தேடித் தந்தது. இது நெருக்கமான போட்டி, இது முக்கியம் ஏனெனில் நாம் சவாலாகத் திகழ்கிறோம் என்பதற்கு நெருக்கமான போட்டி என்பதே அடையாளம். எந்த மாதிரியான பவுண்டர்களை நாம் நீக்க வேண்டும். எந்த மாதிரியான சுலபமான பந்துகளைத் தவிர்க்க வேண்டும்? ஆகிய விஷயங்களில் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டியுள்ளது.

அனைத்துப் போட்டிகளும் நெருக்கமாக இருப்பதால் அணி வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும். இப்படிக் கூறினார்லும் ஒட்டுமொத்தமாக நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும். ஜடேஜா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

இப்போதுதான் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். ரெய்னா மட்டுமே முன்னிலையில் ஒரு இடது கை வீரராக இருக்கிறார் இந்நிலையில் ஜடேஜாவை நாம் நெகிழ்வாகப் பயன்படுத்தினால், இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் பார்க்கும் போது, இப்படியாக அவரைப் பயன்படுத்தினால் அவர் நன்றாக வருவார்.

முதுகு காயம் மோசமாக உள்ளது, ஆனால் கடவுள் எனக்கு நிறைய சக்தியைக் கொடுத்துள்ளதால் முதுகைப் பயன்படுத்த வேண்டிய தேவையேற்படவில்லை. என்னுடைய கைகளே வேலையைச் செய்துவிடும். 

காயம் அவ்வளவு மோசமானதாக இருக்காது ஏனெனில் என்ன ஆயிற்று என்பது எனக்குத் தெரியும். என்ன மாதிரியான காயம் என்பதை நாம் அறிந்திருக்கும் போது அதிலிருந்து வெளியே வருவது எளிது. அடுத்த போட்டிக்கு முன்பு இன்னும் சில நாட்கள் உள்ளதால் பிரச்சினையில்லை, மேலும் நான் காயங்களுடன் ஆடப் பழகிக் கொண்டு விட்டேன். அது விரல்களாயினும் முதுகாயினும், முழங்கையாயினும் காயத்துடன் ஆடிப்பழகி விட்டேன். எது எப்படியிருந்தாலும் உறுதியாக இருந்து ஆட்டத்தை முடிக்க வேண்டும்

என்றார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x