Published : 15 Apr 2018 08:10 PM
Last Updated : 15 Apr 2018 08:10 PM

சொந்த மண்ணில் கோலி அணியை புரட்டி எடுத்த’ சாம்ஸன்: ராஜஸ்தான் அணி அபார வெற்றி

பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் இன்று மாலை நடந்த 11-வது சீசன் ஐபில் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்ஸனின் காட்டடி பேட்டிங்கும், சரவெடி சிக்ஸர்களும் அணியின் ரன் குவிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டிய சாம்ஸன் 45 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 10 சிக்சர்கள், 2பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. 218 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய விராட் கோலியின் படையினர் 6 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இதையடுத்து, 19 ரன்களில் ரஹானேயின் தலைமைக்கு 2-வது வெற்றி கிடைத்தது.

டாஸில் தோல்வியுற்ற ஒரு அணி இந்த ஐபிஎல் சீசனில் வெற்றி பெறுவது இதுதான் முதல் முறையாகும். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-வது தோல்வியைச் சந்தித்து 6-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

அதிலும் பெங்களூரு அணியின் தூண்களான விராட் கோலி, டீவில்லியர்ஸ் விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் கோபால் வீழத்தியது மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

டாஸ்வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கைத் தேர்தவு செய்தார். பெங்களூரு அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. சர்பிராஸ் கானுக்கு பதிலாக பவான் நெகிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ரஹானே, டிம் ஸார்ட் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். கேப்டன் ரஹானே அதிரடியான தொடக்கத்தை அளித்தார். வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோரின் பந்துகளை சிக்சர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டதால், ரன்ரேட் வேகமெடுத்து.

36 ரன்கள் சேர்த்திருந்தபோது, வோக்ஸ் வீசிய 6-வது ஓவரில் ரஹானே ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 6பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். அடுத்த ஓவரில் ஸார்ட் 11 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ், சாம்ஸன் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்தது.. 10ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 88 ரன்கள் சேர்த்திருந்தது.

கேஜ்ரோலியா வீசிய 12-வது ஓவரில் ஒருசிக்சர்,பவுண்டரி அடித்து ரன்வேகத்தை உயர்த்திய ஸ்டோக்ஸ், அடுத்த ஓவரில் சாஹலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். ஸ்டோக் 27 ரன்களில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜோஸ்பட்லர், சாம்சனும் இணைந்தார். அதன்பின் சாம்ஸன் அதிரடி ஆட்டத்தை கையாண்டார். 14-வது ஓவரில் பவான் நெகி வீசிய ஓவரில் சாம்ஸன் அடித்த பந்தை டீகாக் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்

அதிரடியாக மட்டையை சுழற்றிய சாம்ஸன் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பின் பெங்களூரு பந்துவீச்சாளர்கள் உமேஷ் யாதவ், வோக்ஸ், கேஜ்ரோலியா ஆகியோர் வீசிய பந்துகள் சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறந்தன.

நிதானமாக பேட் செய்த பட்டலர் 23 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திரிபாதி, சாம்ஸனுடன் சேர்ந்து அதிரடியை கையாண்டார். இருவரும் சேர்ந்து உமேஷ்யாதவ் வீசிய கடைசி ஓவரை நொறுக்கி அள்ளினார்கள். திரிபாதி ஒரு சிக்ஸர்,பவுண்டரி உள்ளிட்ட 10 ரன்களும், சாம்ஸன் 2 சிக்ஸர்களும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. சாம்ஸன் 92 ரன்களுடனும், திரிபாதி14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு தரப்பில் சாஹல், வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கடின இலக்கு

218 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கை துரத்தி மெக்குலம், டீகாக் களமிறங்கினார்கள். மெக்குலம் 4 ரன்னில் கவுதம் சுழலில் வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி, டீகாக்குடன் இணைந்தார்.

அணியின் சூழலை உணர்ந்த விராட் கோலி, வழக்கான பார்ஃமில் அதிரடியில் இறங்கினார். குல்கர்னி வீசிய 3-வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து கோலி அதகளப்படுத்தினார். டீக்காக் நிதானமான பேட் செய்து அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தார். இதனால், ரன்ரேட் ஓவருக்கு 10 ரன்கள் என்ற வீதத்தில் உயர்ந்து வந்தது.

ஸார்ட் வீசிய 8-வது ஓவரில் டீகாக் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து டீவில்லியர்ஸ் களமிறங்கினார். அதிரடியாக பேட் செய்த கோலி 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பின் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

கோபால் பந்துவீச்சில் விராட் கோலி 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீவில்லியர்ஸ் 20 ரன்களில் கோபால் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். பவன் நெகி 3 ரன்களில் வெளியேறினார்.

மன்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் ஓரளவுக்கு நிலைத்து ஆடி நம்பிக்கை அளித்தனர். உனத்கத், வோக்ஸ், லாஹ்லின் ஆகியோர் பந்துகளில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக சிக்ஸர்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய சுந்தர் 19 பந்து்களில் 35 ரன்கள் சேர்த்து ஸ்டோக்ஸ் வேகத்தில் போல்டாகினார்.

மன்தீப் சிங் கடைசிஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தும் வெற்றிக்கான ரன்களை இலக்கை அடையமுடியவில்லை.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே பெங்களூரு அணி சேர்த்தது. மன்தீப் 47 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x