Published : 14 Apr 2018 08:34 PM
Last Updated : 14 Apr 2018 08:34 PM

பரபர..விறுவிறு.. கடைசி ஓவர்: ‘ஜேஸன் ராயின் காட்டடி’யில் டெல்லிக்கு முதல் வெற்றி: சொந்த மண்ணில் மும்பைக்கு சோகம்

 

மும்பை வான்ஹடே மைதானத்தில் இன்று நடந்த பரபரப்பான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராயின் காட்டடி பேட்டிங் அணியின் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜேஸன் ராய், இறுதிவரை வெற்றிக்குப் போராடினார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

195ரன்கள் என்ற கடினமான இலக்கை மும்பை அணி நிர்ணயத்திருந்தும், நெருக்கடி தரும் பந்துவீச்சு, விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு ஏற்ப வீரர்களை மாற்றி அமைக்காத கேப்டன்ஷிப் ஆகியவை தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. நடப்பு சாம்பியன் மும்பை அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சூர்யகுமார் யாதவ், லீவிஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

கடந்த இருபோட்டிகளிலும் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்காமல், சூரிய குமாரை களமிறக்கியது நல்ல பலன் கொடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 102 ரன்கள் சேர்த்தனர்.

அதிலும் அரங்கில் அமர்ந்திருந்த 18 ஆயிரம் பள்ளிக் குழந்தைகளுக்கும், ரசிகர்களுக்கும் விருந்து அளிக்கும் வகையில் தொடக்க ஆட்டக்கார்களின் பேட்டிங் அமைந்திருந்தது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து சூரியகுமார் யாதவும், லீவிசும் டெல்லி அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். முதல் ஓவரிலேயே யாதவ், லீவிஸ் தலா ஒரு பவுண்டரி அடித்ததால் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது.

டிரன்ட் போல்ட் வீசிய 4-வது ஓவரில் யாதவ் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளும், லீவிஸ் ஒரு சிக்ஸரும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். அடுத்து பந்துவீச வந்த நதீம், முகமதுஷமி, கிறிஸ்டியன் ஆகியோரின் ஓவர்களில் சராசரியாக 13 ரன்கள் வீதம் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தன.

4-வது ஓவரிலேயே மும்பை அணி 50 ரன்களை எட்டியது. பவர் ப்ளேயில் 84 ரன்கள் சேர்த்து டெல்லி அணிக்கு ‘கிலி’ ஏற்படுத்தியது. லீவிஸ், யாதவையும் பிரிக்க கம்பீர் 5 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் முடியவில்லை. 29 பந்துகளில் யாதவ் அரைசதம் அடித்தார்.

அதிரடியாக பேட் செய்து வந்த லீவிஸ் 48 ரன்களில்(28 பந்துகள் )டிவேசியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

அடுத்த சில ஓவர்களில் சூரியகுமார் யாதவை வெளியேற்றினார் டிவேசியா. சூரிய குமார் 32 பந்துகளில் 53 ரன்கள் (ஒரு சிக்ஸர், 7ப வுண்டரிகள்) சேர்த்திருந்தார்.

3-வது விக்கெட்டுக்கு வந்த இசான் கிஷானுடன், கேப்டன் ரோகித் சர்மா இணைந்தார். கிஷான் அதிரடி ஆட்டத்தில் இறங்க, ரோகித் சர்மா நிதானத்தைக் கடைபிடித்தார். கிஷான் தான் சந்தித்த ஒவ்வொரு ஓவர்களிலும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு வானவேடிக்கை நிகழ்த்தினார்.

குறிப்பாக டிவேசியா வீசிய 13 ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்கள், ஷமி வீசிய 15 ஓவரில் 2 பவுண்டரிகள் உள்ளிட்ட 10 ரன்கள் என ரன்ரேட்டை உயர்த்தினார். இதனால்,அணியின் ஸ்கோர் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிரடியாக பேட் செய்த கிஷான் 23 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்த நிலையில் கிறிஸ்டியன் பந்துவீச்சில் ‘கிளீன் போல்டா’னார். கிஷான் கணக்கில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும் அடுத்த பந்தில் பொலார்ட் டக்அவுட்டில் வெளியேறினார்.

இதன் பின் மும்பை இந்தியன்ஸ் சரிவு தொடங்கியது. அடுத்தடுத்து வந்த வீரர்கள் பொறுப்பற்ற முறையில் பேட் செய்ததால், 200 ரன்களுக்கு மேல் செல்ல வேண்டிய ஸ்கோர் படுத்துக்கொண்டது.

பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்களில் அடுத்த சில ஓவர்களில் ஆட்டமிழந்தார். தான் இன்னும் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருப்பதை இப்போதும் நிரூபித்தார்.

பின்வரிசை வீரர்களான குர்னல் பாண்டியா(11), ஹர்திக் பாண்டியா (2) ஏமாற்றம் அளித்தனர். தனஞ்செயா 4 ரன்களுடனும், மார்கண்டே 4 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது.

டெல்லி அணித்தரப்பில் டிவேசியா, போல்ட், கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

198 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. ஜேசன் ராய், கம்பீர் ஆட்டத்தை தொடங்கினார்கள். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 50 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.

கடினமான இலக்கு என்பதை உணர்ந்த ஜேசன், கம்பீர் ஜோடி தொடக்கத்திலே அதிரடியாகத் தொடங்கி சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் விரட்டினார்கள். முதல் ஓவரிலேயே 10 ரன்களும், தனஞ்செயா வீசிய 2-வது ஓவரில் ராய் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 10 ரன்கள் சேர்த்தார்.

அதேபோல ஹர்திக் வீசிய 5 ஓவரில் ஜேஸன் ராய் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியும், கம்பீர் ஒரு பவுண்டரியும் அடித்து ரன் ரேட்டை ராக்கெட் வேகத்துக்கு உயர்த்தினர்.

நிதானமாக பேட் செய்து வந்த கம்பீரை 15 ரன்களில் வெளியேற்றினார் முஸ்தாபிசுர் ரஹ்மான்.

2-வது விக்கெட்டுக்கு வந்த ரிஸ்பா பந்த், ஜேஸன் ராயுடன் இணைந்தார். அவ்வப்போது ஜேஸன் ராயும், ரிஸ்பாவும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். எதிரணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளிய ஜேஸன் ராய் 27 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

மார்கண்டே வீசிய 9-வது ஓவரில் ஜேஸன் ராய் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்ளிட்ட 14 ரன்கள் சேர்த்தனர். தனஞ்செயா வீசிய அடுத்த ஓவரில் ரிஸ்பா பந்த் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். இதனால், அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்து வந்தது.

அரை சதத்தை நோக்கி முன்னேறிய ரிஸ்பா பந்த் 47 ரன்களில் (23 பந்துகள்) ஹர்திக் வீசிய 12-வது ஓவரில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். இவர் கணக்கில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 13 ரன்களில் ஹர்திக்கிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் மறுமுனையில் ஜேஸன் தூண்போல் நின்று பேட் செய்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யரும், ஜேஸன் ராயுடன் இணைந்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் நிதானம் காட்ட, ராய் மற்றொரு பக்கம் மும்பையின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தார். ஹர்திக் பாண்டியா, பும்ரா ஓவர்களில் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் ஜேஸன் ராய் பறக்கவிட்டார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச ஜேஸன் ராய் எதிர்கொண்டார். முதல் இரு பந்துகளில் ஒருசிக்ஸரும், ஒருபவுண்டரியும் அடித்து ஆட்டத்தின் பரபரப்பைக் குறைத்தார்.

ஆனால், அடுத்த 3 பந்துகளிலும் ரன் சேர்க்காததால், ஆட்டம் டை ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றுவிடுமோ என்ற பரபரப்பு நிலவியது. ஆனால், கடைசிப்  பந்தில் ஜேஸன் ஒரு ரன் எடுக்க டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை ருசித்தது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜேஸன் ராய் 91 ரன்களுடனும் (53 பந்துகள், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) ஸ்ரேயாஸ் அய்யர் 27 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x