Last Updated : 13 Apr, 2018 07:16 PM

 

Published : 13 Apr 2018 07:16 PM
Last Updated : 13 Apr 2018 07:16 PM

ஸ்மித், வார்னர் இல்லாததால் நல்ல வாய்ப்பு; ஆஸி.யை அதன் மண்ணில் இந்தியா வீழ்த்தும்: இயன் சாப்பல் உறுதி

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இந்நாள் வர்ணனையாளர் இயன் சாப்பல், ஸ்மித், வார்னருக்குத் தடை விதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியை முதன் முறையாக டெஸ்ட் தொடரில் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கே அதிகம் என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் கோலி படை அங்கு நவம்பர் மாதம் கடைசி வாரம் தொடங்கும் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் இயன் சாப்பல் கூறியதாவது:

கிரிக்கெட் ஆஸ்திரேலியா சரியாகவே சிந்தித்துள்ளது, வார்னருக்கும் ஸ்மித்துக்கும் தடை மூலம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா பெரிய அனுகூலம் செய்துள்ளது

ஆஸ்திரேலிய மக்களிடம் ஒரேயொரு கெட்டபெயர் எடுத்து விடக்கூடாது அது ‘ஏமாற்றுக்காரன்’ என்ற பெயர்தான். எனவே இந்தியாவுக்கு எதிரான தொடரில் வார்னர், ஸ்மித் எந்த மைதானத்தில் இறங்கினாலும் ரசிகர்கள் அவர்கள் இருவரையும் கேலி செய்து கூச்சல் எழுப்புவது நிச்ச்யம். அது அவர்கள் தன்னம்பிக்கைக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் இமேஜுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும்.

எனவே இந்தியாவுக்கு எதிராக அவர்கள் ஆடாமல் இருப்பதே நல்லது. எப்படியிருந்தாலும் அவர்கள் மீண்டும் கிரிக்கெட் பற்றி சிந்திக்க நாட்கள் பிடிக்கும்.

ஊதிய விவகாரத்தின் போது வெளிப்படையாக பேசிய வார்னரை ஒழித்துக் கட்டுவதில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா காரணங்களைத் தேடி வந்தது. இப்போது சவுகரியமாகப் போய்விட்டது, எனவே வார்னர் மீண்டும் ஆஸி.க்கு ஆடுவது கடினமெ. ஸ்மித் வருவார் ஆனால் இனி கேப்டனாக அவர் நினைத்துப் பார்க்க முடியாது.

எனவே நான் இந்திய டெஸ்ட் தொடர் வெற்றியை எதிர்பார்க்கிறேன், (1948 முதல் ஆஸ்திரேலியாவுக்குப் பயணித்து வரும் இந்திய அணி இன்னும் ஒரு தொடரைக்கூட அங்கு வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இந்தியா எளிதில் வெல்லுமா என்பது எனக்குத் தெஇர்யவில்லை, ஆனால் ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இந்தியாவுக்கு இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்காது. ஆனாலும் ஆஸ்திரேலியாவிடம் சிறந்த பவுலிங் இருப்பதால் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது கடினமாகக் கூட இருக்கலாம்.

நல்ல பந்து வீச்சு இருந்தால் கிரிக்கெட்டில் அது ஒரு பெரிய பலம், 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மே.இ.தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சு லெஜண்ட் ஆண்டி ராபர்ட்ஸ் போல் சிந்திக்க வேண்டும். அவர் எப்போதும் ஒன்றைக் கூறுவார், அதாவது எந்த ரன் எண்ணிக்கையில் எதிரணி எங்களை அவுட் ஆக்குகிறார்கள் என்பதல்ல விஷயம் எந்த ரன் எண்ணிக்கையாக இருந்தாலும் அதை விட குறைந்த ரன்களில் நாங்கள் எதிரணியை சுருட்டி விடுவோம் என்பார் இதுதான் ஆண்டி ராபர்ட்ஸ் ரக சிந்தனை என்பது.

கோலியுடன் இருப்பதற்கு ரவிசாஸ்திரி சரியான நபர்தான். கோலி, ரவிசாஸ்திரி இருவருமே ஆக்ரோஷமானவர்கள். ரவிசாஸ்திரி ஆக்ரோஷமாக யோசிப்பவர். எனவே கோலியுடன் இணைந்துப் பணியாற்ற சிறந்த நபர் ரவிசாஸ்திரிதான்.

இவ்வாறு கூறினார்.

கங்குலி தன் புத்தகத்தில் கிரெக் சாப்பலை பயிற்சியாளராக நியமிக்க வேண்டாம் என்று இயன் சாப்பல் கூறியதாக எழுதியிருந்தார். இது பற்றி கேட்ட போது, “வரலாற்று ரீதியாக தவறான தகவல் அது” என்று முடித்துக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x