Published : 13 Apr 2018 08:20 AM
Last Updated : 13 Apr 2018 08:20 AM

மார்க்கண்டேயின் திருப்புமுனை பவுலிங் வீண்: சன் ரைசர்ஸிடம் தோற்றது மும்பை

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற 2018 ஐபில் தொடரின் 7வது போட்டியில் பரபரப்பான இறுதிக் கட்டத்தில் ஹைதராபாத் அணி மும்பை அணியை கடைசி பந்தில் வீழ்த்தியது. இதன் மூலம் மும்பை அணி தன் 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது.

டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் மும்பையை பேட் செய்ய அழைத்தார், ஆனால் ரஷீத் கான் (1/13), சித்தார்த் கவுல் (2/29) சந்தீப் சர்மா (2/25) ஆகியோரது சிறந்தப் பந்து வீச்சில் மும்பை அணி 147/8 என்று மடிந்தது. தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணி லெக் ஸ்பின்னர் மயங்க் மார்க்கண்டே (4/23), முஸ்தபிசுர் (3/23) ஆகியோரது பந்து வீச்சில் திக்கித் திணறினாலும் கடைசி பந்தில் வெற்றி ஷாட்டை அடித்து 151/9 என்று வெற்றி பெற்றது.

சன் ரைசர்ஸ் வெற்றியில் பதற்றமான தருணத்தில் தீபக் ஹூடாவின் (32 நாட் அவுட்) ஆட்டம் மிகச்சிறப்பாக அமைந்தது.

கடைசி ஓவரில் தீபக் ஹூடா, பென் கட்டிங் வீசிய வைடு ஃபுல் பந்தை முழங்காலை மடக்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவர் மேல் சிக்ஸ் அடிக்க மும்பை அதிர்ந்தது. இதுதான் சன் ரைசர்ஸ் அணியின் முதல் சிக்ஸாகவும் அமைந்தது. 11 ரன்கள் தேவை என்பது இந்த சிக்சரினால் 5 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்றானது. அடுத்த பந்தை கட்டிங் வைடாக வீசி ஒரு இலவச ரன்னை வழங்கினார். ஆனால் அடுத்த பந்தை ஹூடா சுற்ற பந்து சிக்கவில்லை. அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார் ஹூடா. 4வது பந்தில் ஸ்டான்லேக் ஒரு ரன் எடுத்தார். ஒரு ரன் எடுத்தால் ஸ்கோர்கள் சமன் என்ற நிலையில் ஹூடா ஆட்டமிழந்திருப்பார், ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கூப் செய்தார் பந்து சரியாகச் சிக்காமல் கேட்சாகச் சென்றது, பைன்லெக்கில் ஓடி வந்த பும்ராவுக்கு முன்னால் பந்து தரைதட்டியது. இந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் சன்ரைசர்ஸ் ஆல் அவுட் ஆகியிருக்கும். கடைசி பந்தில் 1 ரன் தேவை என்ற நிலையில் பீல்டர்கள் முன்னே வரவழைக்கப்பட்டனர், ஸ்டான்லேக் மிட்விக்கெட் மேல் தூக்கி பவுண்டரி அடிக்க சன் ரைசர்ஸ் அணிக்கு த்ரில் வெற்றி.

மார்க்கண்டேயின் அபாரத் திறமை

முன்னதாக ஷிகர் தவண் மிக அருமையாக ஆடினார், முதல் ஆட்டத்தில் 33 பந்துகளில் அரைசதம் கண்டார், நேற்றும் அபாரமாக ஆடினார் பந்தை அது வரும் திசையில் ஆடினார். மொத்தம் 8 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து மயங்க் மார்க்கண்டே பந்தை ஸ்வீப் ஆட முயன்றார், பந்து கொஞ்சம் கூடுதலாக பவுன்ஸ் ஆக எட்ஜ் எடுத்து பும்ரா டீப்பில் கேட்ச் எடுக்க 3 ஓவர்களில் 3 விக்கெட் என்று சன் ரைசர்ஸ் சரிவு தொடங்கியது.

முதலில் விருத்திமான் சஹா (22 ரன், 20 பந்து 3 பவுண்டரி), தவண் கூட்டணி 62 ரன்களை 7 ஓவர்களில் சேர்த்து அபாரத் தொடக்கம் கொடுத்தனர், இந்நிலையில் சஹா, மார்க்கண்டேயின் வேகமான கூக்ளியில் காலில் வாங்கி எல்.பி.ஆனார். நடுவர் அவுட் கொடுக்கவில்லை, ரிவியூவில் அவுட் என்று தெரிந்தது. ஆனால் நடுவர் லாங் திருப்தியடையவில்லை. அடுத்ததாக கேன் வில்லியம்சன் 6 ரன்களில் முஸ்தபிசுர் கட்டரை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

மணீஷ் பாண்டே மேலேறி வந்து பந்து ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர்த்திசையில் மட்டையை அசிங்கமாக சுற்ற பந்து காற்றில் எழும்பி ரோஹித் சர்மா கேட்ச் எடுத்தார், மோசமான ஷாட் ஆகும் இது. ஷாகிப் அல் ஹசன் (12) மார்க்கண்டேயின் கூக்ளியை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேற சன் ரைசர்ஸ் 73/1 என்ற ஆதிக்க நிலையிலிருந்து 107/5 என்று சரிவு கண்டது, மயங்க் மார்க்கண்டே தன் அபார 4 ஒவர்கள் ஸ்பெல் முடிவில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 11 டாட் பால், 3 பவுண்டரிகள்.

தீபக் ஹூடா, யூசுப் பத்தான் (14) இணைந்து ஸ்கோரை 136 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது பும்ரா பிரமாதப் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை சொல்லி எடுத்தார். முதலில் யூசுப் பத்தான் நெஞ்சுயர ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட்டில் பொலார்டிடம் கேட்ச் கொடுத்தார், ரஷீத் கான் (0) அடுத்த பந்தே எட்ஜ் ஆகி வெளியேறினார். பும்ராவுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிட்டியது. சித்தார்த் கவுல், முஸ்தபிசுர் இடம் டக் அவுட் ஆனார். இதே 19வது ஓவரின் கடைசி பந்தில் சந்தீப் சர்மாவும் ஆஃப் திசையில் நகர்ந்து பைன் லெக் மேல் அடிக்க நினைத்தார், ஆனால் முஸ்தபிசுர் பந்து அவரை துரத்திச் சென்றது, ஷார்ட் பிட்ச் பந்து எழும்ப சந்தீப் சர்மா ஷாட் கேட்ச் ஆனது. சரியாக 19வது ஓவர் முடிவில் 137/9 என்று போட்டி விறுவிறுப்பான கடைசி ஓவருக்குச் சென்றது அப்போது ஸ்டான்லேக், ஹூடா இணைந்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

சன் ரைசர்ஸ் பவுலிங் தரத்தை புரிந்து கொள்ளாமல் ஆடிய மும்பை;புரிதலின்மையின் முன்னோடி ரோஹித் சர்மா

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸின் அபார பவுலிங் வரிசை முன் சரண் அடைந்தது. சந்தீப் சர்மா மிகப்பிரமாதமான ஸ்விங் பந்து வீச்சை வீசினார். ரோஹித் சர்மாவை படுத்தினார். அன்று தீபக் சாஹரிடம் தடவியது போல் சந்தீப் சர்மாவிடம் ரோஹித் தடவி கடைசியில் 11 ரன்களுக்கு ஸ்டான்லேக் பந்தில் ஷாகிபிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், 2வது போட்டியிலும் ரோஹித் சொதப்பல். இந்த 11 ரன்னில் ஒரு லைஃப், முதல் ஓவரிலேயே ஹூடா பின்னால் ஓடிச்சென்று கேட்சை விட்டார்.

சித்தார்த் கவுல் பவர் பிளேயின் கடைசி ஓவரில் இஷான் கிஷன் (9), எவின் லூயிஸ் (29) ஆகியோரை வீட்டுக்கு அனுப்ப மும்பை இந்தியன்ஸ் 54/3 என்று ஆனது. எவின் லூயிஸ் 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 29 ரன்கள் விளாசினார், சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஒரு நல்ல இன்னிங்சை பொறுப்புடன் ஆடி 31 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து சந்தீப் சர்மாவின் வேகம் குறைந்த பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்தார்.

மீண்டும் ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் தன் பங்குக்கு மும்பை பேட்ஸ்மென்களைக் கட்டிப்போட்டார், 4 ஓவர்களில் 13 ரன்களுக்கு அவர் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். இதில் 18 டாட்பால்கள், இது ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன் இல்லாத பந்துகளாகும். மும்பையின் அதிகபட்ச கூட்டணியே 38 ரன்கள்தான் அது சூர்யகுமார் யாதவ்வுக்கும் கெய்ரல் பொலார்ட் (23 பந்துகளில் 28, 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள்) ஆகியோருக்கிடையே வந்ததுதான். குருணால் பாண்டியா 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசன் ஸ்பின்னுக்கு வெளியேறினார். 147/8 என்று முடிந்தது மும்பை. அதிகமான ஷாட்களை ஆடப்போய்த்தான் மும்பை விக்கெட்டுகளை இழந்தது, சன் ரைசர்ஸ் பந்து வீச்சை அப்படியெல்லாம் அடித்து விட முடியாது என்ற பாடத்தை மும்பை இந்தியன்ஸ் கற்றுக் கொண்டது.

ஆட்ட நாயகனாக ரஷீத் கான் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x