Last Updated : 10 Apr, 2018 08:42 AM

 

Published : 10 Apr 2018 08:42 AM
Last Updated : 10 Apr 2018 08:42 AM

சன் ரைசர்ஸிடம் ராஜஸ்தான் சரண்; ராகுல் திரிபாதியை தொடக்கத்தில் இறக்காமல் தவறு செய்தது

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2018 4வது போட்டியில் நேற்று கேன் வில்லியம்சன் தலைனை சன் ரைசர்ஸ் அணியிடம் ரஹானே தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்தது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் (49) தவிர யாரும் சோபிக்கவில்லை, இதனையடுத்து 20 ஒவர்களில் 125/9 என்று மடிந்தது. தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி ஷிகர் தவண் (77), கேன் வில்லியம்சன் (36) ஆகியோர் பேட்டிங்கில் 15.5 ஓவர்களில் 127/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் ராஜஸ்தான் ராயல்ஸை பேட் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டான்லேக் உயரமானவர் என்பதால் இந்தப் பிட்சில் பந்துகளை அவரால் நன்றாக எழும்பச் செய்ய முடிந்தது. அபாய அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் (5) விக்கெட்டையும் ஸ்டான்லேக் கைப்பற்றினார். வில்லியம்சனின் அபாரமான கேட்ச் அது.

ஆப்கான் அதிசய ஸ்பின்னர் ரஷீத் கான் (1/23) மற்றும் ஷாகிப் அல் ஹசன் (2/23) ஆகியோர் சன் ரைசர்ஸ் அணியை பாடாய் படுத்தி நடு ஓவர்களில் ஏற்கெனவே நிலையை விட்டு நகராத ராஜஸ்தான் தேரின் சக்கரங்களுக்கு மேலும் முட்டுக்கட்டைப் போட்டனர். சித்தார்த் கவுல் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ராயல்ஸ் செய்த தவறென்ன?

தொடக்கத்தில் ரஹானேயும் டி ஆர்க்கி ஷார்ட் என்ற ஆஸி.வீரரும் இறங்கினர். டி ஆர்க்கி ஷார்ட் ஒரு அபாரமான அதிரடி வீரர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இங்குதான் சிக்கல் தொடங்கியது. ராகுல் திரிபாதி தொடக்க வீர்ராக 2017 ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரமாதமாக ஆடியவர், ஆனால் அவரைப் போய் 5-ம் நிலையில் களமிறக்கினார் அப்போதே சன் ரைசர்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

ராகுல் திரிபாதி 32 டி20 போட்டிகளில் 654 ரன்களை 131.06 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். 654 ரன்களில் 62 பவுண்டரிகள் 26 சிக்சர்கள் என்று 404 ரன்களை பவுண்டரி சிக்சர்களிலேயே அடித்துள்ளார். அவரை வேறு டவுனில் மாற்றியது ராஜஸ்தான் செய்த பெரும்தவறானது.

டியார்க்கி ஷார்ட் பிபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்தவர்தான் ஆனால் நேற்று 4 ரன்களில் அவர் மிட் ஆஃபில் தட்டி விட்டு இல்லாத சிங்கிளுக்கு ஓடி வில்லியம்சனின் பீல்டிங்குக்கு ரன் அவுட் ஆனார். சஞ்சு சாம்சன் இறங்கி புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் இரண்டு பவுண்டரிகளை அடித்துத் தொடங்கினார். பவர் பிளேயில் 48 ரன்கள் என்ற நிலைக்குப் பிறகு தடுமாற்றம் ஏற்பட்டது.

ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் வர ராஜஸ்தான் ‘ஆட்டம்’ தொடங்கியது பென்ஸ்டோக்சையே கட்டிப்போட்ட அவர் முதல் ஓவரில் 1 ரன்னை மட்டுமே கொடுத்தார். பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் லாங் ஆனில் ஸ்டான்லேக் பந்து வீச்சில் வெளியேற ராகுல் திரிபாதி 5-ம் நிலையில் இறங்கி 15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தை இழுக்க நினைத்தார், மட்டையில் சரியாகச் சிக்காமல் லாங் ஆனில் பாண்டேயிடம் கேட்ச் ஆனார். இதே ஓவரில் 42 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சனும் ஆட்டமிழந்தார். மேலேறி வந்து ஆடுவார் என்பதை எதிர்பார்த்த ஷாகிப் பந்தை ஆஃப் திசையில் தள்ளி வீச சாம்சன் ஷாட் சரியாகச் சிக்காமல் கவரில் எழும்பியது, ரஷீத் கான் ஓடி வந்து சறுக்கிக்கொண்டு கேட்ச் பிடித்தார், அபாரமான கேட்ச் அது. ஷாகிப் ஒரே ஓவரில் திரிபாதி, சாம்சனை வெளியேற்ற 14வது ஓவர் முடிவில் 94/5 என்று சரிந்தது ராஜஸ்தான்.

அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் (6) ரஷீத் கான் பந்தை புல் ஷாட் ஆட வாய்ப்பு வந்ததையடுத்து ஆடினார், ஆனால் பந்து தாமதமாக வந்து மட்டையில் பட்டு பவுல்டு ஆனது. ஷ்ரேய்ஸ் கோபால் 18 ரன்களை எடுக்க ராயல்ஸ் 125 ரன்களை பாடுபட்டு எடுத்தது.

ரஹானே கேட்ச் விட்ட பிறகு ஷிகர் தவண் அபாரம்:

வார்னர் இல்லாததால் விருத்திமான் சஹாவை சன் ரைசர்ஸ் தொடக்கத்தில் தவணுடன் இறக்கியது. அவர் 5 ரன்களில் உனாட்கட் பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆனார். முன்னதாக ஷிகர் தவண் 0-வில் இருந்த போது தவல் குல்கர்னி பந்தை குறிப்பார்த்து ஸ்லிப்பில் கொடுக்க அங்கு ரஹானே கேட்சை விட்டார். குல்கர்னி முதல் 6 ஓவர்களில் 51% விக்கெட்டுகளை வீழ்த்தியவர் நேற்று ரஹானேவினால் அது கைகூடவில்லை.

ஆனால் அடுத்த ஓவரிலேயே தவல் குல்கர்னியை ஒரு பவுண்டரி மற்றும் ஒரு அப்பர் கட் சிக்ஸ் விளாசினார் தவன். 33 பந்துகளில் அவர் அரைசதம் எடுக்க கேன் வில்லியம்சன் ஒரு முனையில் அழகாக ஆடி 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். தவண் 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 77 நாட் அவுட். 127/1 என்று சன் ரைசர்ஸ் வெற்றி. ஆட்ட நாயகன் ஷிகர் தவண். இது மிகவும் தவறு 2 கேட்ச், ஒரு விக்கெட் அற்புதமான பந்து வீச்சுக்கு ரஷீத் கானுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்த ஷாகிப் அல் ஹசனுக்கு கொடுத்திருக்க வேண்டும், ஆனால் சூப்பர்ஸ்டார் கலாச்சரம்... ஷிகர் தவண் ஆட்ட நாயகன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x