Published : 10 Apr 2018 07:34 AM
Last Updated : 10 Apr 2018 07:34 AM

சுழற்பந்து முக்கிய பங்கு வகிக்கும்: பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கருத்து

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சென்னை - கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியளார் மைக்கேல் ஹசி தெரிவித்தார்.

சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

டு பிளெஸ்ஸிஸ் இன்னும் முழுமையாக பயிற்சியில் ஈடுபடவில்லை. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட லேசான காயத்தில் இருந்து அவர் குணமடைந்து வருகிறார். ஏற்கெனவே அருக்கு கை விரலில் லேசான முறிவும் ஏற்பட்டுள்ளது. அடுத்த 7 நாட்கள் அவர், பயிற்சியில் ஈடுபட தொடங்குவார். பஞ்சாப் அணிக்கு எதிராக 15-ம் தேதி நடைபெறும் ஆட்டத்துக்கான அணி தேர்வுக்கு டு பிளெஸ்ஸிஸ் தயாராகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

முரளி விஜய் தொடக்க கால பயிற்சியின் போது காயம் அடைந்தார். தற்போது காயத்தில் இருந்து மெதுவாக குணமடைந்து சிறப்பான நிலையில் விளையாடுவதற்கு தயாராக உள்ளார். அம்பாட்டி ராயுடுவும் சிறந்த வீரர்தான். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார். அதேவேளையில் தற்போது முரளி விஜய்யும் சிறப்பாக பந்துகளை எதிர்கொள்கிறார். இதனால் பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு அணித் தேர்வு என்பது மகிழ்ச்சியான தலைவலிதான்.

சேப்பாக்கம் ஆடுகளம் நன்றாகவே உள்ளது. சிறிய அளவில் உலர்ந்த நிலையில் ஆடுகளம் காணப்படுகிறது. இதனால் இரு அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என நான் எதிர்பார்க்கிறேன். பொதுவாக ஆடுகளம் பார்க்க சிறப்பாகவே உள்ளது. அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வேண்டும்.

கேதார் ஜாதவ் இழப்பு பெரிதுதான். காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் காயம் அடைந்திருப்பது துரதிருஷ்டவசமானதுதான். அவர் இல்லாத இடத்தில் ஏற்பட்டுள்ள பெரிய துளையை நாங்கள் அடைக்க வேண்டும். முதல் நான்கு இடங்களில் களமிறங்கும் வீரர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டும்.

கொல்கத்தா அணிக்கு எதிரான மோதலை இளம் வீரர்களுக்கும், அனுபவ வீரர்களுக்குமான மோதலாக நான் பார்க்கவில்லை. கொல்கத்தா அணி தரம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளது. அந்த அணியில் சுழற்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. வெற்றியை தேடித்தரக்கூடிய சில வீரர்களும் அங்கே இருக்கிறார்கள். குறிப்பாக கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸல். கொல்கத்தா அணி தங்களது சொந்த பேட்டிங் அல்லது பந்து வீச்சால் வெல்லாம்.

சிறந்த அணிகள் பொதுவாக அனுபவம் வாய்ந்த சில வீரர்களை கொண்டிருப்பார்கள். என் மனதில் தோன்றுவது என்னவென்றால் எந்த அணி நெருக்கடியான நிலையில் திறனை சிறந்த திறனை வெளிப்படுத்தும் என்பதுதான். இரு அணியிலுமே உயர்ந்த திறன்கள் கொண்ட வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் தரமான போட்டியை பார்க்கலாம்.

இவ்வாறு மைக்கேல் ஹசி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x