Last Updated : 08 Apr, 2018 04:00 PM

 

Published : 08 Apr 2018 04:00 PM
Last Updated : 08 Apr 2018 04:00 PM

என் வேலை முடியாததால், 50 ரன்கள் அடித்தும் நான் பேட்டை உயர்த்தவில்லை: மனம் திறந்தார் பிராவோ

 

அணியை வெற்றி பெறவைக்க வேண்டும் என்கிற என்னுடைய வேலை முடியாததால், 50 ரன்களைக் கடந்தபின்பும் நான் பேட்டை உயர்த்தவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டிவைன் பிராவோ தெரிவித்தார்.

மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த 11-வது ஐபிஎல் சீசனின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்தது. டிவைன் பிராவோ அதிரடியாக பேட் செய்து 30 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

வெற்றிக்கு பின் ஊடகங்களிடம் டிவைன் பிராவோ பேசியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் இணைந்தபின் நான் விளையாடியதில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இந்தப் போட்டியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு சிறப்பான இன்னிங்ஸை இதற்கு முன் நான் விளையாடியதில்லை . இது எனக்கு சிறப்பாக அமைந்துவிட்டது.

நான் களமிறங்கியதில் இருந்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே இருந்தது. அதுதான் எனது வேலையாக இருந்தது. என் வேலை முடியாததால், நான் அரை சதம் அடித்தபோதும் கூட பேட்டை உயர்த்தவில்லை. இன்னும் வெற்றிக்கு அதிக தூரம் போக வேண்டும், ஆதலால் பேட்டை உயர்த்துவதைக் காட்டிலும், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில்தான் ஆர்வமாக இருந்தேன்.

கடைசி ஓவரில் நான் ஆட்டமிழந்தபோது மிகவும் வேதனைப்பட்டேன். அணியின் வெற்றிக்காக இத்தனை நேரம் விளையாடிவிட்டு கடைசி நேரத்தில் ஆட்டமிழக்கிறோமே என்று வருந்தேனேன். ஆனால், வெற்றி கிடைத்தபின் மகிழ்ச்சியை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை.

என்னால் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்ய முடியாவிட்டாலும் கூட, இந்தப் போட்டியில் நான் விளையாடியது மிகச் சிறப்பானதாக இருக்கும்.

கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். ஆனால், இந்த நாள் எனக்கானதால் அதை நான் எடுத்துக்கொண்டேன். நான் களத்தில் நின்று பும்ரா என்ன மாதிரியான பந்துவீசினாலும், ஸ்விங் செய்தாலும் அடித்து விளாசுவது மட்டுமே குறிக்கோளாக இருந்தேன். வான்ஹடே மைதானத்தில் பந்தை நாம் ஒரு லென்த்தில் வீசினாலும், அது பிட்ச் ஆகும் இடம் வேறு மாதிரி இருக்கும் என்பதால், நிதானமாகவே பேட் செய்தேன்.

கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவைப்பட்டபோது, ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் அடித்தாலும் பந்துவீச்சாளர் நெருக்கடிக்கு ஆளாவார் என்பது எனக்குத் தெரியும். ஆதலால் கடைசி நேரத்தில் அடித்து ஆடினேன்

வெற்றிக்கு அருகே வந்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய பின் என்னுடைய ‘கேப்டன் கூல்’ தோனி என்னை பாராட்டுவார் என நினைத்தேன். ஆனால், பெரிதாக ஒன்றும் பாராட்டவில்லை. நன்றாக பேட் செய்தீர்கள் என்று மட்டும் தெரிவித்தார். ஏனென்றால் எனது திறமையை நன்கு அறிந்தவர் தோனி, என் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளார்

இவ்வாறு பிராவோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x