Published : 05 Apr 2018 09:49 AM
Last Updated : 05 Apr 2018 09:49 AM

ஆதிக்கத்தை நிலைநிறுத்துமா சிஎஸ்கே?

பிஎல் 11-வது சீசன் போட்டிகள் வரும் 7-ம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 8 அணிகள் களமிறங்குகின்றன. இந்த அணிகள் பற்றிய ஓர் அலசல்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் இந்த சீசனில் களமிறங்குகிறது. பழைய அணியை மையமாக கொண்டே தற்போது புதிய அணிக்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இரு முறை சாம்பியனான சென்னை அணி இரண்டு வருடங்களுக்குப் பிறகு தங்களது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் முனைப்பில் இந்த சீசனை சந்திக்கிறது. சென்னை அணி ஐபிஎல் தொடரில் சிறந்த சாதனைகளை வைத்துள்ளது. 2 சாம்பியன் பட்டம் வென்றதுடன், 4 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியைச் சந்தித்திருந்தது. 2 முறை பிளே ஆப் சுற்றில் கால்பதித்திருந்தது.

மீண்டும் புகழை நிலை நாட்டும் வகையில் சென்னை அணியின் பேட்டிங் வரிசை வலுவாக அமைந்துள்ளது. ஆளுமைத் திறன் மிக்க மகேந்திர சிங் தோனி, சுரெஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகியோரை சென்னை அணி ரைட் டூ மேட்ச் தேர்வின் மூலம் தக்க வைத்துக் கொண்டது. இவர்களுடன் அனுபவம் உள்ள ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர், ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஆகியோரையும் வளைத்து போட்டுள்ளது. அனுபவ தொடக்க வீரரான முரளி விஜய்யும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டு பிளெஸ்ஸிஸ், இங்கிலாந்தின் சேம் பில்லிங்ஸ் ஆகியோருடன் டெல்லியைச் சேர்ந்த துருவ் ஷோரேவும் தொடக்க வீரருக்கான போட்டியில் உள்ளார். இவர்களுடன் ஷேன் வாட்சன் மல்லுக்கட்டக்கூடும்.

3-வது வரிசையில் சுரேஷ் ரெய்னா மிரட்ட காத்திருக்கிறார். மிடில் ஆர்டரில் கேதார் ஜாதவ், அம்பாட்டி ராயுடு, தோனி வரிந்து கட்ட தயாராக உள்ளனர். வேகப் பந்து வீச்சில் இங்கிலாந்தின் மார்க் வுட், தென் ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடி ஆகியோரை அணி பெரிதும் நம்பி உள்ளது. இவர்களுடன் இந்தியாவின் ஷர்துல் தாக்குர், தீபக் ஷாகர், கே.எம்.ஆசிப், மோனு சிங் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர், கரண் சர்மா ஆகியோர் முக்கிய பங்குவகிப்பார்கள்.

அனுபவ வீரர்களை அதிகம் உள்ளடக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அணியையும் வலுவாக எதிர்த்து போராடும் திறன் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் வலுவான போட்டியாளராகவும் சென்னை அணி திகழக்கூடும். அணியில் உள்ள ஒரே பலவீனம் 25 வீரர்களில் 11 பேர் 30 வயதை கடந்தவர்களாக இருப்பதுதான். எனினும் ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் குறுகிய வடிவிலான ஆட்டங்களில் இது பெரிய பிரச்சினை இல்லை.

அணி விவரம்:

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், அம்பாட்டி ராயுடு, கரண் சர்மா, ஷர்துல் தாக்குர், டு பிளெஸ்ஸிஸ், மார்க் வுட், சேம் பில்லிங்ஸ், இம்ரன் தகிர், தீபக் ஷாகர், லுங்கி நிகிடி, கே.எம்.ஆசிப், என்.ஜெகதீசன், கனிஷ்க் சேத், மோனு சிங், துருவ் ஷோரே, கிஷித்ஸ் சர்மா, சைதன்யா பிஷ்னோய், ஹர்பஜன் சிங்.

மோதல் விவரம்:

ஏப்.7 மும்பை, ஏப்.10 கொல்கத்தா, ஏப்.15 பஞ்சாப், ஏப்.20 ராஜஸ்தான், ஏப்.22 ஹைதராபாத், ஏப்.25 பெங்களூரு, ஏப்.28 மும்பை, ஏப்.30 டெல்லி, மே 3 கொல்கத்தா, மே 5 பெங்களூரு, மே 11 ராஜஸ்தான், மே 13 ஹைதராபாத், மே 18 டெல்லி, மே 20 பஞ்சாப்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x