Last Updated : 30 Mar, 2018 05:27 PM

 

Published : 30 Mar 2018 05:27 PM
Last Updated : 30 Mar 2018 05:27 PM

தோனியும், ஹஸ்ஸியும் ‘டிரிக்’ பொக்கிஷம்: சிஎஸ்கே வீரர் ஜெகதீசன் பெருமிதம்

தோனியிடம் விக்கெட் கீப்பிங் குறித்த ஏராளமான நுணுக்கங்களையும், ஹஸ்ஸியிடம் பேட்டிங் குறித்த டிப்ஸ்களையும் கற்று வருகிறேன் என்று சிஎஸ்கே வீரரும் தமிழரான ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த என் ஜெகதீசன் 11-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். ரூ.20லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ள ஜெகதீசன், டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், இந்த வாய்ப்பைப் பெற்றார்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கேப்டன் தோனி தலைமையில், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதனாத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

விக்கெட் கீப்பரான ஜெகதீசன் தனக்கு தோனியும், மைக் ஹஸ்ஸியும் அளிக்கும் பயிற்சி குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியும், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியும் ‘டிரிக் பொக்கிஷங்கள்’. இருவரிடமும் ஏராளமான பேட்டிங், விக்கெட் கீப்பிங் தொடர்பான நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறேன்.

அதிலும் மைக் ஹஸ்ஸியுடன் கிரிக்கெட் குறித்து பேசும்போது நமக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் தன்னை சிறந்தவர் என்று ஹசி நிரூபித்தவர். திறமையான வீரரான ஹசி பேட்டிங்கில் ஏராளமான நுணுக்கங்களை கற்றுத் தருகிறார். குறிப்பாக பந்துவீச்சாளரை நிலைகுலைய வைக்கும் வகையில் எப்படி தாக்குதல் ஆட்டத்தை கையாள வேண்டும் என்று நன்றாக கற்றுத்தருகிறார்.

விக்கெட் கீப்பிங்கைப் பொறுத்தவரை கேப்டன் எம்.எஸ்.தோனியுடன் பயிற்சி நேரங்களில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பேன். எனக்கு பல ‘டிரிக்’குகளை சொல்லிக்கொடுப்பார்.

சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது, என்னைத் தேர்வு செய்தது என்பது மிகச்சிறந்த தருணம். தமிழ்நாட்டுக்காக விளையாடிவிட்டு, இப்போது, இந்த ‘சிங்கத்துக்காக’ விளையாடுகிறேன்.

அதிலும் ‘பேட்டிங், கீப்பிங் லெஜண்ட்’ தோனியுடன் இணைந்து விளையாடுவது என்பது கிடைப்பதற்கு அரி்ய ஒருவாய்ப்பு. இவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்று வருகிறேன்.

என்னுடைய பலவீனத்தை தோனியிடம் கூறி, அதை எப்படி நிவர்த்தி செய்து கொள்வது, சூழ்நிலைக்கு ஏற்ப கீப்பிங், பேட்டிங் செய்வதை கேட்டுத் தெரிந்துகொண்டேன். எப்படி கீப்பிங் செய்ய வேண்டும், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சில் எப்படி கீப்பிங்கை வேகமாக செய்ய வேண்டும் என்பதை தோனி எனக்கு விளக்கியுள்ளார்.

இவ்வாறு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x