Published : 25 Mar 2018 11:10 AM
Last Updated : 25 Mar 2018 11:10 AM

இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் விதமாக கவுண்டி போட்டியில் விராட் கோலி: ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் புறப்படுகிறார்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கவுண்டி போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் சர்ரே கவுண்டி அணிக்காக விராட் கோலி விளையாடக்கூடும் என கருதப்படுகிறது.

இதுதொடர்பாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கவுண்டி அணியில் விராட் கோலி விளையாட உள்ளது உறுதிதான். இதுதொடர்பாக மேற்கொண்டு எதுவும் கூறமுடியாது. சர்ரே மற்றும் எசக்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கு தனிப்பட்ட முறை யில் சிறப்பாக தயாராதவற்கான பணிகளில் விராட் கோலி இறங்கி உள்ளதாக தெரிகிறது. இதனால் வரும் ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியை புறக்கணித்து விட்டு அதற்கு பதிலாக கவுண்டி ஆட்டங்களில் விராட் கோலி விளையாடக்கூடும் என கருதப்படுகிறது.

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் விராட் கோலி கவுண்டி போட்டிக்காக இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளக்கூடும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் விராட் கோலிக்கு மோசமானதாக அமைந்தது. அந்தத் தொடரில் அவரால் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் போனது. ஸ்டூவர்ட் பிராடு, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே குறிவைத்து வீசிய பந்துகளில் விராட் கோலி தனது விக்கெட்டை பலமுறை பறிகொடுத்தார்.

இதனால் இம்முறை இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலையை விரைவாக வீரர்கள் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே சேதேஷ்வர் புஜாரா, இஷாந்த் சர்மா ஆகியோர் கவுண்டி போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். முரளி விஜய், ரஹானே ஆகி யோர் தங்களது முன் தயாரிப்புகளை முடுக்கிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x