Published : 19 Mar 2018 08:17 PM
Last Updated : 19 Mar 2018 08:17 PM

தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்கமாட்டார்; சூப்பர் ஓவருக்கு தயாரானேன்- சஸ்பென்ஸ் உடைத்த ரோஹித் சர்மா

வங்கதேசத்துக்கு எதிரான டி20 முத்தரப்பு இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்கமாட்டார் என்று நினைத்து நான் சூப்பர் ஓவருக்கு தயாரானேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி மோதியது.

இதில் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் தினேஷ் கார்த்திக் ‘எக்ஸ்ட்ரா கவர்’ திசையில் அமர்க்களமாக சிக்ஸ்ர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 8 பந்துகளைச் சந்தித்த தினேஷ் கார்த்த்திக் 29 ரன்கள் சேர்த்தார். இந்திய ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு சென்ற இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் சிக்ஸர் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்டது.

ஏற்கனவே இலங்கை வீரர்களுடன் லீக் ஆட்டங்களில் வங்கதேச அணியினர் மோதல் போக்கை கடைபிடித்து சர்ச்சையில் சிக்கினர். இது மட்டுமல்லாமல் பாம்பு டான்ஸ் ஆடி இலங்கை வீரர்களை வெறுப்பேற்றினர், களத்தில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதேபோன்ற நிலைமை இந்திய அணி தோற்றால் சந்திக்க நேரிடுமோ வங்கதேசத்தின் பாம்பு டான்ஸ் ஏளனத்துக்கு ஆளாகிவிடுவார்களோ என இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் உள்மனதுக்குள் ஒருவிதமான படபடப்பு இருந்தது. இவை அனைத்தையும் தினேஷ் கார்த்திக்கின் சிக்சர் நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் என்ன செய்யப்போகிறார் என்று இந்திய வீரர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அந்த இடத்தில் ரோகித்சர்மா மட்டும் இல்லை. அப்போது எங்கு சென்றார் என்று அனைவரும் தேடினர். வெற்றிக்குபின் அது குறித்து நிருபர்கள் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் அளித்த பதில்:

தினேஷ் சந்தித்த கடைசிப் பந்தை எல்லோரும் பார்க்க ஆர்வமாக இருந்தபோது நான் மட்டும்அந்த இடத்தில் இல்லை. கடைசிப் பந்தில் எப்படியும் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்கமாட்டார் என்று நினைத்துக்கொண்டேன். அதனால், சூப்பர் ஓவர் வரும் அதற்கு நாம் தயாராக வேண்டும் என்று எண்ணினேன். இதனால், நான் ஓய்வறைக்குச் சென்று என்னுடைய கால்காப்புகளைக் கட்டுவதில் மும்முரமாக இருந்தேன்.

ஆனால், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்த செய்தி கிடைத்ததும் நான் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றேன். அவரின் உண்மையான சக்தியையும், திறமையையும் வெளிப்படுத்தியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் தினேஷ் கார்த்திக் திறமையுள்ளவர் என்று நம்பியே அவரை 7-ம் வீரராக களம் இறக்கினேன். அதை நிறைவேற்றிக்கொடுத்துவிட்டார். என் அணியின் பேட்டிங் குழுமீது எப்போதும் அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.

மிகச்சிறந்த போட்டியாக இருந்தது, ரசிகர்களும் எங்களுக்கு நாடு வித்தியாசமின்றி ஆதரவு அளித்தனர். இலங்கை அணியுடன் விளையாடும்போதுதான் ரசிகர்கள் ஆதரவு குறைந்திருந்தது. ஆனால், இந்தபோட்டிக்கு எங்களுக்கு முழு ஆதரவு அளித்தனர். அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x