Last Updated : 19 Mar, 2018 05:41 PM

 

Published : 19 Mar 2018 05:41 PM
Last Updated : 19 Mar 2018 05:41 PM

இப்படிப்பட்ட பேட்டிங் வரலாற்றில் அரிது, அதிசயம்... : தினேஷ் கார்த்திக் பாராட்டில் இணைந்த ஷாகிப் அல் ஹசன்

கொழும்புவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் திருப்புமுனை இன்னிங்ஸை ஆடி வென்றதையடுத்து அவரைப் பாராட்டுபவர்கள் வரிசையில் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இணைந்துள்ளார்.

ஆனாலும் ரூபல் ஹுசைனிடம்தான் நான் மீண்டும் பந்தை அளித்திருப்பேன், ஏனெனில் எல்லாம் திட்டப்படிதான் சென்றது, ஆனால் தினேஷ் கார்த்திக்கின் அதிசய, அரிய ஆட்டத்தினால் ரூபல் ஹுசைன் ஓவர் தவறு போல் தெரிகிறது என்று ரூபல் ஹுசைனுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்தார் ஷாகிப் அல் ஹசன்.

வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது:

“உள்ளபடியே நேர்மையாகக் கூற வேண்டுமெனில் திட்டப்படிதான் ரூபல் வீசினார். முதல் பந்திலேயே இறங்கியவுடன் சிக்ஸ் அடிக்கும் சில வீரர்கள் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. முதல் பந்தில் சிக்ஸ், அடுத்து ஒருநான்கு பிறகு மீண்டும் சிக்ஸ், இப்படி ஒருசிலரால்தான் ஆட முடியும்.

இம்மாதிரியான பேட்டிங் வரலாற்றில் அரிதானது, இது அதிசயக்கத்தக்க பேட்டிங், ஆனால் கார்த்திக் இதனைச் செய்து காட்டினார். ஆனால் முதல் 2 பந்துகளில் 10 ரன்கள் கொடுத்தவுடனேயே ரூபல் ஹுசைன் பதற்றமடைந்து விட்டார், இது இயற்கையானதே. ஆனால் இதே போன்ற சூழ்நிலை எதிர்காலத்தில் வந்தாலும் நான் ரூபல் ஹுசைனிடம்தான் பந்தை அளிப்பேன்.

தோல்விக்காக அழுது ஒரு பயனும் இல்லை. உணர்ச்சிகள் அதனுடன் தொடர்புடையதுதான், ஆனால் அதனால் என்ன செய்ய முடியும்?

காலத்தில் நாம் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது, இதே போன்ற சூழல் அடுத்து ஏற்படும் போது இன்னு சிறப்பாக ஆட முடியும் அவ்வளவே. நிறைய நெருக்கமான போட்டிகளையும் இறுதிப் போட்டிகளையும் இழந்திருக்கிறோம்

இது 5வது இறுதிப் போட்டி, அனைத்துமே நெருக்கமான போட்டிகள். இதில் மிகவும் நெருக்கமானது ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியாகும், பிறகு இந்தப் போட்டி அதைவிடவும் நெருக்கமானது. நாங்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாகவே கருதுகிறேன்.

சிறு இடைவெளி தோல்விகளைத் தவிர்க்க இனி மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவோம், இது எங்களுக்கு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்.”

இவ்வாறு டெய்லி ஸ்டார் ஊடகத்துக்கு ஷாகிப் அல் ஹசன் பேட்டியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x