Published : 17 Mar 2018 08:50 AM
Last Updated : 17 Mar 2018 08:50 AM

சுனில் நரைன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம்: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின்போது புகார்

மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் வீரர் சுனில் நரைன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின்போது இதுதொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் சுனில் நரைன். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார். இந்த நிலையில் அவர் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் போட்டியான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் லாகூர் காலேண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு லாகூர் காலேண்டர்ஸ் அணிக்கும், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் இடையே லீக் போட்டி நடைபெற்றது. போட்டியின்போது சுனில் நரைன் பந்து வீசினார். அப்போது அவரது பந்துவீச்சில் சந்தேகம் எழுந்ததையடுத்து போட்டி நடுவரிடம், அதிகாரிகள் புகார் செய்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுனில் நரைன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக போட்டி அதிகாரிகள், போட்டி நடுவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது பந்துவீச்சு குறித்து எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. இருந்தபோதும் அவர் தொடர்ந்து போட்டியில் விளையாடவும், பந்துவீசவும் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

ஆனால் ஐசிசி பவுலிங் விதி களின்படி, அவரது பந்துவீச்சு குறித்து மீண்டும் சந்தேகம் எழுந்து புகார் செய்யப்பட்டால் அவர் பந்துவீசுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார். அதேநேரத்தில் அவரது அணிக்காக அவர் பேட்டிங் செய்யலாம்” என்றார்.இதற்கு முன்பு சுனில் நரைனின் பந்துவீச்சு ஆக்ஷன் குறித்து 2015-ல் ஐபிஎல் போட்டியின்போது புகார் செய்யப்பட்டது. இதனால் அவர் பந்துவீச தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அதே ஆண்டு நவம்பரில் ஐசிசி, அவரது பந்துவீச்சை ஆய்வு செய்து பந்துவீசத் தடை விதித்தது.

ஒரு பவுலர் பந்துவீசும்போது முழங்கையானது 15 டிகிரிக்கும் மேல் வளையக்கூடாது. ஆனால் அதற்கும் மேல் சுனில் நரைனின் முழுங்கை வளைவதால் அவருக்குத் தடை விக்கப்பட்டது. இதேபோல 2014-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் போட்டியின்போதும் சுனில் நரைன் பந்துவீச்சுக்குத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் சுனில் நரைன், தனது பந்துவீச்சு ஆக்ஷனை சரி செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x