Last Updated : 13 Mar, 2018 09:45 AM

 

Published : 13 Mar 2018 09:45 AM
Last Updated : 13 Mar 2018 09:45 AM

கண்ணை மறைக்கும் ஆத்திரம்: ரபாடாவின் சாதனையும் வேதனையும்

போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வாயை அடைக்கும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்காவின் சாதனையாளர் கேகியோ ரபாடா என்றால் மிகையாகாது. 11 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

கேப்டன் ஸ்மித்தே முதல் இன்னிங்சில் ரபாடா வீசிய ஒரு ஸ்பெல்லை ‘ரியல்லி வெரி டிஃபிகல்ட் (உள்ளபடியே மிகக்கடினமானது) என்று வர்ணித்தார், எதிரணியின் கேப்டன்களில் பலர் இப்படி மனம் திறந்து இன்னொரு அணியின் வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டுவது அரிது.

28 டெஸ்ட் போட்டிகளில் 4வது முறையாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதித்துள்ளார். டேல் ஸ்டெய்ன், மகாய நிடினியை விடவும் இவர் குறைந்த வயதில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

23 வயதுக்குள்ளாகவே 4 முறை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வக்கார் யூனிஸ் சாதனையையும் சமன் செய்துள்ளார் ரபாடா. இதன் மூலம் கிளென் மெக்ரா, ஆண்டர்சன், ஆலன் டோனல்ட், வால்ஷ், ஆம்புரோஸ், ஃபிரெட் ட்ரூமேன் போன்ற மேதை வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சேர்ந்தார் ரபாடா.

கபில்தேவ் இருமுறைதான் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஷான் போலாக் ஒருமுறை கைப்பற்ற பிரெட் லீ ஒரு முறை கூட 10 விக்கெட்டுகளை ஒரு டெஸ்ட் போட்டியில் கைப்பற்றவில்லை. இந்தத் தொடருடன் ஓய்வு பெறும் மோர்னி மோர்கெல் 84 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இன்னமும் ஒரு 10 விக்கெட் பவுலிங்கை வீசியதில்லை.

தற்போது 28 டெஸ்ட் போட்டிகளில் 135 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 21.45 என்ற ஸ்ட்ரைக் ரேட் ரபாடாவின் தனித்துவமானது.

இவையெல்லாம் இவரது சாதனை, இது ஒரு புறமிருக்க அவரது ஆத்திரம் அவரது கண்களை மறைத்துள்ளது, வெள்ளைகார கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து சூடுபோட்டுக் கொள்ளும் பூனை போல நம் ஊரில் விராட் கோலி, அங்கு ரபாடா, உணர்ச்சிவயப்படுதல், அப்படிப்பட்டால்தான் கிரிக்கெட்டில் தான் இருக்கிறோம் என்ற (அசட்டு) நம்பிக்கை போன்றவை ரபாடாவையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் கோலி, ஸ்மித், வார்னர், லயன், பெரிய இடத்துப் பிள்ளைகள் அவ்வளவு சுலபத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, ரபாடா போன்றவர்கள் அப்படியா? இதை அவர் உணரவைல்லை.

இதனால்தான் ஸ்மித்தை தோளில் இடித்து ஏற்கெனவே தடையின் விளிம்பில் இருந்த ரபாடா இப்போது தடை செய்யப்பட்டுள்ளார்.

“என்னையும் என் அணியையும் தலைகுனியச் செய்து விட்டேன். இதை கற்றுக் கொள்ளும் ஒரு பாடமாக கருதுகிறேன். நான் இதனால் மகிழ்ச்சியடையவில்லை. காலம் நகரும்” என்றார் விரக்தியுடன். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் தடை பெற்றார். தற்போது இன்னொரு டெஸ்ட் தடை, இதனால் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 1992 மறுவருகைக்குப் பிறகு தங்கள் மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பு பெரும் சிக்கலாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x