Published : 13 Mar 2018 06:23 AM
Last Updated : 13 Mar 2018 06:23 AM

96/2-லிருந்து சரிந்த இலங்கை; பாண்டே, கார்த்திக் பேட்டிங்கில் இந்தியா வெற்றி

முத்தரப்பு டி20 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை இந்தியா வீழ்த்தி தொடரில் 2வது வெற்றியை ஈட்டியது.

மழை காரணமாக 19 ஒவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 10.3 ஓவர்களில் 96/2 என்ற நிலையிலிருந்து ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இலங்கை 152/9 என்று மடிந்தது. ஷர்துல் தாக்கூர் தனது வேகம் குறைந்த பந்து, மற்றும் விரல்கள் மூலம் வீசும் பந்துகளில் அசத்தினார்.

தொடர்ந்து ஆடிய இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை 17.3 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்றது, அசப்பில் சந்தீப் பாட்டீல் பேட்டிங்கை நினைவூட்டும் மணீஷ் பாண்டே 42 ரன்களையும் தினேஷ் கார்த்திக் 39 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். இலங்கை அணியில் அகிலா தனஞ்ஜயா அற்புதமாக வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுரங்க லக்மல், சமீரா, நுவான் பிரதீப், திசர பெரேரா ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர்.

இந்திய அணியில் ரிஷப் பந்த்திற்குப் பதிலாக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அதிரடியாக ஆடிய போது வாஷிங்டன் சுந்தர் மிகவும் சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 21 ரன்களையே விட்டுக்கொடுத்தார். பிற்பாடு ஷர்துல் தாக்கூர் 27 ரன்களுக்கு 4 விக்கெட் என்று தன் சிறந்த டி20 பந்துவீச்சை நிகழ்த்தினார், இலங்கை சுலபமாக 200 ரன்கள் பக்கம் வந்திருக்கலாம், இவர்கள் இருவரது பந்துவீச்சினால் மட்டுப்பட்டது.

இலங்கை இன்னிங்ஸைத் தொடங்கிய போது தனுஷ்கா குணதிலக (17 ரன்கள் 8பந்து ஒரு சிக்ஸ்) ரெய்னாவின் மிட்விக்கெட் அபார கேட்சுக்கு தாக்கூரிடம் விழ, அபாய வீரர் குசல் பெரேரா, வாஷிங்டன் சுந்தரின் பந்தை வாரிக்கொண்டு ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயல பந்து கிளவ்வில் பட்டு ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. 3 ரன்களில் வெளியேறினார் 34/2.

குசல் மெண்டிஸ் தனது அற்புதமான ஷார்ட் தேர்வு மற்றும் உத்தியினால் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 55 ரன்கள் விளாசினார், ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து நகர்ந்து லெக் திசையில் புல் ஷாட், பிளிக் என்று பின்னி எடுத்தார். தரங்கா 24 பந்துகளில் 22 ரன்களுடனும், திசர பெரேரா 6 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 15 ரன்களும் எடுத்து சிறிது அச்சுறுத்தினர்.

இலங்கை அணி 113/3 என்ற நிலையில் நன்றாகவே இருந்தது, ஆனால் இந்திய அணி 2.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பின்னடைவு ஏற்படுத்தியது. சரிவு பவுண்டரி வறட்சியை ஏற்படுத்த சுமார் 5 ஓவர்களில் பவுண்டரியே வரவில்லை. கடைசி 7 பந்துகளில் தனஞ்ஜயா, சுரங்க லக்மல் வீழ்ந்தனர். இலங்கை அணி 153 ரன்களுக்கு மட்டுப்பட்டது, 25-30 ரன்கள் குறைவாக எடுத்தது.

இந்திய அணி இலக்கை விரட்டிய போது ரோஹித் சர்மா ஒரு ராஜ சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து தனஞ்ஜயா பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று பந்து சரியாகச் சிக்கவில்லை, மெண்டிஸிடம் ஆன் திசையில் கேட்ச் ஆனது.

ஷிகர் தவணும் 8 ரன்களில் தேவையில்லாமல் நல்ல பவுலரை டார்கெட் செய்து அவுட் ஆனார். இறங்கி வந்தார், தனஞ்ஜயா பந்தை கொஞ்சம் இழுத்து விட கொடியேற்றினார் தவன்.

சுரேஷ் ரெய்னா இப்போதெல்லாம் இப்படித்தான் ஆடுவது என்று முடிவுகட்டி விட்டார் போலும் ஒதுங்கிக் கொண்டு மிட்விக்கெட்டில் ஒரு மெஜஸ்டிக் சிக்ஸ், பிறகு மீண்டும் ஒரு அவரது பேவரைட் ஆன் திசை ஷாட்டில் ஒரு சிக்ஸ் என்று 2 சிக்சர்களுடன் 2 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து மோசமாக வீசிக்கொண்டிருந்த நுவான் பிரதீப்பிடம் விக்கெட்டைத் தூக்கி எறிந்தார்.

கே.எல்.ராகுல் ரிதமில் இல்லை அவர் 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து ஜீவன் மெண்டிஸ் பந்தை பின்னால் சென்று ஆடும்போது ஸ்டம்பை மிதித்து பைல்கள் கீழே விழ ஹிட் விக்கெட் ஆனார். மணீஷ் பாண்டே இறங்கியவுடன் நுவான் பிரதீப் பந்துடன் சேர்த்து தன் கர்சீப்பையும் விட்டெறிய அதிர்ந்தார்.

85/4 என்ற நிலையில் கார்த்திக், பாண்டே நிதானம் காட்டினர், மணீஷ் பாண்டே பின்னால் சென்று பஞ்ச், கட் செய்யும் போதும், டிரைவ் ஆடும் போதும் லெக் திசையில் பெரிய ஷாட்டை ஆடும்போதும் சந்தீப் பாட்டீலை பார்ப்பது போலவே இருந்தது.

தினேஷ் கார்த்திக் மீண்டும் அப்பழுக்கில்லாத அருமையான ஆட்டம், 25 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களை அவர் எடுக்க, பாண்டே 31 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 42 நாட் அவுட். 17.3 ஓவர்களில் 153/4 என்று இந்தியா வெற்றி. ஆட்ட நாயகன் ஷர்துல் தாக்கூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x