Last Updated : 12 Mar, 2018 09:42 AM

 

Published : 12 Mar 2018 09:42 AM
Last Updated : 12 Mar 2018 09:42 AM

3 நாடுகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர்: இந்தியா - இலங்கை இன்று மோதல்

3 நாடுகளுக்கு இடையிலான டி 20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதவுள்ளன.

இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை பங்கேற்கும் 3 நாடுகள் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவை இலங்கை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா வென்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேச அணிகள் மோதின. முத லில் ஆடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. குசால் மெண் டிஸ் 57, குசால் பெரேரா 74, உபுல் தரங்கா 32 ரன்கள் குவித்தனர். இதையடுத்து சிறப்பாக ஆடிய வங்கதேசம் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

முஷ்பிகுர் ரஹிம் 35 பந்துகளில் 72 ரன்களை அதிரடியாக குவித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இதன் மூலம் 3 அணிகளும் தலா 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியைக் கண்டுள்ளன. நிகர ரன் விகித அடிப்படையில் இலங்கை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2-ம் இடத்தில் இந்தியாவும், 3-ம் இடத்தில் வங்க தேசமும் உள்ளன. இந்த நிலையில்தான் கொழும்புவில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும்.

முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்றதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி தர காத்திருக்கிறது இந்திய அணி. அதேபோல இந்த ஆட்டத்தில் வெற்றி பெற இலங்கையும் தீவிர முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண் (துணை கேப்டன்), ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், அக்ஸர் பட்டேல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ். ரிஷப் பந்த்.

இலங்கை: சந்திமால் (கேப்டன்), சுரங்கா லக்மல் (துணை கேப்டன்), தரங்கா, தனுஷ்கா குணதிலகா, குசால் மெண்டிஸ், தசுன் ஷனகா, குசால் பெரேரா, திசரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதனா, அகிலா தனஞ்செயா, அமிலா அபோன்சா, நுவான் பிரதீப், துஷ்மந்த சமீரா, தனஞ்செய டி சில்வா. -

சந்திமாலுக்கு 2 போட்டிகளில் தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் 2 போட்டிகளில் விளையாடுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

3 நாடுகள் டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் இலங்கை வீரர்கள் ஓவர்களை வீசி முடிக்காததால் அவருக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராட் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்தியா, வங்கதேசத்துடன் அடுத்த நடைபெறவுள்ள டி20 ஆட்டங்களில் சந்திமால் பங்கேற்க முடியாது. மேலும் இலங்கை அணி வீரர்கள் போட்டிக்கான ஊதியத்திலிருந்து 60 சதவீதத்தை அபராதமாக செலுத்தவேண்டும் என்றும் கிறிஸ் பிராட் உத்தரவிட்டார்.

நேரம்: இரவு 7 மணி.

நேரடி ஒளிபரப்பு: டி ஸ்போர்ட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x