Published : 21 Feb 2018 03:04 PM
Last Updated : 21 Feb 2018 03:04 PM

பாகிஸ்தானுக்கு ஆடினால் காலைத்தான் வாரிவிடுவார்கள்: ஆஸி.க்குச் சென்ற ஸ்பின் லெஜண்ட் அப்துல் காதிர் மகன்

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ள ‘அரசியல், ஊழல்’ காரணமாக முன்னாள் லெக் ஸ்பின் ‘லெஜண்ட்’ அப்துல் காதிர் மகன் உஸ்மான் காதிர் ஆஸ்திரேலியாவுக்கு ஆடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

24 வயது உஸ்மான் காதிரும் தந்தை வழியில் தயாரான ஒரு லெக் ஸ்பின்னர்தான். தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளக் கணக்கில் ஆஸி.ஜெர்சி போன்ற ஒன்றை அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

2020-ல் நடைபெறும் உலக டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் உஸ்மான் காதிர்.

ஆனால் இவரது இந்த முடிவுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் ஏற்கெனவே ‘துரோகி’ கோஷமிடத்தொடங்கி விட்டனர்.

இளம் லெக்ஸ்பின்னரான உஸ்மான் காதிர் தற்போது சிட்னியில் ஹாக்ஸ்பரி கிரிக்கெட் கிளப்புக்கு ஆடிவருகிறார். கிரேட் ஏ லீகில் ஆடுகிறார் உஸ்மான் காதிர். இதில் 9 போட்டிகளில் 30 விக்கெட்டுகள் என்பதோடு 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனையடுத்து ஜெஃப் லாசன், ஜஸ்டின் லாங்கர் இவரை புகழ்ந்துள்ளனர். ஜஸ்டின் லாங்கர் ஒருபடி மேலே சென்று பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியுடன் பயிற்சி செய்ய இவரை அழைத்தார். அடுத்த பிபிஎல் டி20 தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக ஆடவும் உஸ்மான் காதிரை ஜஸ்டின் லாங்கர் அழைத்துள்ளார். ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டித் தொடரில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு ஆடும் வாய்ப்பையும் எதிர்நோக்குகிறார்.

“பிபிஎல் ஆட வேண்டுமெனில் நான் எனது வீசா பிரச்சினையை முதலில் தீர்க்க வேண்டும். மேற்கு ஆஸ்திரேலியா அணிக்காக ஆட விரும்புகிறேன். தனிச்சிறப்பான திறன் பிரிவில் வீசா மற்றும் நிரந்தரக் குடியுரிமைக்காகவும் விண்ணப்பித்துள்ளதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குத் தெரிவித்தார் உஸ்மான் காதிர்.

2012 அண்டர்-19 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்காக ஆடியவர் உஸ்மான் காதிர். உடனடியாக அடிலெய்ட் கிரிக்கெட் கிளப் இவரை அழைக்க அங்கு போட்டிகளில் ஆடி 7 ஆட்டங்களில் 43 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளில் நிரந்தரக் குடியுரிமை பெற்று ஆஸ்திரேலியாவுக்காகவே ஆடுவேன் என்கிறார் இவர்.

ஆனால் தந்தை அப்துல் காதிர் இவரை பாகிஸ்தானுக்குத்தான் ஆட வேண்டுமென்று வலியுறுத்தினார், ஆனால் அவர் பேச்சு எடுபடவில்லை. இது உஸ்மானும் அவரது மூத்த சகோதரர் சுலைமானும் எடுத்த முடிவு என்கிறார் அப்துல் காதிர். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அரசியலும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது.

யுஏஇயில் நடந்த முதல் தர கிரிக்கெட்டில் நடந்த விஷயம் பற்றி உஸ்மான் கூறும்போது, “நான் ஏ.பி.டிவில்லியர்ஸையும், ராபின் பீட்டர்சனையும் வீழ்த்தினேன். ஆனால் உடனேயே என்னை வீட்டுக்கு அனுப்பி விட்டனர், யாசிர் ஷா ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை அவருக்கு முதலுரிமை அளித்தனர், உலகில் எங்கு கிரிக்கெட் ஆடி நன்றாக செயல்பட்டாலும் நம்மை உடனடியாகக் கவனிப்பார்கள், ஆனால் பாகிஸ்தானில் நன்றாக ஆடினாலும் உங்கள் காலைத்தான் வாரிவிடுவார்கள். இனி பாகிஸ்தானுக்கு ஆடும் வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன். தந்தை என்னை வற்புறுத்தினால் நான் கேட்கப்போவதில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x