Published : 20 Feb 2018 07:43 PM
Last Updated : 20 Feb 2018 07:43 PM

விவ் ரிச்சர்ட்ஸுக்கு மட்டுமே உரித்தான சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

கிரிக்கெட்டின் பல சாதனைகளை முறியடித்து வரும் விராட் கோலி, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப்புள்ளிகளில் 900 புள்ளிகளைக் கடந்து சாதித்தது ஒருபுறம் இருக்க, மாஸ்டர் பிளாஸ்டர் விவ் ரிச்சர்ட்ஸ் வைத்திருக்கும் ஒரே சாதனையையும் விராட் கோலி முறியடிக்க தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது கோலி இன்னும் 130 ரன்களை எடுத்தால் ஒரே தொடரில் ஒட்டுமொத்தமாக 1,000 ரன்கள் மைல்கல்லை எட்டும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். இந்தச் சாதனையை கோலி நிகழ்த்தினார் என்றால் சர்வதேச கிரிக்கெட்டில் இதனை நிகழ்த்தும் 2வது வீரர் என்ற பெருமையை எட்டுவார்.

டெஸ்ட் தொடரில் 286 ரன்களையும் ஒருநாள் தொடரில் 558 ரன்களையும் எடுத்துள்ள விராட் கோலி டி20 போட்டியில் 26 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா தொடரில் இதுவரை 870 ரன்களைக் குவித்துள்ளார்.

மே.இ.தீவுகள் முன்னாள் அதிரடி மன்னன் விவ் ரிச்சர்ட்ஸ்தான் இதற்கு முன்னர் 1045 ரன்களை இங்கிலாந்துக்கு எதிரான ஒரே தொடரில் 1976-ம் ஆண்டில் எடுத்து சாதித்துள்ளார். இதில் ஒருநாள் தொடரில் விவ் ரிச்சர்ட்ஸ் 216 ரன்களையும் டெஸ்ட் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 829 ரன்களையும் குவித்து சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

டான் பிராட்மேன் இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்ட போது ஒரே தொடரில் 974 ரன்களைக் குவித்திருக்கிறார். அப்போது ஒருநாள் போட்டி என்ற கருத்தாக்கமே கிடையாது என்பதால் அவரால் 1000 ரன்கள் மைல்கல்லை எட்ட முடியவில்லை.

இந்தியாவில் சுனில் கவாஸ்கர் மே.இ.தீவுகளுக்கு எதிராக தன் அறிமுகத் தொடரிலேயே 4 டெஸ்ட் போட்டிகளில் 774 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் கோலி இந்த மைல்கல்லை எட்ட வாய்ப்பு உருவாகியுள்ளது, நாளை 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x