Published : 20 Feb 2018 09:05 AM
Last Updated : 20 Feb 2018 09:05 AM

மீள்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்: தென் ஆப்பிரிக்க கேப்டன் ஜேபி டுமினி கருத்து

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் மோசமாக அமைந்தது. அதிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் வீழ்ச்சி கண்டிருந்தனர். இந்நிலையில் தென் ஆப்பிக்க அணியின் தோல்வி தருணங்கள் தற்போது டி 20 தொடருக்கும் வியாபிக்கத் தொடங்கி உள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணியிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி கண்டது. இந்த ஆட்டம் முடிவடைந்ததும் அந்த அணியின் கேப்டன் ஜேபி டுமினி கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிரான குறுகிய வடிவிலான தொடரில் துரதிருஷ்டவசமாக எங்களது பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கு வீரர்கள் மற்றும் சீனியர் பேட்ஸ்மேன்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். கண்ணாடியின் முன் நின்று கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும், எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என தங்களுக்கு தானே வீரர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். அடுத்த ஆட்டத்தில் முன்னேற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

களத்தில் நாங்கள் நினைத்தபடியான திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியாமல் போனது. எங்களது திட்டங்கள் நல்லது என்று இன்னும் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் குறுகிய வடிவிலான போட்டிகளில் அவற்றை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். துரதிருஷ்டவசமாக சில வாய்ப்புகளை தவறவிட்டோம். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் வலுவாக மீண்டு வருவோம். இதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. ஹென்ட்ரிக்ஸ், பெகார்தின் ஆகியோர் தங்களது பேட்டிங்கால் சிறந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்தனர். இந்த நேர்மறை விஷயங்களை அடுத்த ஆட்டத்துக்கு கொண்டு செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சையும் நாம் பார்க்க வேண்டும். அவர் கைப்பற்றிய முதல் 3 விக்கெட்கள் மெதுவாக வீசப்பட்ட பந்துகளில் கிடைத்தவையாகும். திறமை வாய்ந்த பந்து வீச்சாளரான அவர், இந்த வடிவிலான போட்டியில் அவர் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். அடுத்த ஆட்டத்தில் மீண்டு வருவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். இந்த மட்டத்தில் நீங்கள் செய்யக்கூடியது இதுதான். மறைவதற்கு இடங்கள் இல்லை, முன்னால் வந்துதான் ஆக வேண்டும். இவ்வாறு டுமினி கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x